ஸ்ரீ வாராஹி மாலை
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே. (1)
பதவுரை:
இரு குழை=இரண்டு காதணிகள்
கோமளம்=அழகிய -வைடூர்ய ரத்தின கற்களைப் போன்று ஒளிரும்;
தாள்=பாதங்கள்
புட்பராகம்= புஷ்பராகம் எனும் ரத்தினகற்களைப்போன்று ஒளிரும்; இரண்டு கண்ணும்
குருமணி நீலம்= இரு விழியும் சிறந்த சுடருள்ள நீலகற்களைப் போன்று ஒளிரும்;
கை கோமேதகம் = கைகள் கோமேதக ரத்தின கற்களைப் போன்று ஒளிரும்;
நகம் கூர் வயிரம்= கூர்மையான நகங்கள் வைர கற்களைப் போன்று ஒளிரும்;
திரு நகை முத்து= அழகிய புன்சிரிப்பால் காணபெறும் பற்கள் முத்துக்கள் போன்று வெண்மையுடன் ஒளிரும்;
கனிவாய் பவளம் = கனிபோன்ற உதடுகள் (கோவைப் பழத்திற்க்கொப்பான) பவழம்போன்று செந்நிறத்துடன் ஒளிரும்;
சிறந்த வல்லி= மிகுந்த சிறப்புடைய இளம்பெண்;
மரகத நாமமும் = உலகில் ப்ரஸித்தமான பச்சைநிறத்துடன் பார்வதி தேவியாகவும் ;
திருமேனியும் பச்சை= தளிர் போன்ற உடலும்;
மாணிக்கமே = சாதுரங்கம், குருவிந்தம், சௌகந்திகம், கோவாங்கம் என்ற நான்கு பகுப்பினையுடையதுமான செந்நிறமுள்ள மிகவும் அரிதான மாணிக்கல் போன்றவளே – வராகியம்மையே
பொருள்: நவரத்தினம் அனைத்தும் வராகி அன்னையின் உடலுக்கு ஒப்பிட்டு கூறப்படுகிறது. செவிகள்= வைடூர்யம்(1); திருவடிகள்=புஷ்பராகம்(2); கண்கள் நீலகல்(3); கரங்கள்= கோமேதகம்(4); நகம் =வைரம்(5); பற்கள் -முத்து(6); இதழ்=பவளம்(7); திருமேனி(உடல்) = மரகதம்(8) மாணிக்கம் (9)= அரிதான அம்மை குழை என்பது ஆண்கள் அணியும் காதணி, இதனால் வராகியம்மை வீரம், மிடுக்கு போன்ற ஆண் தன்மையுடையவள் எனக்குறிக்கின்றார். அரிதான மாணிக்கல் போன்றவளே என்றதில் மாணிக்கம் ஸூர்யனுடைய மணியாம்,
பாவனோபனிஷதத்தில் வாராஹீ பித்ருரூபா- என காணலாம், ஸூர்யனோ பித்ருகாரகன், ஸ்தூல உடலையும் குறிக்கும். இதனால் வராகியம்மையின் ஆண் தன்மை, தனித்துவம், வீரம், முதலியன காணலாம். காதுகள் சப்தத்தை அறியும் இந்திரியம், வைடூர்யம் கேதுக்குறிய மணி, கேதுவோ ஞானகாரகன். எனவே உபதேஶ மந்திரத்தை அறிவிப்பதாக கூறலாம். கேதுகிரகத்தின் அதிதேவதை கணபதி, முதலில் கணபதியை வணங்குதலும் குறிக்கும், காதுகளில் கணபதியை கூறுதல் – அவ்வடிவிலுள்ள முறம் போன்ற காது- ‘ஶூர்பகர்ணர்’. அடுத்து, தாள்களின் மணி புஷ்பராகம் குருவின் மணியாம், எனவே இது குருவின் அடையாளமாக உள்ள பாத்தையும் , உபதேஶ க்ரமத்தில் குருபாதுகையும் கூறுவதாக கொள்ளலாம். ஆக முதலில் கணபதியையும் பின் குருவையும் வணங்குதல் போன்று அமைந்துள்ளது. மேலும் கண்கள் நீலக்கற்களாய் சனீச்சுவரரை குறித்த மணியாம். சனிபகவானோ வேண்டிய அறிவை அனுபவத்தில் காட்டியருளுகின்றார். இதுவே ஸாதனையை குருவின் மூலம் அறிவித்தலாம் – “தொட்டு காட்டாத வித்தை அறிய முடியாது”. அடுத்து வரும் கைகள், இந்த ஸாதனையை பயிலுதலாம். மீண்டும் முன்கூறியவற்றை ஒன்று சேர்த்து பார்ப்பதில்- காதுகள் – உபதேஶதீக்ஷையும், திருவடி-ஶாம்பவ தீக்ஷையும், கண்கள்-சாக்த தீக்ஷையும், கைகள்- பீடாரோஹண பூஜா க்ரியைகளையும் குறித்ததாய் கொள்ளலாம். கைகளின் நுனியில் நகங்கள் உள்ளன, இவைகளை வைரங்களாம், வைரம் ஶுக்ரனுடைய மணி, ஆக, ஸாதனையாம் பூஜையின் இறுதியில பெறும் ஆனந்த அனுபவமாய் கொள்ளலம்- வைரம் போன்று மிக உறுதியாக உள்ளதை குறித்தது. இதன் வெளிப்பாடு முகத்தில் தோன்றும் புன்னகையாம், இது முத்தாக குறித்தது, முத்து சந்திரனுடைய மணி, சந்திரம் மனத்தை குறிப்பவன்- “சந்த்ரமா மனஸோ ஜாத”- வேதம்; பற்கள் முப்பத்திரண்டு- ஸுத்தவித்யா தத்துவம்- காணும் இப்ப்ரபஞ்சம் ப்ரஹ்மமே என உணர்தல். கனிவாய்- அழகிய பேச்சு, பவளம்- செந்நிறம் – அன்பை, கருணையை குறிக்கும், இவ்வாறாக பெற்ற அனுபவத்தை தக்க பக்குவமுடையோற்கு உபதேஶித்தலாம். இவ்வாறான சிறந்த பாதையை காட்டியருளும் வராகியம்மை, பச்சைநிறமாய் ஒளிர்கின்றாள்- பச்சை இவ்வுலகு வாழவழி செய்யும் இலை, தழைகளின் மூலம் உணவாகவும், காத்தல் என்ற செயல் புரியும் விஷ்ணு மூர்த்தியாகவும் விளங்குகிறாள்.
மந்திர விளக்கம்-
(1) காதுகள் சப்ததை உணரும் இந்த்ரியம், சப்தமோ ஆகாசபூதத்தின் தன்மாத்திரை எனவே – ‘ஹ’ என்ற அக்ஷரத்தை ரூடியாய் குறிக்கும். தாள்கள் – பாத தத்துவம்- கர்மேந்திரியத்தில் மூன்றாவது- மூன்றாவதான பூதம் அக்னி – ‘ர’ என்ற அக்ஷரத்தை ரூடியாய் குறிக்கும், கண்கள்- மாத்ருகா நியாஸம் செய்யும் போது ‘ஈ’ என்ற அக்ஷரத்தை ரூடியாய் குறிக்கும்; இவ்வக்ஷரங்களை ஒன்றாக்கினால்- புவனேஶ்வரீ பீஜமாம் – ‘ஹ்ரீம்’ காணலாம்.
(2) தாள்கள் – பாத தத்துவம்- குருநாமம் உடைய பாதுகா மந்திரத்தையும் குறிக்கலாம்
(3) கண்கள்- மாத்ருகாநியாஸம் செய்யும் போது ‘ஈ’ என்ற அக்ஷரத்தை ரூடியாய் குறிக்கும் காமகலா பீஜம் – ஈம்.
(4) பற்கள்- இரண்டு பதினாறு- ஷோடசீ மந்த்ரத்தை குறிக்கும்
இரகசிய விளக்கம்:
இப்பாடலில் எல்லாம் இரண்டிரண்டாக தோன்றுகின்றது
காதுகள் – இரண்டு; தாள்கள்- இரண்டு; கண்கள்- இரண்டு; கைகள்- இரண்டு; நகங்கள்- இரண்டு கூட்டமாய் பத்து; பற்கள்- இரண்டு கூட்டமாக பதினாறு; உதடுகள்- இரண்டு; குழை/வல்லி- ஆண் /பெண் என இரண்டு உருவம்.
அண்டத்திலுள்ளது பிண்டத்தில் என வழக்கின்படி- இப்ப்ரபஞ்சமே சிவசக்தியால் உள்ளது எனும் தாந்தரீக கோட்பட்டை நமக்கு மறைமுகமாக சுட்டிகாட்டுகின்றார் ஶ்ரீவீரை கவிராஜர்.
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டது
ஈராறிதழ் இட்டு, ரீங்காரம் உள்ளிட்டது நடுவே
ஆராதனை செய்து அருச்சித்து பூஜித்தடிபணிந்தால்
வாராது இராள் அல்லவே வாலை ஞான வாராகியுமே (2)
பொருள்:
தோராத வட்டம் = முடிவில்லா-எல்லைமிகுந்த-அளக்கமுடியாத- வட்டம், எனவே புள்ளி எனும் பிந்துவை குறித்தது;
முக்கோணம் = மூன்று கோணம்;
ஷட்கோணம்= அறுகோணம் ;
துலங்கு வட்டது= இதை சுற்றி ஒளிரும் வட்டம்;
ஈராறிதழ் = இரண்டு+ஆறு- எட்டிதழ் ;
இட்டு= வரைந்து,
ரீங்காரம் உள்ளிட்டது நடுவே= பிந்துவில் ‘ஹ்ரீம்’ என்று எழுதி;
ஆராதனை செய்து= ஆவாஹனதி பூஜா உபசாரங்களை செய்து;
அருச்சித்து பூஜித்து = பூக்களால் நாமார்ச்சனைகள் செய்து ;
அடிபணிந்தால்= பூஜைகளின் கடைசியில் ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்தால்;
வாராது இராள் அல்லவே = அப்பூஜைக்கும் அவ்விடத்தில் ஸான்னித்தியம் கொள்ளாமல் இருப்பவள் அல்ல- அதாவது நிச்சயமாக அவ்விடம் வருவாள் ;
வாலை ஞான வாராகியுமே= அனுபவம் என்னும் அறிவை உணர்த்தும் விளையாடும் சிறு பெண்ணாக வாராகியம்மை.
முதல் பாடலின் விரிவாக்கமாக இப்பாடலில் பூசிக்கும் யந்த்ரத்தையும் அதன் முறைகளையும் கூறுகின்றார்
வாராகி யந்திர வடிவம் இது. பிந்து-முக்கோணம்-அறுகோணம்-வட்டம்- சுற்றிலும் எட்டிதழ் தாமரை. இது தந்த்ரராஜ தந்த்ரம் எனும் நூலில் காணலாம். மத்தியில் ‘ஹ்ரீம்’ என்ற பீஜம், இதை முறையாக எழுதி. குருவினால் காட்டி கொடுக்கபட்ட பூஜா முறைகளால் வாராகியை வழிபட, அடிபணிந்து- என்பதில் ஆவரணபூஜைகளின் – ‘ஶ்ரீ’பாதுகாம் பூஜயாமி நம:’ என்ற க்ரமத்தை மறைமுகமாய் சுட்டுகின்றார். ‘வாலை’ திரிபுரசுந்தரியாக கூறியது, தீக்ஷாக்ரமத்தில் முதலில் உபதேஶிக்கும் மந்த்ரத்தை, அதுவே ஞான வேட்கைக்கு வித்தாம் என சுட்டுகின்றார்.
மந்திர விளக்கம்-
(1) பிந்து ‘ஹ்ரீம்’ என்ற பீஜம்
(2) முக்கோணம் – மூன்று பீஜங்களையுடைய பாலா மந்த்ரம் – ஐம் க்லீம் ஸௌ:
(3) அறுகோணம்-ஆறு அக்ஷரங்களுடைய வாராகி-லகு வாராஹி- லூம் வாராஹி லும்
(4) எட்டிதழ்- வாராகி வைணவாம்ஶம் உடையதால் அஷ்டாக்ஷரம் – ஓம் நமோ நாராயணாய
இரகசிய விளக்கம்:
இப்பாடலிலும் எல்லாம் இரண்டிரண்டாக தோன்றுகின்றது.
பிந்துவும் த்ரிகோணமும் என இரண்டும் சிவ சக்திகளின் அடையாளம்; அறுகோணம்- இரு முக்கோணங்கள்- மேல் நோக்கிய முக்கோணம் சிவத்தையும் கீழ் நோக்கிய த்ரிகோணம் சக்தியையும் குறிக்கும்; வட்டமும், எட்டிதழ்களும் என இரண்டும் – வட்டம் அளப்பறிய இப்ப்ரபஞ்சத்தையும் அதனால் சிவ தத்துவத்தையும், எட்டிதழ், காணப்பெறும் எண்திசைகளுள்ள அனுபவிக்கும் ப்ரபஞ்சமாம் சக்தியையும் குறிக்கும்.
இந்த யந்த்ரம் ப்ரபஞ்சத்தையே குறிக்கின்றதாம், பிந்து- ஆகாஶம், முக்கோணம்- வாயு, அறுகோணம்- அக்னி, வட்டம் – நீர் (ஜல); எட்டிதழ்- பூமி. ஆக ஐந்து பூதங்களாலான ப்ரபஞ்சத்தை இதில் காணலாம், மீண்டும் அண்டத்திலுள்ளது பிண்டத்தில் என வழக்கின்படி- இப்ப்ரபஞ்சமே சிவ சக்தியால் உள்ளது எனும் தாந்தரீக கோட்பட்டை நமக்கு மறைமுகமாக சுட்டிகாட்டுகின்றார் ஶ்ரீவீரை கவிராஜர்.
மெய்சிறந்தார் பணியார் மனம்காயம் மிக வெகுண்டு
கை சிரத்து ஏந்திப் பல்லால் நிணம் நாறக் கடித்து உதறி
வச்சிரத் தந்த முகபணியால் குத்தி வாய் கடித்து
பச்சிரத்தம் குடிப்பாளே வாராகி பகைஞரையே. (3)
பொருள்:
மெய்= உண்மை தத்துவம் ;
சிறந்தார்= உணர்ந்து அனுபவித்தவர்கள் (அல்லது மெய்= உடல்;
சிறந்தார்=நல்ல நிலையில் உள்ளவர்கள்) இதனால் அறிவிப்பவது வராகியம்மையின் வழிபாடு ஸாதனைக்குறிய நல்ல மனத்தையும் உடம்பைத்தரும்- எனவே அடியார்கள் எனபொருள்;
பணியார்= வராகியம்மையை பணியாதவர்கள் (இந்த ஸாதனையை செய்யாத வர்களும்) மற்றும் இதை மேலும் தூஷிப்பவர்களும்;
மனம் காயம் = (இவர்களால்) மனதிலோ உடலிலோ காயம் ஏற்பட்டால் (வள்ளுவர்-ஆறாதே நாவினால் சுட்ட வடு);
மிக வெகுண்டு=மிகவும் கோபம் கொண்டு;
கை சிரத்து ஏந்தி =(அவர்களுடைய) சிரத்தை (வாளால் அறுத்து) கைகளில் ஏந்தி;
பல்லால் நிணம் நாறக் கடித்து உதறி =பற்களால்…
பச்சிரத்தம் குடிப்பாளே = அப்போழ்து பெருகும் இரத்தத்தை குடிப்பாள்; வாராகி = வராகியம்மை;
பகைஞரையே= இப்பகைவர்களின் (உயிரையே).
எவ்வடிவிலும் தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் வராகியம்மை. அதுவும் தூயவர்களை-அவளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை தீயவர்கள் மனத்தினாலோ உடலாலோ துன்புறுத்தினால் அன்னை மிகுந்த கோபம் கொள்கிறாள். அந்த பகைவர் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். அவர்கள் மட்டுமல்ல, உண்மையான பக்தியின்றி பாசாங்கு செய்து பணிபவர்களும் இந்த தண்டனை உண்டு. பகைவர்களின் தலையை தன் கைகளிலுள்ள கத்தியால் வெட்டி, தனது காட்டு பன்றி முகத்திலுள்ள கோரமான துருத்தி நிற்கும் பற்களால் உடலைக் கிழிக்கும்படி கடித்து, குருதி குடிப்பாள். எனவே வாராகி வழிபாடு, அவளை வழிபடுகின்றவர்களை துன்புறுத்துதல் முதலியன விளையாட்டல்ல என உணர்த்துகின்றார் ஶ்ரீவீரை கவிராஜர்.
மந்திர விளக்கம்-
பணியார்= பரசுராம கல்பசூத்திரத்தில் இத்தேவியின் மூலமந்த்ரம் 112 அக்ஷரங்களைக் கொண்டுள்ளது. இதில் = ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் – என்ற பதம் இச்சொல்லின் மேற்க்கூறிய பொருளாய் காணலாம்.
கை சிரத்து ஏந்தி= மேற்கூறிய மந்த்ரத்தில் வரும், “மோஹே மோஹினி நம:” – தலை என்னும் மமதை, மோஹத்தை நீக்குபவளாம் வராகியம்மையின் அருளை குறித்ததாய்கொள்ளலாம்.
வச்சிரத்தந்த முகபணியால்= மேற்கூறிய மந்த்ரத்தில் வரும், ” “வராஹமுகி” என்னும் சொற்றொடர்.
இரகசிய விளக்கம்:
இப்பாடலிலும் எல்லாம் இரண்டிரண்டாக தோன்றுகின்றது. இரு கைகள்- கத்தி, வெட்டுண்ட தலை; பற்கள் = காட்டு பன்றி உருவத்திலுள்ள் துருத்தி நிற்கும் இரு கோரை பற்கள்; மெய்சிறந்தார் – உடல் மனம் என இருவகை சிறந்தவர்கள்; பணியார்- இந்த பாதையில் வராதார், இதை தூஷிப்பவர் என இரு வகை. ஆக எல்லாமே சிவசக்தி மயமாய் காண தூண்டுகிறார் கவிராஜர்.
படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்பு தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலையிட்டு குலாவிமன்றில்
நடிக்கும் வாராகி பதினாலு உலகம் நடுங்கிடவே (4)
பொருள்:
பஞ்சமி = மாத்ருகைகளில் ஐந்தாவதானவள் (1-ப்ராஹ்மீ; 2-மஹேஶ்வரீ; 3-கௌமாரீ; 4- வைஷ்ணவீ; 5-வராகீ), ஐந்தாவது தொழிலான அனுக்ரஹம் (1-படைத்தல்; 2-காத்தல்; 3-அழித்தல்; 4-மறைத்தல்; 5-அருளுதல்) செய்யும் ஸதாஶிவனின் ஶக்தியுமாம்;
பெரும்புகழ்= இத்தேவியின் புகழை, பெருமைகளை , கருணா விலாசத்தை, வீரத்தை;
படிக்கும் அன்பர்= ஸஹஸ்ர நாமம், அஷ்டகம், கத்யம் முதலியன வாய்விட்டு கூறும் வராகியம்மையிடம் அன்பு பூண்டவர்கள்;
பகைஞர்தமை= (இவ்வன்பர்களிடம்) பகைமை கொள்பவர்களை; பேய்கள்= இத்தேவி பேய்கள் போன்று மிகுந்த ஆவேசம் கொண்டு;
இரும்பு தடிகொண்டு அடிக்கும் = இரும்பினாலான தடி கொண்டு அடிக்கும், தேவியின் த்யானத்தில் உலக்கை உண்டு- இரும்பு தடி என்பதினால் யமனைக் குறித்தது- உயிர் பறிக்கும் சக்தி எனவும் கொள்ளலாம்;
அவர் குருதி குடிக்கும் = இவ்வாறு அடிபட்டவர்களின் உடலிருந்து புகும் இரத்ததை குடித்து (முன் பாடலிலும் இதை காணலாம்);
குடர்கொண்டு தோள்மாலையிட்டு= அப்பகைவர்களின் குடலை உருவி மாலை போன்று கழுத்தினில் அணிந்து;
குலாவி மன்றில்= (அன்பர் தம் வீட்டு) வாயில் முற்றத்தில் விளங்கிவாள்- ஸப்த மாத்ருக்களில் ஒருவளான நாரஸிம்ஹியை போன்று- இரணியகசிபுவின் குடலை முற்றத்தில் உருவினாற்போலே;
பதினாலு உலகம் நடுங்கிடவே = இக்கட்சிகளால் ஈரேழு உலகங்களும் பயந்து நடுங்கிகுமாம்; நடிக்கும்
வாராகி= வராகியம்மை ஆனந்த ரூபிணியாயினும், இவ்வாறாக கோபத்தை வெளிக்காட்டுதல் நடித்தல் என்கிறார்.
மந்திர விளக்கம்-
(1) பஞ்சமி =லலிதோபாக்யானத்தில் ஶ்ரீலலிதாம்பிகையின் சேனைத்தலைவியாய் விளங்கும் இத்தேவி, பண்டாஸுர சேனைகளை அழிக்க தனது கிரிசக்ரத்தில் புறப்பட்டவுடன், தேவர்களாலும் ருஷிகளாலும் பன்னிரு நாமங்களால் வாழ்த்தபெற்றாள், அதில் முதல் நாமம் – பஞ்சமி
(2) இரும்பு தடிகொண்டு அடிக்கும்= இரும்பு தடியை தண்டம் என்பர், இத்தேவியியை துதித்த அடுத்த திருநாமம் “தண்டநாதா”. லலிதோபாக்யானத்தில் இத்தேவி, பண்டாஸுர சேனைத்தலைவனான விஷங்கனை தனது உலக்கையால் தலையிலடித்து கொன்றாள் என காண்கிறோம்
(3) நடிக்கும் = நடித்தல் என்பது உள் உணர்ச்சிகளை மறைத்தை குறிக்கும், இதை குறியீடு எனக்கொண்டால், இத்தேவியியை துதித்த அடுத்த திருநாமம் “ஸங்கேதா”.
(4) வாராகி- இத்தேவியியை துதித்த அடுத்த திருநாமம் “வாராகி”.
(5) பதினாலு= புவனங்களை குறித்ததால் புனவேஶ்வரீ பீஜமான ‘ஹ்ரீம்’ குறிக்கபெற்றது
இரகசிய விளக்கம்:
வராகியம்மையின் பக்தர்கள், இன்னலுகளுக்கு ஆளானால் அதற்கு காரணமானவர் பெறும் தண்டனை கடுமையானது. தேவியின் தண்டம் (தடி) அவர்களை அடித்து தும்சம் செய்யும், அவர்கள் வயிறு கிழித்து குடல் மாலை உருவப்பெறும். பக்தரை காக்கும் பேரரணாக தனது ஸைன்யத்துடன் வருவாள் தேவி என்று ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தின் பல சுருதியிலும், இவ்வாறாக பகைவர்களை அழிப்பாள் என காணலாம்.
நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாராக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹி நீலி தொழில் இதுவே. (5)
பொருள்:
நடுங்கா வகைஅன்பர்= பரசுராம கல்பசூத்ரவழி பூஜைகள் செய்ய மிகுந்த மனபலம் தேவை, அது இப்பாதை சரியானதே என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் இடைவிடா முயற்சியும் வேண்டும், இவர்கள் மனம் தேவியைத்தவிற வேறு சிந்தனைகள் இருக்காது- வீரர்கள் எனப்படுவர்;
நெஞ்சினிற்புக்கு=பூஜைகளின் பகுதியான அந்தர்யாகத்தில் அவர்களின் மனத்தில் புகுந்து இருந்து;
அவர் நண்ணலரைக்=அவர்களுக்கு துன்பங்களை செய்ய மேற்படும்;
குருதிகள் உண்ணக் கொடுக்கும்= இரத்ததை உண்ண (குடிக்க) செய்யும்;
கொடும்காளி= காணக்கொடும் இச்செயலைச்செய்யும் காளியாக மாறி, அவ்வாறு செய்து;
கொப்பளித்திட்டிடும் பாராக்கொங்கையின் மீதே= அவ்வாறு குடிக்கும் போழ்து, வாயில் நிறைந்து ஒழுகி- (வாய் கொப்பளித்தாற் போன்று) உண்ணாமுலைகளான மார்பகங்கள் மீது வழிந்து;
இரத்தத் திலகம் இடும் தொடும் = அதே இரத்தால் நெற்றியில் தொட்டு திலகமிடும்; மனோன்மணி= ஸதாஶிவனின் ஶக்தியாம் மனோன்மணி. அருட்திறனை யுடையவள்;
வாராஹி= காட்டுப் பன்றியினுருவமுடையவள்;
நீலி= நீலி எனும் பெண்பேய் தனது பழியை ஜன்மாந்தரங்களிலும் தொடர்ந்து, பகை முடித்தாற் போன்று, காலதாமதம் எனினும் பகைவரை அழித்தலில் உறுதியாயுள்ளள்;
கார் தொழில் இதுவே= இவ்வாறு அன்பரை காப்பதே இத்தேவியின் அன்றாட செயல்களாம்.
மந்திர விளக்கம்-
(1) பகை முடித்தல் எனப்பொருள்படும் – ‘அரிக்னீ’ என்றது பன்னிரு நாமங்களளில் ஒன்றாம்
(2) மனோன்மணி= ஶிவபூஜைகளில் பீடஶக்தியாம், எனவே ‘ஶிவா’ என்றது பன்னிரு நாமங்களளில் ஒன்றாம்
(3) திலகம் இடும்= நெற்றியைக் குறித்து, அங்குள்ள ஆக்ஞா சக்ரத்தையும் எனவே ‘ஆக்ஞா சக்ரேஶ்வரீ; என்றது பன்னிரு நாமங்களளில் ஒன்றையும் குறித்ததாம்.
இரகசிய விளக்கம்:
இப்பாடலிலும் எல்லாம் இரண்டிரண்டாக தோன்றுகின்றது
மனோன்மனீ காளீ என இரு தேவியர், கொங்கைகள் இரண்டு, வாய் (கொப்பளித்தல்) மற்றும் நெற்றி (திலகம்) என முகத்தில் இரண்டாம், நிக்ரஹம் அனுக்ரஹம் என்னும் இரு தொழிலாம்.
வராகிதேவியின் தாந்த்ரீகபூஜையை பத்ததியின்படி, க்ரமமாக குருமூலம் சுட்டிகட்டபெற்ற வழியை கடைபிடிப்பவர்களின் பகைவர்களை காளி போன்ற பயங்கரமான உருவத்தை எடுத்து அப்ப்கைவர்களின் இரத்ததை குடித்து, அந்த இரத்தம் வழிந்த உண்ணாமுலை- பருத்த மார்பகங்கள் உடையவளாய், அந்த இரத்தத் திலகம் நெற்றியில் இடுமாறு, அப்பகை முடிக்க எப்போழ்தும் குறியாய், அன்பரை அருட்கடலில் மூழ்க செய்பவளாக தனது அன்றாட செயல்களாக கொண்டுள்ளாள் என துதிக்கின்றார் ஶ்ரீவீரை கவிராஜர்.
வேய் குலம் அன்னதிந்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே (6)
பொருள்:
வேய்=மூங்கில்;
குலம்= கூட்டம்;
அன்ன=போன்ற;
திந்தோளாள்= உறுதியும், வலிமையும் உடைய பல தோள்கள் உடையவள்;
வாராஹி=வராகியம்மை;
தன் மெய்யன்பரை= தனது உண்மையான அன்பு பூண்டிருப்பவர்களின்;
நோய்க்குலம் என்ன= பிராரப்த கர்மங்களால் உடல் ரீதியாக கஷ்டப்படுவதைக் கண்டு; இடும்புசெய்வார்= அவமானப் படுத்துபவர்களின் தலை நொய்து அழித்து= உடலிருந்து தலையை எளிதாக பறித்து;
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டு= உடலை பேய்கள் உண்ணும்படியாய் செய்து;
பிணக்குடரை நாய்க் குலம் கௌவக்கொடுப்பாள்= அவ்வாறு உண்ணப்பட்ட பிணங்களில் மிச்சமுள்ள குடல்களை நாய்கள் வாயினால் கௌவ்வும் படி செய்வாள்;
வாராஹி= காட்டுப் பன்றியினுருவமுடையவள்;
என் நாரணியே= விஷ்ணுவின் வடிவானவளே, மிகுந்த உரிமையுடன் தனதானவள் (என்) என்கிறார்.
மூங்கில் கூட்டம் போன்ற தோள்கள் என்பதினால் பல தோள்களையும் அதில் உள்ள பல்வேறு ஆயுதங்களையும், உறுதியும், வலிமையும் என்பதினால் ஆண் தன்மையையும் குறித்தாம். வாராஹீ பித்ரு ரூபா என்பது பாவனோபனிஷத். இத்தேவியின் பல்வேறு கைகளிலுள்ள ஆயுதங்களில் ஒன்றான கலப்பையாம். அன்பர்களிக்கு கஷ்டகாலங்கள் வந்தால்= இதன் உட்பொருள்= முன் செய்த வினைகள் விதைகள்போன்று உவமிக்கபடுவன. இத்தேஹமோ விளை நிலத்திற்க்கு ஒப்பாக கூறப்படும். வராகியம்மை தனது கலப்பையினால் இத்தேஹம் என்னும் நிலத்தை சீர் செய்து, முன் வினைகளான விதைகளை தூவி, வித்திட்டு, முளைக்க செய்வாள். இதனால் அறிவது ஓரோர் வினையும் பல்வேறு வினைகளுக்கு வித்தாகுமாம், அவைகள் மீண்டும் விதைகளாகும்- வினைகளுக்கு காரணமாகும் என்பதே. இவ்வாறு பல்வேறு இன்னல்களில்- வினைகளை அனுபவிக்கும் வேளையில்- தேவி அன்பரைக் உறுதியுடன் காப்பாள் என்பதே முன்கூறிய மூங்கில்- தோள்களின் குறிப்பாகும்.
மந்திர விளக்கம்-
- வாராஹிஎன்நாரணியே = தேவீ மாஹாத்ம்யம் பதினோன்றாம் அத்தியாயத்தில் – க்ருஹீதோக்ர மஹாசக்ரே தம்ஷ்ட்ரோத்த்ருத வஸுந்தரே|
வராஹரூபிணி ஶிவே நாராயணி நமோஸ்துதே||
(2) ‘குலம்’ என்னும் சொல் நான்கு முறை வந்துள்ளது = பரசுராம கல்பசூத்திரத்தில் இத்தேவியின் மூலமந்த்ரம் 112 அக்ஷரங்களைக் கொண்டுள்ளது. இதில் ‘ட:’ என்ற அக்ஷரம் நான்கு முறை வந்ததைக்குறிக்கும்.
இரகசிய விளக்கம்:
‘குலம்’ என்னும் சொல் நான்கு முறை வந்துள்ளது. இது மேற்கூறிய மீண்டும் மீண்டும் பிறத்தலை – நான்கு வகையான யோனிகளிலிருந்து- உத்பிஜ்ஜம்- விதைகளிருந்து பூமியைப்பிளந்து; ஶ்வேதஜம்= வியர்வைகளிலிருந்து நுண்ணிய க்ருமிகள்; அண்டஜம்- முட்டைகளிருந்து; ஜராயும்- கர்பப்பைகளிலிருந்து.
பலிகொண்டு. நாய்க்குலம் கௌவக்கொடுப்பாள்- பரசுராமகல்பசூத்திரத்தில் இத்தேவியின் பூஜா பத்ததிகளில் பலிக்கு மாமிசம் சேர்த்தலை குறித்ததாம், இரவில் தான் இத்தேவியை வழிபடவேணும் எனவும் – ‘ராத்ரௌவாராஹி’- இவ்வாறு பூஜாங்கமான பலியை நாய்களுக்குத்தான் இடவேணும் என்பதை மறைமுகாய் குறித்தார் ஶ்ரீவீரை கவிராஜர்
நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவரிம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவரென ஏழை நெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே (7)
பொருள்:
வாசப்புதுமலர்த்தேனாள்=வாசனையுள்ள தேன் சிந்தும் பூக்களைப் போன்ற; வாராகியை
வாழ்த்திலரே= வராகியம்மையை பணியாமல் உள்ளவர்கள்;
நாசபாடுவர்= அவர்களுடைய பொருட்கள் நாசத்தையடையும்;
நடுங்கப்படுவர்= பயத்தால உடல் நடுங்குவர்;
நமன் கயிற்றால் வீசபடுவர்= யம தர்மராஜனின் கயிற்றால் உயிர் கவரப்படுவர்;
வினையும்படுவர்= அவர்களின் செயகளின் பலன்களை அனுபவிப்பர்
இம்மேதினியோர் ஏசப்படுவர்= இவ்வுலகில்லுள்ளோரால் நிந்தைகளும் இகழவும் படுவார்கள்;
இழுக்கும்படுவர்=அவமானம், பொல்லாப்பும் கேட்கும்படியாகும்;
என் ஏழை நெஞ்சே=இவ்வாறான இழிமையான கதி வாராமல் இருப்பாய் மனமே!
அபிராமி அந்தாதியிலும் இவ்வாறான ஒரு கருத்தைக்காணலாம். மணியே மணியின் ஒலியே என்ற பாடலில்- ‘அணுகாதவர்க்கு பிணியே! பிணிக்குமருந்தே’ என்கிறார் அபிராமி பட்டர். இதன் பொருள்- இச்சொற்றொடரை அணுகாதவர்க்கு பிணியே என்பதில் இந்த உலகிலிருந்து தேவியை பூஜிக்கதவர்களுக்கு பிணி – இன்னல்கள் கஷ்டங்கள் வருமே என்று கொள்ளல் வேண்டும். மாறாக தேவி கஷ்டங்களை தருவாள் என பொருள் கூறலாகாது, கருணையின் வடிவன்றோ தேவி! அவர்களுக்கு கஷ்ட துன்பங்கள் வருதல் ஏனனின், தேவியின் அருட்கவசம் அவர்களுக்கு இல்லாதலால். மேலும் இப்பிணிகளுக்கு மருந்தாய் இத்தாய் உள்ளாள் என அடுத்த பாகத்தில் கொள்ளல்தகும். இவ்வுதாரணத்திலிருந்து பெறும் சிந்தையை மேற்கூறிய பாடலில் பொருத்தி பார்ப்பதால்- இதில் கூறப்பெறும் எல்லா துன்பங்களும் வராகியம்மையாம் தேவியை வழிபட மறந்ததால் ஏற்படும் உலகிலுள்ளோர்க்கும் ஸாமான்யமாக ஊழ் வினைகளால் ஏற்படும் இன்னல்களைக் ஜனனமரணசுழல் போன்றவற்றை குறித்ததாம்.
மந்திர விளக்கம்-
வாசப்புதுமலத்தேனாள்= ஶ்ரீலலிதாதிரிசதியின் ஒரு நாமத்தை தமிழ் படுத்தினாற் போலுள்ளது. ஹ்ரீங்காரஸுமனோமாத்வீ= ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரத்தை புது மணமுள்ள பூவிற்கு ஒப்பிட்டு, அதனுள் இருக்கும் தேன் போன்றவளாய் விவரிக்கின்றார். எனவே ஹ்ரீம் என்ற பீஜத்தை மறைமுகமாய உணரலாம். ஶ்ரீலலிதாதிரிசதியின் மற்றொரு நாமம் ‘ஹ்ரீங்காராம்போஜ ப்ருங்கிகா’ இதிலும் ஹ்ரீங்காரத்தை தாமரைப்பூவிற்கு ஒப்பிடப் பெற்றது
இரகசிய விளக்கம்:
இத்தேவியை தேனுக்கு உவமித்ததால் – தேன் பன்னாட்களாயினும் கெடாது, சுவைமிக்கது என்பதால் தேவியும் காலாதீத ஸ்வரூபமும். ஆனந்த ஸ்வரூபமும், வாசபுதுமலர் என்பதால் என்றும் புதியவள் என்றும் சிந்திக்கலாம்.
வாலை புவனை திரிபுரை மூன்றுமிவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே (8)
பொருள்:
வாலை= இளங்குமரியான வடிவினள், பாலா என்று அழைப்பர்;
வனை = ஈரேழு பதினான்கு புவனங்களையும் படைத்தவள், எனவே தாய்மை அடைந்த நிலையிலுள்ள வடிவம்;
திரிபுரை= மூன்று நிலைகளான விழிப்பு, தூக்கம், ஆழ்ந்ததூக்கம்,ஆகியவற்றை விளக்குபவளாயும், இம்மூன்றை கடந்த துரீய நிலையையும் விளக்குபவளாயும் உள்ள தேவி, இதனால் எல்லா உயிரினங்களையும் சேயாய் பாவிக்கும் முதிர்ந்த நிலை;
மூன்றுமிவ்வையகத்திற்= இம்மூன்று நிலைகளில் இவ்வுலகிலுள்ள தேவி;
காலையும் மாலையும் உச்சியும் ஆக= காலையில் வாலை, மாலையில் புவனேஶ்வரீ, உச்சியில் திரிபுரை என்ற தேவியரின் வடிவினளாக;
எக்காலத்துமே= ஆக எப்போழ்தும்;
ஆலயம் எய்தி= வராகியம்மையின் இருப்பிடத்தில் – இங்கு இருப்பிடம் என்பது முன்கூறிய பூசிக்கும் யந்திரத்தை;
வாராஹிதன் பாதத்தை= வராகியம்மையின் பாதத்தை வணங்கி- பூஜாபத்ததியில் ஶ்ரீபாதுகாம் பூஜயாமி நம: என காணலாம்.
அன்பில் உன்னி=மனதில் மிக்க அன்பு பூண்டு ஆழ்ந்து தியானித்து;
மால் அயன் தேவர் முதலான பேர்களும்= திருமால், ப்ரஹ்மா முதலிய தேவர்கள்; வாழ்த்துவரே= வணங்கி தேவியின் பொருமையை கூறுவர்களே.
மந்திர விளக்கம்-
(1) வாலை = மூன்று எழுத்துக்களாலான மந்த்ரம்- ஐம் க்லீம் ஸௌ:- இதுவே முதன்முதலில் உபதேசிக்கப்படும் மந்த்ரமுமாம்.
(2) புவனை = புவனேஶ்வரீ பீஜம் – ஹ்ரீம்
(3) திரிபுரை= ஶ்ரீவித்யா பஞ்சதஶாக்ஷரீ மந்த்ரம் ‘
(4) வாராஹிதன் பாதத்தை= பூஜா பத்ததியில் ‘ஶ்ரீபாதுகாம் பூஜயாமி நம:’ என்ற அஷ்டாக்ஷர மந்த்ரமாக காணலாம்.
இரகசிய விளக்கம்:
ஸதா வித்யா அனுஸம்ஹதி: – எப்பொழ்தும் வித்யா- மந்த்ரத்தின் நினைவு- மனத்தில் இருத்திக் கொள்ளல் வேண்டும் என்பார் பரசுராமர். மூன்று வேளைகளிலும் த்யானித்து பூசித்தது என்றது இதையே.
மால் அயன் முதலிய தேவர் வணங்குவர் என்றது இவ்வாறு பூசிப்பவர்கள், அந்த நிலையை அடைவர், இவ்வுபாஸகர்கள் திருமால் போன்று ரக்ஷிக்கும் திறமையும், ப்ரஹ்மா போன்று படைக்கும் திறமைகளும் அடைவர் என்று மறைமுகமாய் கூறினார்.
பாடல்கள் ஏழும் எட்டும் கூறும் பொருளில் இரண்டு நிலைகளைக் காணலாம். ஒன்றில் உலகத்தோர் தேவியை அறியாமல் (வாழ்த்திலரே) வினைகளால் சூழப்பெற்று கலங்குவதையும், மற்றொன்றில் க்ரமமாக பூஜைசெய்து அன்பினால் அடிபணிபவர் (வாழ்த்துவரே) பெறும் நிலைகளும் ஆக இரு வேறு நிலைகளை காட்டுகின்றார் ஶ்ரீவீரை கவிராஜர்.
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காக
சிரித்துப் புரமெரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே (9)
பொருள்:
முன் வானவர்க்காக சிரித்துப் புரமெரித்தோன் = சிவபெருமானின் லீலைகளில் ஒன்றாம் புரமெரித்தலை கூறுகிறார், முன்பு வானவர்களான தேவர்களை துயர் பட வைத்த முப்புரங்களை தனது புன்சிரிப்பால் அழித்தது;
வாம பாகத்துத் தேவி=அவரின் இடப் பாகத்தை கொண்ட ஶக்தி;
எங்கள் கருத்திற் பயிலும் வாராஹி= உபாஸகர்களின் சொல்லும் செயலுமாயுள்ள வராகியம்மை;
என் பஞ்சமி கண் சிவந்தாற் = உரிமையுடன் தனது என்றார், பஞ்சமியான மாத்ருகைகளில் ஐந்தாவதானவள், கோபம் கொண்டு கண்கள் சிவந்தால்;
வருத்திப் பகைத்தவர்க்கே = தேவியை வழிபடும் அன்பர்களுக்கு மனதால பகை கொண்டு, அவர்களை வருந்தும்படி செயல்களை செய்பவர்களின் நிலை;
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் = பெரிய பருத்தி கட்டுகள் அருகில் ஒரு சிறு தீப்பொறி வீழ்ந்தால் , எவ்வாறு அப்பொதிக்கட்டு முழுதும் தீப்பிடித்து சாம்பலாகுமோ;
என்னோடறியாமல் பகைத்தீர்= இவ்வாறு அழிவோம் என்றதை அறியாமல் (மறந்து) எங்களுடன் (உபாஸகர்களுடன்) பகையை மனதில் கொண்டு வளர்த்தீர்களே
வீரட்டான செயல்களுள் முப்புரம் எரித்தது ஒன்றாம். தங்களை எவரும் அழிக்க முடியா-தென்று நினைத்து கேட்ட வரத்தின் பலத்தால், அதன் நிபந்தனைகளை முழுமையாய் நிறைவேற்றி, ஆணவம் கொண்ட அஸுரர்களின் செருக்கு அழிந்ததும், தங்களால் தான் இச்செயல் கூடும் என்றிருந்த தேவர்களின் செருக்கும் ஒருசேர அழித்த புன்சிரிப்பையுடைய சிவபெருமானின் இடப்பாகம் அமைந்த தேவி, அவரைப் போன்றே தந்து பக்தர்களின் துயரத்தை காண சகிக்காமல் கண் சிவந்ததுமே, பெரும் மலை போன்ற பஞ்சுபொதியில் வீழ்ந்த தீப்பொறியால், கணநேரத்தில் பகை சாம்பலாயிற்று என்கின்றார்.
மந்திர விளக்கம்-
வாம பாகத்துத் தேவி= அர்த்தநாரீஶ்வர மந்த்ரத்தை குறித்தது, பராப்ராஸாத மந்த்ரம் என்னும் கூறுவர்
பஞ்சமி கண்சிவந்தாற் பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி= அக்னி வாராஹி மந்த்ரத்தைக் குறித்தது
இரகசிய விளக்கம்:
பஞ்சமி-ஸதாஶிவனின் ஶக்தியான அனுக்ரஹ ஶக்தியே, இது அர்த்தநாரீஶ்வர ரூபமான குருவாய் நம்முன் நின்று, மும்மலங்களையும் அகற்றும் தீக்ஷையான நயன தீக்ஷையை குறித்தது. பஞ்சு பொதியானது சிறு எடையாயினும் மிகவும் நிறைய பொருள் உள்ளதாய் தோன்றும் தன்மையுடையது. இதை பொசுக்க சிறு தீப்பொறியே போதும். பகை என்றது மும்மலங்களையே.
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதும் பொறிப்பட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கில்லையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ?பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே (10)
பொருள்:
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் = அழகான செந்தமிழால் (புகழ்) பாடும் புலவர் -களின்
நின்மலர்ப் பாதம் தன்னிற்பூப்பட்டதும்=தேவியைக் குறித்து பா-மாலைகளை (பாடல் கள்) அவள் திருவடியில் பூமாலைகள் என சூடி;
பொறிப்பட்டதோ?=ஐம்பொறிகளினால் அறியப்படவில்லையோ- காணாமல் அழிந்து விட்டனவோ- ;
நின்னையே புகழ்ந்து கூப்பிட்ட துன்செவி கேட்கில்லையோ?= அப்பாடல்களில் தேவியின் புகழ் பராக்ரமம் கருணை முதலியவற்றால் துதி செய்தது காதுகளில் கேட்கவில்லையோ- தேவியோ எங்கும் நிறைந்தவளாதலால் அவ்வாறு அவள் அறியாமல் போகாது என்று மறைமுகமாய் கூறுகின்றார்;
அண்டகோள மட்டும் தீப்பட்ட தோ?= ப்ரபஞ்சம் அழிந்து விட்டதோ, இல்லையே , இங்கு காணுபடும்படி உள்ளதே, ஆகையால் அத்துதிகள் தேவி கேட்டிருப்பது திண்ணம் என கூறுகின்றார்;
பட்டதோ நிந்தையாளர் தெரு எங்குமே=அப்போழ்து எது அழிந்திருக்கும் எனின் அது இவ்வுபாசனையை பழித்தவகளின் இருப்பிடமாம் என்று உணர்த்தினார் ஸ்ரீவீரைகவிராஜர்.
அழிந்து விட்டதாக நினைத்து அவ்வாறு அல்லாததால் அவை உள்ளனவே என நிந்தாதுதி போன்று இப்பாடல் அமைந்துள்ளது. தேவியை புகழுமாறுள்ள தோத்திரங்கள் காணாமல் போய்விடவில்லை, அத்துதிகளால் அன்பர்கள் துதிக்க தேவி அவர்களுக்கு அருள் மழை பொழிந்தாள், இப்ப்ரபஞ்சமோ இன்னும் இருப்பதே, ஆக அழிந்தது எதுவெனின் இவ்வரிய உபாஸனா மார்கத்தை பழிப்பவர்களே – பூஜையின் முடிவில் கூறும் ஶாந்தி ஸ்தோத்ரத்தில் – ஶாபா: பதந்து ஸமயத்விஷி யோகினீனாம்- இம்மார்கத்தை பழிப்பவர் யோகினிகளின் சாபம் அடையட்டும் என ப்ராத்திக்கின்றோம்.
மந்திர விளக்கம்-
பல் வேறு துதிகள், ஸஹஸ்ர நாமம், த்ரிசதி, அஷ்டகம் முதலியன
அண்டகோள மட்டும் தீப்பட்டதோ= ஊழிகாலத்தின் குறிப்பால மஹாகாலர் காளியம்மையின் மந்த்ரங்கள்
இரகசிய விளக்கம்:
துதிகள் ஶப்ததைக்குறித்தது, செவியும் ஶப்ததை க்ரஹிக்கும் இந்திரியமாம், ஶப்ததின் பூதம் ஆகாசமாகும். ப்ரபஞ்சம் என்பதும் வெளியே. ஆக, தேவியின் மகிமை எல்லையில்லாதது, அதை புகழ எத்தனித்ததை காணவில்லை என கொள்ளலாம்.
“பட்டதோ?” என கேள்வியினால், இல்லை எனபொருள் கொண்டு களிக்கலாம்
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மன் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே (11)
பொருள்:
எங்கும் எரிய= எல்லா இடத்திலும் தீ பரவ;
கிரிகள் பொடிபட= மலைகள் தூள் தூளாக பொடிபட;
எம்பகைஞர் அங்கம் பிளந்திட= உபாஸகர்களிடத்து பகை கொண்டவர்களின் உடல் பகுதிகள் வெவ்வேறாக முறிந்திட;
விண்மன்கிழிந்திட= வானத்திலுள்ள நக்ஷத்திரங்கள் அழிந்துபோகும்படி;
ஆர்த்தெழுந்து பொங்கும் கடல்கள் சுவறிட = மிகுந்த சத்தத்துடன் பெரிய அலைகளையுடைய கடல் வற்றிட;
சூலத்தைப் போகவிட்டு= இவ்வாறான செயலகளை செய்யும்படு தனது சூலாயுதத்தை எறிந்து;
சிங்கத்தின் மீது வருவாள்= சிங்க வாகனத்தின் மீதேறி வருவாள்;
வாராஹி சிவசக்தியே= சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணியான வராகியம்மையே.
ஐந்து விதமான செயல்களைக் காண்கின்றோம். எங்கும் எரிய=அக்னி ஜ்வாலைகள் எங்கும் சூழ; கிரிகள் பொடிபட= ப்ருத்வீ பொடிபட; எம்பகைஞர் அங்கம் பிளந்திட= மனிதர்கள் , அவர்கள் உயிரோடிருக்க சுவாசிக்கும் காற்று; விண்மன் கிழிந்திட= ஆகாசம்; ஆர்த்தெழுந்து பொங்கும் கடல்கள் சுவறிட= நீர். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மற்றும் லலிதோபாக்யனத்தில் இவ்வம்மையாம் வராகி ஶ்ரீலலிதா தேவியின் பஞ்சபாணங்களிலிருந்து தேன்றினாள் என கூறும், பஞ்சபாணங்கள் பஞ்ச தன்மாத்ரைகளை குறித்தது, அதன் பூதமான பஞ்ச பூதத்தையும் குறித்தது. இவ்வைந்து பஞ்சபூதத்தின் மீது வராகியம்மையின் ஆட்சியை காணலாம்.
சூலமானது மும்மலங்கலையும் அகற்றும், வராகியம்மை சூலத்துடன் காண்பது அரிது, சிவசக்தி என சூலத்தின் குறிப்பாக கொள்ளலாம்
லலிதோபாக்யனத்தில் இவ்வம்மை வஜ்ரகோஷம் என்னும் சிங்கத்தின் மீதேறி பண்டாஸுரனுடன் யுத்ததிற்கு புறப்பட்டதை காணலாம்.
மந்திர விளக்கம்-
ஐந்து செயல்களால் இவ்வம்மையின் மூல மந்த்ரத்தில் வரும் ஐந்து பகுதிகளான மந்த்ரத்தில் காணலாம். அவைகள் முறையே அந்தினி ருந்தினி ஜம்பினி மோஹினி ஸ்தம்பினி என்பனவாம்.
சிங்கத்தின் மீது வருவாள்= சிங்கத்தின் மீது காணப்பெடும் தேவியாம் ஶ்ரீதுர்கை- அவளது மூல மந்த்ரத்தை குறித்ததாய் கொள்ளலாம்
தேவீ மாஹாத்ம்யத்தின் இரண்டாம் அத்யாயத்தில் “சுக்ஷுபு: ஸகலா லோகா: ஸமுத்ராஶ்ச சகம்பிரே” (137)- என்ற வரிகளை நினவுபடுத்தும்
இரகசிய விளக்கம்:
பஞ்சபூதங்களாலான ப்ரபஞ்சம்- அதன் அழிவு, மீண்டும் ஸ்ருஷ்டி, இவைகள் ஸம்ஸாரசுழலைக் குறித்தது, சூலமானது-அதிலிருக்கும் ஜீவனின் மும்மலமகற்ற செய்யும் தீக்ஷை, சிங்கம்- தர்மத்தை, அதன் கண் சாத்திரம் கூறும் வழி நடப்பதையும் குறித்ததாம்.
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே (12)
பொருள்:
சக்தி= எல்லாவற்றையும் இயக்குபவள்
கவுரி= வெண் நிறத்தவள்- ஸத்வமான குணம்- ப்ரம்மாவினது சக்தியான வாமா (ஸரஸ்வதி);
மஹமாயி= பெரு மயக்கத்தை உண்டு பண்ணுபவள், விஷ்ணுவின் சக்தியாம் ஜ்யேஷ்டை (லக்ஷ்மீ);
ஆயி= என்னை பெற்ற அம்மை- ருத்ர சக்தியாம் ரௌத்ரீ (பார்வதீ), இவ்வாறு முக்குணங்களால் இப்பிரபஞ்சத்தை இயக்குபவளாம் வராகியம்மை;
என் சத்துருவைக் குத்தி= (அவள்) கைகளிலுள்ள கத்தியால் உபாஸகர்களிடத்து பகைமை கொண்டவர்களை குத்தி;
இரணக்குடரைப் பிடுங்கி= அவ்வாறு வெட்டப்படும் உடலிலிருந்து பெருகும் இரத்ததுடன் கூடிய குடலை பறித்து;
குலாவி நின்றே= இவ்வாறு பறிப்பது, அவர்களை கொஞ்சுதல் போன்றாம்;
இத்திசை எங்கும் நடுங்கக்= மடியும் அப்பகைவர்களின் கூக்குரல் மிகவும் பயங்கரமாய் ஒலிக்க, அதனால திசைகள் நடுங்கின என உவமித்தது;
கிரிகள் இடிபடவே= அப்பயங்கர சத்தத்தால மலைகளும் தூள் தூளாயின; நித்தம் நடித்து வருவாள்= இச்செயலகள் நாடகத்தில் நடிப்பது போன்று எக்காலத்தும் செய்வாள்- கொடிய செயல்களாகத் தெரிந்தாலும் இவைகளின் பின் கருணையே உள்ளது, இதனை மறக்கருணை என்பர்;
வாராஹி என் நெஞ்சகத்தே= உபாஸகர்கள் என்றும் வழிபடும் வராகியம்மை அவர்கள் மனத்தினால விளங்குகிறாள்.
முக்குணங்களைக் காண்கின்றோம், அதன் கண் உள்ளிருக்கும் முப்பெரும் தேவியரையும் அவர்களால் ஆற்றப்பெறும் முத்தொழில்களையும் காணலாம். ஸம்ஹாரமே ஸ்ருஷ்டிக்கு வித்தாதலால், ஸ்ருஷ்டிக்கபட்டது அழிக்கப்படும் என இப்பிரபஞ்சத்தின் இயக்கத்தை குறித்ததாம்.
மந்திர விளக்கம்-
கவுரி= வெண் நிறத்தவள், ஐம் என்ற வாக்பீஜம்
மஹமாயி= மஹா மாயா என குறியீடு புவனேஶ்வரீ பீஜத்தைக்குறிக்கும் – ஹ்ரீம்
ஆயி = தாயார் என்ற பொருளாக கொண்டு, மாதா என மறைப்பொருளாக உள்ள த்வதஶார்த்தா மந்த்ரம் “ஹஸகலரடைம் ஹஸகலரடீம் ஹஸகலரடௌ: “
இரகசிய விளக்கம்:
தாயார் குழந்தைகளை கோபிப்பது போன்று நடிப்பாள், அது அக்குழந்தையின் நன்மையே கோருவதாலாம். அவ்வாறு கொடும் செயல்களான செய்கைகள் தேவியானவள் செய்வது நன்மையே உத்தேசித்தாம், இது மறக்கருணை.
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாராயணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே (13)
பொருள்:
நெஞ்சகம் தன்னில் = உபாஸகர்களின் மனதில்; நி
றைந்திருக்கின்ற நிர்க்குணத்தி =முழுதும் ஆட்கொண்ட பரபிரம்ம ஸ்வரூபமானவள்;
நஞ்சணி கண்டத்தி=விஷத்தை கழுத்தில் அணிகலன் போன்று அணிந்திருப்பவள்;
நாராயணி=ஜீவர்களின் மோக்ஷப்பாதையை காட்டுபவள்;
தனை நம்புதற்கு =தேவியை உளமாற வழிபடுபவர்களுக்கு
வஞ்சனை பண்ணி= சூது செய்து;
மதியாத பேரை=மதிக்காதவர்களின்;
வாழ்நாளை உண்ண=இவ்வுலக வாழ்க்கையை முடிக்க;
கொஞ்சி நடந்து வருவாள்=குழைந்து பேசி அவர்கள் அருகில் செல்வாள்;
வாராஹி குலதெய்வமே= எங்கள் பரம்பரைத்தெய்வமான வராகியம்மை.
நஞ்சணிகண்டத்தி=விஷத்தை சிவபெருமான் கழுத்தில் அணிகலன் போன்று அணிவித்தவள் எனவும் கொள்ளலாம். அர்த்தநாரீஶ்வர ஸ்வரூபத்தில், சிவபெருமானின் கழுத்திலுள்ள ஆலகால விஷத்தின் கருமை, தேவியின் கழுத்திலும் உள்ளதாலும் இவ்வாறு கூறுகின்றார் எனவும் கொள்ளலாம்.
குலதெய்வமே= குலம் என்பது ஆறு ஆதார சக்ரங்களாம்,, ஒவ்வொரு சக்ரத்திற்கும் ஒரு யோகிநி தேவதையாம்- ஸாகினி, காகினி, லாகினி, ராகினி, டாகினி. ஹாகினி வராகியம்மை இவ்யோகினிகளுக்கும் தேவியாம். இதை பூஜா கல்பத்தில் காணலாம்
முதலில் நிர்குணமான பரபிரம்மம், அதலின்று தோன்றிய மும்மூர்த்திகளாயுள்ள சிவபெருமான், விஷ்ணு- ப்ரஹ்மா ஊகிக்கபடவேண்டும். ஆக மும்மூர்த்திகளின் ஸ்வரூமானவள் என அறியலாம்.
மந்திர விளக்கம்-
நஞ்சணி=நஞ்சை விஷம் என்ற பொருள் கொண்டால், அதன் மற்றொரு சொல்லான ஶ்ரீ என்பதை மறைமுகமாய் காட்டி, லக்ஷ்மீ பீஜத்தை குறித்தது – ஶ்ரீம்
நஞ்சணி கண்டத்தி= விஷஹர மந்த்ரமான நீலகண்ட த்ர்யக்ஷரம் – ப்ரோம் ந்ரீம் ட:
நாராயணி = அஷ்டாக்ஷரமான ஓம் நமோ நாராயணாய
இரகசிய விளக்கம்:
பரபிரம்மஸ்வரூபமானது, குணங்களைக்கடந்து நின்றாலும், ஸாதுக்களையும் எப்போதும் அன்பால் ஒரு ஸகுண ஸ்வரூபத்தை த்யானித்து உள்ளவர்களையும் காக்குதல் பொருட்டு மறைமுகமாய் அவர்களுக்கு வரும் தீமைகளை அழித்துவிடும் என அறுதியிட்டு கூறுகின்றார்.
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹின் மெய்த் தெய்வமே (14)
பொருள்:
மது மாமிஸம்தனைத் தின்பாள் இவள்= வராகியம்மையின் வழிபாட்டில் மது மாமிசம் முதலியன பயன்படுத்துவார்கள், அதையே இத்தேவிக்கு நிவேதனமாய் படைப்பார்கள், அவ்வாறு படைக்க பெற்ற பிரசாதத்தை உட்கொள்வார்காள் இவ்வுபாஸநையை மேற்கொள்ளும் அடியார்கள்;
என்று மாமறையோர்= இவ்வாறாக இவ்வுபாஸனையை மேற்கொள்ளாமல் உள்ள வேதம் கற்ற அந்தணர்கள் நினைத்து;
அதுவே உதாஸினம் செய்திடுவார்= இக்காரணத் தாலேயே இந்த உபாஸனையும் அதை மேற்கொளவர்களையும் அலட்சியப்படுத்தி நிந்திப்பார்கள் ;
அந்த அற்பர்கள்தம் கதிர்வாய் அடைத்திட = இவ்வாறாக மற்றவர்கள் அறியும்படி வெளிப்படையாக பேசி அலட்சியப்படுத்தி நிந்திப்பவர்கள் பேச்சு தடைபட;
உள்ளம் கலங்கக்கடித்து அடித்து=அவர்களின் உள்ளத்தில் குழப்பம் உண்டாக்கி, மனத்தை கலங்க செய்து, அவர்களை அடித்து;
விதிர் வாளில் வெட்டி எறிவாள்= வாளை வீசி அவர்களின் உடலை வெட்டி எறிவாள்;
வாராஹின் மெய்த் தெய்வமே= உண்மையான தெய்வமான வராகியம்மையே.
மந்திர விளக்கம்-
விதிர் வாள் – கட்க மாலா மந்த்ரங்கள்
இரகசிய விளக்கம்:
தந்த்ரங்கள் கூறும் வழிபாடு ஸாமானிய பாமர மனிதர்களுக்கல்ல, ஒரு குருவை அடைந்து ஆழ்ந்த நம்பிக்கையும் இடைவிடாத முயற்சியுமே இலக்கான தெய்வ நிலையை உணந்து ஆனந்தத்தில் திளைக்க உதவும். இந்த வழியானது எப்பொருட்களால் (மது மாமிசம் முதலியன) நாம் ஸம்ஸார சூழலில் சிக்குண்டோமோ அவைகளாலேயே இதனின்றும் மீள வழி கூறியதாம் – முள்ளை முள்ளால் எடுப்பதும், வைரத்தை வைரத்தால் அறுப்பதும் போன்றே. ஆயினும் இது சுலபமல்ல, கத்தி மீது நடப்பது போன்றதே இப்பாதை. மேம்போக்காக இதை பற்றி அறிந்து அதை கண்டனம் செய்பவார்கள் அற்பர்கள். இவர்கள் வேதத்தை வெறும் வாய் மொழியாய் கற்றவர்கள், அதன் உட்பொருளை அறியவில்லை. “மாமறை” என்பதை வேதம் என்று பொருள் கூறினாலும், இங்கு மா – பெரிய மறை- இரகசிய என்று கொண்டு, பெரிய உட்பொருள் எனலாம்.
வேதத்தில் கூறப்பெற்ற சடங்குகளில் ஸோம ரஸம், பசு ஆலம்பனம், வபை முதலியன யாகங்களில் குறித்துள்ளதை அவர்களுக்கு அறிவித்ததை – விதிர் வாள் என குறிக்கின்றார்.
மெய்த் தெய்வம் – தனது அடியார்களை காத்தல், அவர்கள் மனமானது சஞ்சலப்படாதித்தல் முதலியன செய்வதால், உண்மைத் தெய்வம் என கூறுகின்றார்
ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்ணெதிரே
வையம் துதிக்க வாராஹி மலர்க்கொடியே (15)
பொருள்:
ஐயும் கிலியும்= ஸாதனைகளின் போது ஏற்படும் அனுபவங்களாலும், அல்லது அனுபவங்கள் ஏற்படாமலிருப்பதாலும் சந்தேஹம், பயம் (கொண்ட);
எனத்தொண்டர் போற்ற=என எண்ணி அடியார் கூட்டம் இறைஞ்ச;
அரியபச்சை மெய்யும்=(அடியார்க்கு அருள வேண்டி) அருமையான (கரும்)பச்சை நிறமுடைய உடலெடுத்து;
கருணை வழிந்தோடுகின்ற விழியும் = தனது பார்வையால் கருணையை வெளிப்பட செய்து;
மலர்க் கையும்= பூ போன்ற மென்மையான கைகளும்;
பிரம்பும் கபாலமும் சூலமும் = அக்கைகளில் பிரம்பு மண்டையோடு சூலம் முதலுயன ஏந்தி (அடியார் துன்பத்தை தீர்த்துவிட);
கண்ணெதிரே வையம் துதிக்க= அன்பர்களின் மனக் கண்ணில் தோன்றி, அவர்கள் எல்லாரும் சேர்ந்து தோத்திரம் செய்ய;
வாராஹி மலர்க்கொடியே= வராகியம்மை மலர் கொடி போன்று (வருவாள்).
மந்திர விளக்கம்-
ஐயும் கிலியும் = பாலா மந்த்ரத்தின் முதல் இரண்டு பீஜங்கள் – ஐம் க்லீம் ஸௌ: என்பது புரிந்துகொள்ள வேண்டும்.
மலர்க்கொடியே= ஶ்ரீலலிதா திரிசதியின் மற்றொரு நாமத்தை நினைவு படுத்துகின்றது. ஹ்ரீங்காராவாலவல்லரீ= ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரத்தை பாத்திக்கு ஒப்பிட்டு, அதன் கண் வளரும் கொடிக்கு உவமிக்கின்றார். எனவே ஹ்ரீம் என்ற பீஜத்தை மறைமுகமாய உணரலாம்.
இரகசிய விளக்கம்:
கபாலமும் சூலமும் = ஆக்கல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்ற ஐந்தொழிலகளை செய்யும் காலஸங்கர்ஷணீ தேவியின் வடிவமாம். இவ்வைந்து செயல்களால் வராகியம்மையின் மூல மந்த்ரத்தில் வரும் ஐந்து பகுதிகளாக-
(1) அந்தினி (2) ருந்தினி (3) ஜம்பினி (4) மோஹினி (5) ஸ்தம்பினி- என உணரலாம் .
அரியபச்சைமெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்கையும்= கவிராஜ பண்டிதர் தனது குருவடிவினளான ஶ்ரீமீனாக்ஷியம்மையை நினைத்து துதிக்கின்றார்.
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே! (16)
பொருள்:
தரியலர்கள் = பகைவர்கள்,
தாளும் மனமும் தலையும் குலைய= கால்கள் – நடக்கும் சக்தி, மனம்- சிந்திக்கும் சக்தி, தலை- ஐம்பொறிகளால் உணரும் சக்தி- இவைகள் அழியவும்;
மாளும் படிக்கு= அவர்கள் சீக்கிரம் உயிர் துறக்கவும்;
வரம் தருவாய்= வரங்களைத் தருவாய்; உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள்= (ஏனெனில்) உன்னையே நித்தம் நினைக்கும் அடியார்ளுக்கு, கிரகங்களாலும், மற்றும் பகைவர்களாலும் ஏற்படும் இன்னல்கள மனதில் குறித்து வைத்துக்கொள்ள மாட்டார்கள்;
வெற்றி குறித்த சங்கும் வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே= (ஆகையிலால்) வராகியம்மையே அவர்களுக்கு துணையாக, தனது கைகளில் வெற்றியை முழக்கும் சங்கும் , வாளும், கேடயமும் சூலமும் (ஏந்தி வந்து வரங்களை தர வேண்டுகின்றார் கவிராஜர்).
மந்திர விளக்கம்-
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள் மாளும் படிக்கு=வராகியம்மையின் மூல மந்த்ரத்தை நினைவு படுத்துகின்றது- ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம் ஸர்வ வாக் சித்த (மனமும்) சக்ஷுர்முக (தலையும்) கதி (தாளும்) ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
வெற்றி குறித்த சங்கும் வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே= ஜய துர்கா மந்த்ரத்தை நினைவு படுத்துகின்றது. ஓம் துர்கே துர்கே ரக்ஷிணி ஸ்வாஹா
இரகசிய விளக்கம்
துணை என்பது ஶ்ரீகுருவைக்குறித்ததாம், குருவினிடம் சரணடைந்தோர் மற்றவற்றைப் பற்றி யோசிக்காமல் ஸாதனையில் ஈடுபடுவர், அவர்களுக்கு துன்பம் நேரின், குரு வடிவினளான தேவி அத்துன்பங்களை தனது பல் வேறு வடிவங்கொண்டு நீக்குவாள்.
வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே (17)
பொருள்:
வருந்துணை என்று= கூப்பிட்டால் உடனே வந்து துணை இருப்பாள்;
வாராஹி என்றன்னையை வாழ்த்தி நிதம்= தினம் தோறும் “வாராஹீ” என்று வாழ்த்தி / வணங்கி;
பொருந்தும் தகைமையைப் பூணாதவர்= இவ்வாறு செய்ய முடிந்தும் செய்யாதவர்களும் , மற்றும் இவ்வன்னையை அறிய முற்படதவர்களும்;
புலால் உடலைப்=(அவர்கள்) மாமிசம் நிறைந்த உடலை;
பருந்தும் கழுகும் வெம்பூதமும் வெய்ய பிசாசுகளும் விருந்துண்ணப் பட்டுக்= பிணந்திண்ணி எனப்படும் பருந்தும் கழுகுகளும், வெம்மையுடைய பூதங்களும், கொடிய பிசாசுகளும் பெரும் விருந்தாக உண்ணும் உணவாக;
கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே= (இவ்வாறு) உடலானது பல பாகங்களாய் பிடிந்து கிடப்பதை காணுவார்கள்
மந்திர விளக்கம்-
வாராஹி என்று அன்னையை வாழ்த்தி= வராகியம்மையின் மூல மந்த்ரத்தை நினைவு படுத்துகின்றது- வாராஹி என்ற பதம் இரு முறை காணலாம்.
பூதமும் பிசாசுகளும்= வராகியம்மையின் ஆவரண பூஜையில் பூதங்களைக் காணலாம், பிசாசுக்கள், அவளது பரிவாரத்திலுள்ள சண்டோச்சண்டனிடம் உள்ளதாக காணலாம்.
இரகசிய விளக்கம்
இப்பாடலின் பொருளை , அன்னையை வழிபடுபவர்கள் மேற்கூறிய கதிகளை அடையார் என எதிர்மறைப்பொருளாய் கொள்ளல் தகும்.
நிதம்- தினந்தோறும், ஆக தினசரி-நிலைத்த தன்மையுடைய அர்பணிப்பு- இவ்வம்மையை வாழ்த்துபவர்கள்- நித்யமாய்பூஜை என்பதே வலியறுத்தப் படுகின்றது.
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே (18)
பொருள்:
நேமிப் படையாள்= சக்ரத்தை தனது ஆயுதமாய் கொண்ட;
தலை வணங்காதவர்க்கே=(வராகியம்மையின் பாதத்தை) தனது தலையால் வணங்காதவர்களுக்கு;
வேறாக்கும் நெஞ்சும் வினையும்= (அவர்கள்) மனமும் செயலும் ஒருங்கிணையாமல் – செய்வதொன்றாய், நினைத்தது வேறாய்;
வெவ்வேறு வெகுண்டுடலம் கூறாக்கும் =(இவ்வாறு) வேறான செயல்கள் செய்யும் நிலையில் (அவர்களின்) உடல் பலகூறுகளாகும்;
நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச் சேறாக்கும் = (கூறுகளான) உடல்களின் நெஞ்சத்தில் பெருகிய இரத்தம் மாமிசத்துடன் கலந்து சேறு போன்றாகும்
குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும் மாறாக்கும் = (அவ்வாறு) வீழுகின்ற இரத்தமானது தேவியின் மார்பகளின் மீது விழ- அது குங்குமப்பூவின் குழம்பால பூசிய அணிகலன் போன்றும், நெற்றியில் விழ அங்குள்ள திலகம் போன்று காணப்படும்..
மந்திர விளக்கம்-
குங்குமக் கொங்கையிற் பூசும்= இது த்ரிபுரபைரவீ தேவியின் த்யானத்தின் கண் காணப்படுகின்றது- ரக்தாலிப்தபயோதராம்- அத்தேவியின் மந்த்ரத்தை நினைவு படுத்துகிறது -ஹ்ஸ்ரைம் ஹ்ஸ்க்லீம் ஹ்ஸௌ:.
(சிவந்த) திலகம்= லலிதா ஸஹஸ்ர நாமத்தில் ஸிந்தூர திலகாஞ்சிதா
நேமிப் படையாள்= நேமி என்பதை கடல் என பொருள் கொண்டால் – மதுக்கடலை தனது பரிவார ஆவரண தேவதையாயுள்ள வராகியம்மையை கண்டு மகிழலாம்
இரகசிய விளக்கம்
நேமிப்படையாள்= நேமி என்பதை ஆக்ஞாசக்ரம் என பொருள் காணின், அங்குறைபவளாய் – குரு வடிவினளாய் , ஸாதகனை முன்னேற்ற அருளுபவளாய் கண்டு களிக்கலாம்
இப்பாடலின் பொருளை , அன்னையை வழிபடுபவர்கள் மேற்கூறிய கதிகளை அடையார் என எதிர்மறைப்பொருளாய் கொள்ளல் தகும்.
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டே கை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெருத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் எங்கள் அம்பிகையே (19)
பொருள்:
பாடகச்சீறடிப்பஞ்சமி= பாடகம் என்ற சிலம்பணிந்த சிறப்பு மிக்க திருவடிகளையுடைய ஐந்தொழிலும் புரியும் வராகியம்மை;
அன்பர் பகைஞர்தமை=தனது அடியார்களின் பகை கொண்டவர்களை;
ஓடவிட்டே கை உலக்கைகொண்டெற்றி=தனது அதி பயங்கரமான வடுவைக்காட்டி அப்பயத்தால் அவரெல்லாம் ஓடும்படி செய்து, அவ்வாறு ஓடுபவர்களை தனது கைகளிலுள்ள உலக்கையால் அடித்து;
உதிரம் எல்லாம் கோடகத் திட்டு= (அவ்வாறு) அடிக்கும் நேரத்தில் அப்பகைவர்களின் தேஹத்திலிருந்து வீழும் இரத்தத்தை, கைகளிலுள்ள கமண்டலம் போன்ற பாத்திரத்தில் ஏந்தி;
வடித்தெருத் தூற்றிக் குடிக்கும்= (அந்த இரத்தத்தை, மாமிசம் எலும்பு போன்றவற்றை) வடித்து, கமண்டலத்தின் குறுகிய கழுத்தின் வழியாய், (அப்பாத்திரத்தின் வாய் வழியாக) குடித்து;
எங்கள் ஆடகக்கும்ப இணைக்கொங்கையாள்= (தனது என்று உரிமையாய் கொண்டாடுகிறார்) ஆடகப்பொன்னினால் செய்த முலைகளை – முகவும் கடினமான முலை-
எங்கள் அம்பிகையே= (தனது என்று உரிமையாய் கொண்டாடுகிறார்) தாயான வராகியம்மை செய்வாள் என்கின்றா கவிராஜர்
மந்திர விளக்கம்
பாடகச் சீறடி= ஶ்ரீகுரு பாதுகைகளின் த்யான- ஶிஞ்சன்னூபுர பாத பத்ம.
பஞ்சமி= நான்காவது பாடலிலுள்ளதைப் போல -பொருள் கொள்ளலாம்
உலக்கை = வராகியம்மையின் த்யானதிலுள்ளது- அரி கட்கௌ முஸலம் அபீதிம்
உலக்கைகொண்டெற்றி = வராகியம்மையின் அறுகோணத்திலுள்ள ஆவரண தேவிகளில் ஸாகினி யோகினியின் மந்த்ரத்தை நினைவுப் படுத்துகின்றது-
‘மம ஸர்வ ஶத்ரூணாம் அஸ்தி2 தா4தும் “ப4ஞ்சய ப4ஞ்சய”
உதிரம் எல்லாம் கோடகத் திட்டு வடித்தெருத் தூற்றிக் குடிக்கும் = மேற்கூறிய ஆவரணத்திலுள்ள ராகிணீ யோகினியின் மந்த்ரத்தை நினைவுப் படுத்துகின்றது-
மம ஸர்வ ஶத்ரூணாம் ரக்த தா4தும் ” பிப3 பிப3”
இரகசிய விளக்கம்
ஆடகம்= கிளிச்சிறை, சாதரூபம். ஜாம்பூன்னதம், ஆடக (ஹாடக) என நான்கு வகைப்பொன்னில் மாற்றுயர்ந்தது ஆடகம். பொன்னானது குருவைக் குறிக்கும், ஸ்தனங்கள் பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்யத்திற்கும் ஏதுவாம். ஆக குரு வடிவினளாயுள்ள தேவி அன்பர்களை ரக்ஷிப்பாள் என பெறப்படுகின்றது
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந்தோர்க்கு ஜெகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே (20)
பொருள்:
தாமக் குழலும் = மாலைகளணிந்த கழுத்தும் (கழுத்தானது குழல் வடிவாயுள்ளதால்)- தோள்கள் என பொருள் கொள்ளலாம்;
குழையும் பொன் ஓலையும்=இரு காதுகளில், வலத்தில் ஆண்களணியும் குழையும், இடத்தில் பெண்களணியும் பொன்னாலான ஓலைச்சுருள் போன்ற காதணியும் அணிந்து;
தாமரைப்பூஞ்சேமக்கழலும்=தாமரைப்பூ போன்ற மென்மையானதும் எல்லாவித நலன்களையும் தரும் கால்களும்;
துதிக்கவந்தோர்க்கு=இவ்வாறு த்யானம் செய்து துதிக்க செய்பவர்கள்;
ஜகம் அதனில்=இவ்வுலகில்;
வாமக்கரள்=அழகிய கைகளையுடைய;
அகளத்தம்மை= களங்கமற்ற உருவத்தையுடையவாளான ஆதிவாராஹி
வந்து= ஆதிவாராஹியம்மையே நேரில் வந்து;
தீமைப் பவத்தை= (அவர்கள்) செயல்களால் ஏற்படும் கொடிய வினைப்பயன்களை;
கெடுத்தாண்டு கொள்வாள்=இல்லாம செய்து, அவர்களை தனது திருவடி நிழலில் சேர்ப்பாள்
சிவசக்தியே= (ஏனெனில்) இவள் சிவசக்திகளின் ரூபமானவளாதலால் என்கிறார் கவிராஜர்
மந்திர விளக்கம்
சிவசக்தியே= அர்த்த நாரீஶ்வர மந்த்ரத்தை குறித்தது – ஹ்ஸௌம் ஸ்ஹௌ:
இரகசிய விளக்கம்
சிவசக்தியே= இப்படலில் எல்லாம் இரண்டிரண்டாக காணப்படுகிறத்- இரு தோள்கள், இரு காதுகள், இரு பாதங்கள், சிவ சக்திகளைக் குறிக்க குழை-ஓலை என்றகாதணிகள்.
ஆதிவாராஹி= ஸ்ருஷ்டியின் துவக்கத்தின் போது சிவசக்திகளாய் இருந்ததைக் குறிக்க “ஆதி” வாமக்கரள்/அகளத்தம்மை=அன்பர்கள் செய்யும் எல்லா செயல்களில் (பின் நின்று) அழகாக செய்து; அச்செய்களால் வினைப்பயன் கூடாமல் செய்து
பொன் ஓலை = பொன்னாலான இடது காதணி-பொன் குருவை குறித்து, இடது சக்தியை குறித்ததாம், காது உபதேஶத்தையும் குறித்ததாம். ஆக சக்திமந்த்ர தீக்ஷையை சுட்டுவதாய் கொள்ளலாம்
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவருடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள் கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே (21)
பொருள்:
ஆராகிலும் = யாரொருவர்;
நமக்கேவினை செய்யின்= அன்பர்களின் மீது (பகைமை கொண்டு) தீய-வினைகள் (கெடுதல்) செய்வாராகில்;
அவருடலும் கூராகும் வாளுக்கு இரை இடுவாள்=(அவர்கள் மீது சினம் கொண்டு) தனது கையிலுள்ள வாளிக்கு உணவாக்குவாள் (வெட்டி விடுவாள்)
கொன்றை வேணிஅரன் சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்= கொன்றை மலர்களையும் கங்கையும் தலைமீது அழகிய கிரீடத்திலணிந்த ஹரனாகிய சிவபெருமான்(காமேஶ்வரன்) திருவடிகளில் தனது திருவடியும் சேர்க்கும் திரிபுர சுந்தரியாகிய- இவ்வாறாகிய சிவ சக்தி ஸாமரஸ்யமான-ஐக்கிய ஸ்வ்ரூபத்தை;
வாராஹி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே = (தனது ஸ்வரூபமாய்) கொண்ட வராகியம்மை இங்கு வந்து எனது மனதில் குடியிருந்தாள் என்னை வாழ்வாங்கு வாழவைக்கவே.
மந்திர விளக்கம்
வாளுக் கிரைஇடுவாள்= வராகியம்மையின் த்யானதிலுள்ளது- அரி கட்கௌ முஸலம் அபீதிம்
வாள் = கட்க மாலா மந்த்ரங்கள்
கொன்றை= கொன்றைப்பூ பார்க்க பிரணவாகாரமாக இருக்கும்- அனவே ப்ரணமம், மேலும் இப்பூக்கள் சரமாய் தொங்கும், அதனால் மாலா மந்த்ரங்களும் குறிப்பதாய் கொள்ளலாம்.
வேணி= சிவபெருமான் தலைமீது கங்கை- எனவே கங்காதேவியின் மந்த்ரம்- ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் நமோ பகவதி அம்பிகே அம்பாலிகே மஹாமாலினி ஏஹ்யேஹி அஶேஷ தீர்த்தாலவாலே ஹ்ரீம் ஶ்ரீம் ஹம் வம் ஶிவஜடாதிரூடே கங்கே கங்காம்பிகே ஸ்வாஹா
கொன்றை வேணிஅரன் சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்= அர்த்த நாரீஶ்வர மந்த்ரத்தை குறித்தது – ஹ்ஸௌம் ஸ்ஹௌ
த்ரிபுரோபனிஷத்திலுள்ள ” ஸமப்ரதானௌ ஸமஸத்வௌ ” இங்கு காணலாம்:
இரகசிய விளக்கம்
கொன்றை வேணிஅரன் சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்= ஸ்ருஷ்டியின் முதலான சிவ-சக்திகளின் சேர்க்கையையும் காணலாம்
கொன்றை வேணிஅரன் சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்= இதனால் தீக்ஷையின் முதலான ஶாம்பவீ தீக்ஷையை குறித்ததாய் கொள்ளலாம்
தரிப்பாள் கலப்பை என் அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந்த்த தலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே(22)
பொருள்:
என் அம்மை வாராஹி=(தனது என்று உரிமையாய் கொண்டாடுகிறார்)
கலப்பை தரிப்பாள்= கைகளில் கலப்பையை தரிப்பாள்;
என் சத்துருவைப் பொரிப்பாள்= தனது கோபத்தீயினால் எதிரிகளை பொரித்து எடுப்பாள்
பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந்த்த தலை நெரிப்பாள்= அக்கோபத்தீயானது பொரிகளையுடையதாய் வெளிப்பட்டி, அவ்வெதிரிகளின் தலைக்ளும் பொரிக்கப் பட்டன;
தலைமண்டை மூளையத் தின்று= அவ்வாறு பொரிக்கப் பெற்ற தலையினுள்ள மூளையை உண்பாள்;
பின் நெட்டுடலை உரிப்பாள்= பின்னர் அவர்களின் தோலை உரித்து எடுப்பாள்;
படுக்க விரிப்பாள்= அத்தோலை தனது மஞ்சத்தில் விரிப்பாக கொள்வாள்;
சுக்காக உலர்த்துவளே= அதன் மீது (அத்தோலாசனத்தின் மீது) அமர்ந்திருந்து (தனது கோபத்தீயின் வெம்மையால்- இஞ்சியை உலர்ந்தது போன்று) சுக்கக உலர்த்துவாளே
மந்திர விளக்கம்
கலப்பை தரிப்பாள் = வராகியம்மையின் த்யானதிலுள்ளது- ஶங்க கேட ஹல வரான் கரை: ததானாம்;
மூளையத் தின்று= வராகியம்மையின் மந்த்ரத்திலுள்ள ஸ்தம்பனம் என்னுமாப்போல் உள்ளது
இரகசிய விளக்கம்
கலப்பை தரிப்பாள்= ஆறாவது பாடலின் விளக்கத்தில் காணலாம்
மூளையத் தின்று = மனதை அழித்து, இன்னிலையிலும் அகத்தில் எதிரிகள் இல்லாத நிலையை அருளி
சுக்கக உலர்த்துவாளே = மிகுந்த ஞான நிலையில் உடல் மறந்து போவது
ஊரா கிலுமுடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
பாரா கிலும் நமக் காற்றுவரோ? அடலாழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே(23)
பொருள்:
நமக்கு =வராகியம்மையை வழிபடுபவர்களுக்கு;
ஊராகிலும் = அவர்கள் வசிக்கும் ஊரிலுள்ளவர்களோ;
நாடாகிலும் =அவர்கள் வசிக்கும் நாட்டிலுள்ளவர்களோ;
உற்றவரோடு=அவர்களின் உறவினர்களோ;
பாராகிலும் = இவ்வுலகிலுள்ள எல்லாவருமோ;
உடன் அவர்க்கு ஆற்றுவரோ?= அவர்களுக்கு (வராகியம்மையை வழிபடுபவர்களுக்கு) துன்பம் வந்த உடனே அதன் தாக்கத்தைக் குறைக்க ஓடி வருவார்களா? இல்லையே!;
அடலாழி உண்டு = அலைகளையுடைய கடலிலிருந்து தண்ணீரை உறிஞ்சிய (உண்டு); காரார் கருத்த=, கருத்த மேகம் போன்ற நிறமுடைய;
உலக்கையும் உண்டு கலப்பை உண்டு= தனது கைகளில் உலக்கை கலப்பையுடைய; வாராஹி என்னும் = வராகியம்மை என்ற பெயர் உடைய;
மெய்ச் சண்டப் ப்ரசண்டவடிவிஉண்டே= உண்மையான (அன்புடைய) ஸகல சக்திகளும் உடைய அதிவேகமாய வரக்கூடிய வடிவம் உள்ளதே!
மந்திர விளக்கம்
அடலாழி உண்டு காரார் ; உலக்கையும் உண்டு கலப்பை உண்டு = வராகியம்மையின் த்யானதிலுள்ளது- பாதோதர மேசகாம் ; அரி கட்கௌ முஸலம் அபீதிம்; ஶங்க கேட ஹல வரான் கரை: ததானாம்;
சண்டப் ப்ரசண்ட= வராகியம்மையின் பரிவார ஆவரண தேவதையாயுள்ள சண்ட ப்ரசண்டனையும் குறித்ததாய் கொள்ளலாம்.
இரகசிய விளக்கம்
உலக்கையும் , கலப்பை= முன் செய்த வினைகள் விதைகள் போன்று உவமிக்க-படுவன. இத்தேஹம் விளை நிலத்திற்க்கு ஒப்பிடபடும். வராகியம்மை தனது கலப்பையினால் இத்தேஹம் என்னும் நிலத்தை சீர் செய்து, முன் வினைகளான விதைகளை தூவி, வித்திட்டு, முளைக்க செய்வாள். இதனால் அறிவது ஓரோ வினையும் பல் வேறு வினைகளுக்கு வித்தாகுமாம், அவைகள் மீண்டும் விதைகளாகும்- வினைகளுக்கு காரணமாகும். அப்போது அம்மை தனது உலக்கையினால், விதைகளின் உமியை நீக்கி – தான் செய்கின்றேன் என்ற எண்ணத்தை போக்கி- எல்லாம் அவள் செயல் என உணர்வில் நிறுத்தி, அன்பர்களை காப்பாற்றுகிறாள்.
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே (24)
பொருள்:
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள் கடகாழிசங்கம் வலக்கை இடக்கையில் வைத்த
வாராஹி= வராகியம்மையின்
எண் கரங்களிலுள்ள ஆயுதங்களை= உலக்கை கலப்பை மிகுந்த ஒளிவீசும் வாள், கேடயம், அலலுற்பிறந்த சங்கு, சக்கரம் வலக்கையிலும் இடக்கையுலும் (அபய வரத முத்ரைகள்);
என் மாற்றலர்கள்= எனது எதிரிகள்;
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும் = அவர்களுடன் எண்ணிக்கையில்லாத பெரும் சேனைகளுடன் எதிரில் வந்தாலும்;
விலக்கவல்லாள் = அவர்களி அடியாரில் அருகில் வரவிடமாட்டாள்;
ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே= இவ்வாறு உள்ள, மிகுந்த மெல்லிய பாதத்தை உடைய எம்மம்மையை விரும்புக என மனத்திட கூறுகின்றார்
மந்திர விளக்கம்
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம் வலக்கை இடக்கையில் வைத்த வாராஹி = வராஹியம்மையின் த்யான சுலோகத்திலுள்ள அதே உருவம்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்கவல்லாள்= ஸ்தம்பனம் உச்சாடனம் முதலிய மந்த்ரங்கள்
இரகசிய விளக்கம்
வராஹியம்மையின் த்யான சுலோகத்திலுள்ள அதே உருவ த்தை மனதின் கண் இருத்துபவர்களுக்கு அகச்சத்ருக்களால் வரும் துயர் யாவும் அவளையே குருவாகவும் அக்குருவின் பாதத்தை நினைக்கும் போது விலகிவிடும்
தஞ்சம்உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்டு
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே (25)
பொருள்:
திரிபுரை= முப்புரங்களும் ஆளும் அம்மையாம் திரிபுர ஸுந்தரியே;
ஆனந்தியே = ஆனந்தத்தின் உருவமே ;
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர் = தாயே நீயே கதி என்று உனது பாதத்தில் சரணாகதி செய்பவர்களிடம்;
மேல் வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் = நம்பிக்கை துரோகம் செய்து , மந்த்ர உச்சாடணங்களினால் வசப்பட்ட துர்தேவதைகளைக் கொண்டு
மறைமுகமாக தாக்கி ;
வைத்தவரை = ‘அவ்வாறு’ செய்பவர்களை;
நெஞ்சம் பிளந்து= (தனது) கைகளிலுள்ள கத்தி முதலிய ஆயுதங்களால் தாக்கி , அவர்கள் நெஞ்சத்தை பிளர்ந்து;
நிணக் குடல் வாங்கி=(அவ்வாறாய்) பிளர்க்கப்பட்ட நெஞ்சகத்தினுள்ள இரத்தம் கலர்ந்த குடலை உருவி; நெருப்பினில் இட்டு
அஞ்சக் கரம் கொண்டு அறுப்பாள் = குடலை அறுத்து (தனது கோபத்தீகனலால்) பொசுக்குவாள்
மந்திர விளக்கம்
சார்ந்தவர்மேல் வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரைநெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி= துர்மந்த்ரவாதங்களினால் ஆபிசாரம் செய்பவர்களை முழுவதாக அழிக்கும் சக்திஸ்வரூபமான ப்ரத்யங்கிரா மந்த்ரங்கள்
இரகசிய விளக்கம்
இப்பாடலில் வேறு தலத்தில் காணலாம்.” தஞ்சம் உன் பாதம் சரணா கதி”-“ சூனியம்” என்பன அடியார்கள் ஆழ்ந்த தியான நிலையில் பெறும் அனுபவமான சூன்ய- வெற்றிடமான அவஸ்தை, மந்த்ர ஜபங்களில் ஐந்து சூன்யங்களை கடக்க வேணுமாய் கூறப்பட்டுள்ளது, அடுத்த நிலையில் தேஹத்தின் உணர்வு ஏற்பட வேண்டும், அதுவே உடல் பற்றிய வர்ணணையாம். மிகுந்த கருணையுள்ள தேவி பக்தரை ஓரோரு நிலையிலுமுள்ள சூன்யாவஸ்தைகளை கடத்த உடனிருந்து உதவுவாள் என்கிறார்.
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனை நினை யாதவரே (26)
பொருள்:
நேமிப் படையாள்= சக்ரத்தை தனது ஆயுதமாய் கொண்ட தேவி
தனை நினையாதவரே = இவளை நினைக்காதவர்கள்;
அலைபட்டு= வாழ்க்கையில் அலைகடலில் துரும்பென அகப்பட்டு, தத்தளித்து;
நெஞ்சம் அலைந்து=மனம் குழம்பி;
அலகைக் கையால்= கொடிய பேய்களின் கையில்;
அகப்பட்டு= மாட்டிக்கொண்டு;
உயிர் சோர= உயிர் போகும்படி;
கொலைபட்டு= கொலை செய்யப்பட்டு;
உடலம்= அவர்களின் உயிர் நீங்கிய உடல்;
கழுகுகள் சூழ= பிணம் தின்னும் கழுகளால் சூழ்ந்து கொத்தி குதறப்பட்டு;
குருதி பொங்கி= அவ்வாறு குதறும்போது இரத்தம் வெளிப்பட்டு;
தலைகெட்டு= தலை தனியா;
அவயவம் வேறாய்= உடல் வேறாக, மற்றும் அங்கங்களும் வெவ்வேறாக பிரிக்கப்பட்டு;
பதைப்புற்று= மனதில் சஞ்சலத்தோடு;
சாவர்= உயிர் துறப்பார்கள்;
கண்டீர்= என கண் கொண்டு காணலாம்
இவ்வாறு பயங்கரமான முடிவு தேவியின் அன்பர்களுக்கு இல்லை என கூறவே, அதன் மற்றொரு பக்கமான பயங்கர காட்சிகளை கூறினார். அபிராமி அந்தாதியிலும் – “பிணியே பிணிக்கு மருந்தே” என கூறியது தேவியை நினைக்காதவ்ர்களுக்கு பிறவி பிணி, பாப புண்ய சுழலில் அகப்படுதல் உண்டு என்றே கூறி, இவ்வாறல்லாமல் இருக்க தேவியை சரண் புகுவதே வழி என “மருந்து” என்னுமாப்போலே, இப்பாடலிலும் கூறியது.
மந்திர விளக்கம்
நேமிப் படை= வராகியம்மையின் த்யானதிலுள்ளது- அரி கட்கௌ முஸலம் அபீதிம்
நேமிப் படை= ஸுதர்ஶன மந்த்ரம்
கழுகு = பக்ஷிராஜரான கருட மந்த்ரம்
இரகசிய விளக்கம்
நேமிப் படை= மூலாதாரம் முதல் உள் சக்ரங்கள் ஆறும், அதன் வழி தேவியின் தியானமும் கூறப்பட்டது. இம்மாதிரி உபாசனையின் போது ஏற்படும் அனுபவங்களும், அதீத சரீர க்லேசங்களும், தேவியே குரு வடிவாய் வந்திருந்து காப்பாள் என்கிறார்.
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்திபகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹி நற் பொற்கொடியே (27)
பொருள்:
சிந்தை தெளிந்து= நன்றாக ஆலோசித்து மனத்தில் ஆராய்ந்து;
உனை வாழ்த்திப் பணிந்து = தான் படும் துயர்களுக்கு எல்லாம் தீர்வான இவ்வம்மையின் உபாசனையை கைக்கொண்டு;
தினம் துதித்தே= தினம் தோறும் விடாமுயற்சியுடன்;
அந்திபகல்= நள்ளிரவு வரையிலுள்ள இவ்வம்மையின் உபாசனா காலத்தில்;
உன்னை அர்ச்சித்த பேரை= உள்ளன்போடு ஆவரண பூஜைகளால் குரு உபதேச க்ரமத்தில் வணங்கி;
அசிங்கியமாய் நிந்தனை பண்ணி = இவ்வழிபாட்டிலுள்ள பஞ்சமகாரங்களின் உபயோகத்தை தத்துவமறியாது அவதூறாய் கேலி பேசி;
மதியாத=தனது மனத்தால் ஆராயாமல் புறங்கூறி;
உலுத்தர்= மனதின் கண் எள்ளளவும் இரக்கமில்லாத, வறண்ட;
நிணம்= இரத்தத்தை; அருந்தி= குடித்து;
புந்தி மகிழ்ந்து வருவாய்= இவ்வாறு செய்வதால் மனதில் மகிழ்ச்சியடையும்;
வாராஹி நற்பொற்கொடியே= நல்ல பொன்னிலால் செய்த கொடி போன்ற வாராஹி அம்மையே , உன்னை வாழ்த்துகின்றேன்.
மந்திர விளக்கம்
அந்திபகல்= வராஹியம்மையின் பூஜா காலம் நள்ளிரவு வரையிலுமாம், -‘ராத்ரௌ வாராஹீ’ என்கிறது பரசுராம கல்ப ஸூத்ரம்.
இரகசிய விளக்கம்
விடாமுயற்சியுடன் நள்ளிரவு வரையிலுள்ள இவ்வம்மையின் உபாசனா காலத்தில் உள்ளன்போடு ஆவரண பூஜைகளால் குரு உபதேச க்ரமத்தில் வணங்குவதை குறித்தார் கவிராஜர்
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்துமெனது
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவாலெனக் கொல்வாய் வாராஹி என் நிர்க்குணியே (28)
பொருள்:
பொருப்புக்கு மாறு செய் = பெரிய மலைக்கு நேர் எதிரானது;
ஆழியும் தோடும்= நீர் நிலைகளும் அலைகடலும்- பெரும்மலையானது கடினமாயும் ஓரிடத்தே நிலைத்து நிற்றலையும் குறித்தது, மாறாக நீர் நிலைகளும் கடலுமானது பெரும் பரப்புமுடையதாயினும் நிலையில்லா உருவமாயும் வெவ்வேறு வடிவங்களை எடுப்பதாயும் காண்கிறோம்;
பொருப்பை வென்ற= மலைபோன்ற அசையாத மனமுடைய சிவபெருமாநின் மனமானது அசையும் படியாய் செய்த (தோற்கடித்த);
மருப்புக்கு நேர் சொலும் கொங்கையும் மேனியும் = யானைதந்தத்தின் கடினமும், மேல் எழும்படியாகவும் உள்ள மார்பகங்களும், யானை தந்தத்தின் மென்மை போன்ற மேனியும் உள்ள தேவியானவளை;
வாழ்த்துமெனது= மனதால் உள்ளன்போடு வணங்கும்;
இருப்புக் கடிய மனதில் குடி கொண்டு = அன்பர்களின் இரும்பினால் செய்யப்பட்டது போன்ற இருதயத்தினுள் வந்து இருந்து;
எதிர்த்தவரை= இத்தேவியின் வழிபாட்டிலுள்ள வழிமுறைகளை அறியாமல், சிற்றறிவால் இப்பூஜைகளை எதிர்க்க துணிந்தவர்களை;
நெருப்புக்கு வால் எனக் கொல்வாய்= அனுமனின் வாலுக்கு நெருப்பு வைக்க சொன்ன இலங்கை அதிபதி போல், அவர்கள் வைத்த நெருப்பே அவர்களின் மாட மாளிகைகளை எரித்தாற்போன்று, எதிர்த்தவர்களின் செயல்கள் அவர்களுக்கே வினையாய் தீரும்;
வாராஹி என் நிர்க்குணியே = இவ்வணைவற்றையும் செய்யும் என்னம்மை வராகி குணங்களை கடந்தவளாம், ஆதலால் இச்செயல்களினால் அவளுக்கு ஓர் குறைவும் இல்லை.
மந்திர விளக்கம்
பொருப்பைவென்ற = காமதேவனின் மந்தர்ங்கள்
மருப்பு = கணேச மந்தர்ங்கள்
நெருப்புக்கு வால் = அனுமனின் மந்தர்ங்கள்
இரகசிய விளக்கம்
வராகியம்மையை பூஜிக்க துவங்கினால் கல் / இரும்பு போன்ற மனமும் இளகும். அன்பு பொங்கும்
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட்டவர்க்கு வினை வருமோ? நின் அடியவர்பால்
மாறிட்டவர்தமை வாள் ஆயுதம்கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குல தெய்வமே(29)
பொருள்:
தேறிட்ட= நன்றாக ஆராய்ந்துஎடுக்கப்பட்ட உறுதியான முடிவான;
நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து= அம்மையாம் வராகியின் தாமரை போன்ற பாதங்களை வணங்கும் பூஜா முறைகளை செய்து;
நீறு இட்டவர்க்கு= அப்பூஜா ப்ரசாதத்தை எடுத்துகொள்பவர்களுக்கு (அணிபவர்களுக்கு- இங்கு நீறு என்பது பூஜா ப்ரசாதம் என கொள்ளலாம்);
வினை வருமோ? = அவர்களின் முன் வினைகள் தாக்குமோ? என கேள்வி எழுப்பி அவ்வாறு தாக்கினாலும் தேவி அதை தாங்கும் சக்தியை தருவாள் என மறைமுகமாக உரைக்கின்றார்;
நின் அடியவர்பால் = அவ்வினைகளானது தேவியின் அடியார்களுக்கு ஏற்படும் காரணமறியா துன்பங்களும்,
மனக்லேசங்களுமாய் காணும் போது; மாறிட்டவர் தமை= அச்செயல்கள் இவ்வழிமுறைகளை அறியாமல் தூற்றுபவர்களின் மூலம் வரச்செய்து;
வாள் ஆயுதம்கொண்டு வாட்டி= வாளால் அத்துனப்ங்களை வெட்டி=
இரு கூறிட்டு= அவர்கள் உடல் இரு துண்டுகளாய் ஆகுமாறு செய்து;
எறிய வருவாய் வாராஹி குல தெய்வமே = இவ்வாறாக செய்வதற்கு தேவி பரம்பரையாக வரும் பழக்க வழக்கங்களை அனுசரித்து நமக்கு வழிகாட்டும் குரு ரூபமாய் வருவாள்.
மந்திர விளக்கம்
வாள் ஆயுதம்கொண்டு வாட்டி= வராகியம்மையின் த்யானதிலுள்ளது- அரி கட்கௌ முஸலம் அபீதிம்
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை= பூஜா பத்ததி
வாராஹி குல தெய்வமே= வாராஹியின் பன்னிரு நாமங்களில் – குல ஸங்கேத பாலினீ
இரகசிய விளக்கம்
மனதில் நன்றாக ஆரயந்து, நிச்சயித்து இப்பூஜா முறைகளை பரம்பரையாக குரு மூல தெரிந்து செய்யும்போது வரும் துன்பங்களை ஞானமாகிய வாள் கொண்டு- இவைகள் எல்லாம் புண்ய பாபங்களின் விளைவே, இரண்டும் அனுபவித்தே தீர்க்க வேண்டும், அவ்வனுபவத்தை தாங்கும் சக்தி தரும் குருரூபமாய் தேவி உள்ளாள் என்கிறார்.
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே (30)
பொருள்:
நரிபரி ஆக்கிய=காட்டிலுள்ள நரிகளை தனது அடியாருக்காக குதிரைகளாக்கிய ( திருப்பெருந்துறையுள் மாணிக்க வாசகருக்காய் குரு ரூபமெடுத்து குருந்த மரத்தடியில் ஞானோபதேசம் செய்து) ;
சம்புவின் பாகத்தை நண்ணிய மான்=மங்களமான சிவ் பெருமானின் இடது பாகத்தை சரிபாதியாக அடைந்து மேலும் மங்களமான அர்த நாரீஶ்வர வடிவானவளான தேவி; அரி-அயன் போற்றும்= திருமாலும் பிரம்மனும் துதிக்கும்;
அபிராமி = மனத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும், அழகான வடிவினளான அம்மை;
தன் அடியார்க்கு முன்னே ஸரியாக நின்று தருக்கம்= இவளை வழிபடும் அடியாரிடத்து சரிக்கு சமமாய் நின்று வீண் வாதம் செய்யும்;
செய் மூடர் தலையை வெட்டி= அறிவில்லாத மூட மனிதர்களின் தலையை வெட்டி;
எரியாய் எரித்து விடுவாள் = (தனது கோபத்தீயினால்) எரித்து சாம்பலாக்கிவிடுவாள்;
வாராஹி எனும் தெய்வமே= அருள் நிறைந்த சக்தியாம் வராகியம்மை.
மந்திர விளக்கம்
சம்புவின் பாகத்தை நண்ணியமான்= அர்த நாரீஶ்வர மந்த்ரங்கள்
அரிஅயன் போற்றும் அபிராமி= மஹாவிஷ்ணுவும் பிரமனும் உபாஸித்த திரிபுர ஸுந்தரீ மந்த்ரங்கள்
அடியார்க்கு முன்னே ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி= தலையை வெட்டி என்பது பேச்சை நிறுத்தி என்பதின் உருவகமாய் கொண்டால் நகுலீ வித்யையை குறித்ததாய் கொள்ளலாம்
இரகசிய விளக்கம்
நரி என்பது ஒழுங்காக விடாத, சீராக இல்லாத, மூச்சின் இடுகுறியாம், பரி என்ற குதிரை கட்டுப்படுத்தப்பட்ட சீரான மூச்சின் உருவகமாம், மாதொருபாகனின் மானுட வேடம் குருவாம், ஆக குரு உபதேசத்தால் மூச்சடக்கி ப்ராணாயமம் செய்து அதனால் மனக்கட்டுப்பாடு எய்தி, தேவியின் த்யானம் கைகூடலை தெரிவித்தது.
தருக்கம் செய்யும் மூடர், நமக்குள்ளேயே ஏற்படும் சந்தேகங்களாம், தலையை வெட்டி என்பது, அடியாரின் மனத்தினுள் ஏற்படும் குதர்க்க ரீதியான குழப்பங்களை ஞான அனுபவத்தால் அழிப்பதாம்
வீற்றிருப்பாள் நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே(31)
பொருள்:
நவ கோணத்திலே வீற்றிருப்பாள்= கீழ் நோக்கிய இரு முக்கோணமும் மேல் நோக்கிய ஒரு முக்கோணமும் இணைந்து நடுவில் ஒன்றும் சுற்றி எட்டுமாக ஒன்பது கோணங்களின் நடுவில் திரிபுர ஸுந்தரியாக அமர்ந்திருப்பாள்;
நம்மை வேண்டும் என்று கலி வந்தணுகாமல் காத்திருப்பாள்= அடியார்களானவர்களை கலி புருஷன், தனது வலிமையும் அதிகாரத்தையும் காட்டவே, இக்கலியில் ஏற்படும் எல்லாவித கட்டுபாடுகள் உடைக்கும் படி மனத்தை தூண்டி, ஆசாரத்தை குலைத்து, மீளா பாபக்குவிலயலை ஏற்படுத்தி- இது கலியின் கால விஶேஷமே,
என் கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள்=இவ்வாறு ஏற்பட்டு அடியார்கள் உள்ளம் கலங்கும் வரைக்கும் காத்திருக்க மாட்டாள் அம்பிகை;
எங்கே என்று அங்குச பாசம் கையில் கோத்திருப்பாள்=எங்கே எப்போது என்று பார்த்து, அவ்விடத்தில் தனது கைகளிலுள்ள அங்குஶத்தால், யானை போன்ற பெரும் வலிமையுடையவைகளை அடக்குமாற் போன்றும் கலி புருஷனின் பெரும் தாக்குதலை அடக்கி, பாசக்கயிற்றால் கட்டி;
இவளே என்னை ஆளும் குலதெய்வமே= இவ்வாறு செய்பவளாம் அம்மை வராகி பரம்பரையாக வழிபடப்படுவளாம்
மந்திர விளக்கம்
நம்மை வேண்டும் என்று கலி வந்தணுகாமல் காத்திருப்பாள்= கலிகல்மஷ நாஶினீ – லலிதா ஸஹஸ்ர நாமம்; கலிதோஷஹரா = லலிதா த்ரிஶதீ
என் கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள்= துர்காதேவீ- துர்காத் ஸம்த்ராயதே துர்கா
அங்குச பாசம் கையில் கோத்திருப்பாள்= ராக ஸ்வரூப பாஶாட்யா, க்ரோதாகா ராங்குஶொஜ்ஜ்வலா, பாஶஹஸ்தா, அங்குஶாதி ப்ரஹரணா- லலிதா ஸஹஸ்ர நாமம்
இரகசிய விளக்கம்
நவகோணத்திலே வீற்றிருப்பாள்= ஒன்பது ஓட்டைகளுடைய இத்தேஹத்தினுள் அறியப்படுபவள்- அஷ்டா சக்ரா நவத்வாரா தேவானாம் பூரயோத்யா- அருண ப்ரஶ்னம்
குரு பரம்பரை வழியான பூஜா முறைகளை செய்வபர்களுக்கு, கலியின் தாக்கத்திலிருந்து குரு ரூபமாய் காப்பாள் அம்மை.
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரி நல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே (32)
பொருள்:
சிவஞான போதகி=சிவ ஞானமானது அறிவும் அனுபவ வடிவமுமாம், அவைகளை போதிக்கும் குரு வடிவினள்;
செங்கைக்கபாலி= தனது ஸ்வாமிடான சிவபெருமானைப்போன்று கைகளில் கபாலமும் தரித்திருப்பாள்-கால ஸங்கர்ஷணீ ரூபம்; திகம்பரி=ஆடையற்ற நிலையிலுள்ளவள்- ஆடை ஸ்வரூபத்தை மறைத்தலைக்குறிக்கும், தனது உண்மையானவ ஸ்வரூபத்தில் மறைப்பிலாத ஞானமுடையவள்- அவ்வாறான ஞானத்தையும் அருள்பவள்- முன் கூறிய காலஸங்கர்ஷணீ தேவியும் இவ்வாறே;
நல்தவம் ஆரும் மெய் அன்பர்க்கே= குரு கூறியவாறு பூஜா க்ரமங்களைப்பின்பற்றும் – இதுவே தவம் என்கிறார்- அடியார்களுக்கு;
இடர் சூழும் தரியலரை= அவ்வடியார்களின் ஸாதனையை தவறாக புரிந்து கொண்டு மனதில் பகையை வளர்த்து அவர்களின் செயல்களுக்கு இடையூறு செய்யும்;
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் = அச்செயல்களை ஸாதாரண நிகழ்ச்சியாக மாற்றும் படி தனது கணங்களை ஏவி, அவ்விடைகள் அடியார்களுக்கி மாலை போன்று, பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிகளாய் மாற்றி(அபிராமி பட்டருக்கு நிகழ்ந்தது போன்று)
அகோரி= [மெய்யன்பர்க்கே= அன்பர்களுக்கு அ-கோரி – கோரமில்லாத அழகான வடிவமும், மனதில் மகிழ்ச்சியும் உண்டாக்குபவள்]-
தரியலர் =பகைவர்களுக்கு- அ(தி)கோரி – மிகவும் பயங்கரமான கோர உருவமெடுத்து மனதில் பய பீதிகளை உண்டாக்குபவள்];
இங்கு நலமாக வந்து எனைக் காக்கும் = இகத்திலே, இப்பிறவியிலேயே நம்மை காத்து,;
திரிபுர நாயகியே = லலிதாம்பிகையான திரிபுர ஸுந்தரியாம்.
மந்திர விளக்கம்
சிவஞான போதகி= சிவஞான ப்ரதாயினீ- லலிதா ஸஹஸ்ர நாமம்
செங்கைக் கபாலி = காலஸங்கர்ஷணீ மந்த்ரங்கள்
அகோரி- அகோர மந்த்ரங்கள்
திரிபுர நாயகி = திரிபுர ஸுந்தரீ மந்த்ரங்கள்
இரகசிய விளக்கம்
தேஹமே தேவாலயம் என்பது ஆன்றோர் துணிபு, இதை அறிய மேற்க்கொள்ளும் வழியே உபாசனையாம். கவிராஜர் ஶ்ரீவித்யா உபாஸனையை பரஶுராம கல்ப ஸூத்ரத்தின்படி செய்தவர், அவ்வுபாஸனையோ ஸுத்ரதின்படி ஐந்து தேவதாரூபங்களைக் வழிபடக்கூறும். ஶ்ரீகணேஶர், லலிதாம்பிகை, ஶ்யாமளை, வாராஹீ மற்றும் பராபட்டாரிகா என ஐவரைக் காண்கின்றோம். இவர்களின் வழிபட வேண்டிய நேரங்களும் அதில் காணலாம், முற்பகலில், லலிதாம்பிகையும், பிற்பகலில், ஶ்யாமளையும், இரவில் வராகியும், விடியலில்- ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் பராபட்டாரிகையும் வழிபடுமாறு கூறுகின்றார் பரசுராமர். அதில் வாராஹியைக் கூறும்போது ‘ நிக்ரஹானுக்ரஹ க்ஷம:’ (பகைவரை) அழித்தலிலும் (பக்தரை) காத்து அருளுதலிலும் மிகுந்த தேற்ச்சியுடையாள் என்கிறார். பாவனோபனிடதமோ ’வாராஹீ பித்ருரூபா’ என்கிறது. பிதாவிலிருந்து தான் இவ்வுடல் வந்ததென நமது சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. ஆக வாராஹியம்மை ஸ்துலமான இவ்வுடலால் குறிக்கபெற்றாள் என துணியலாம். வெறும் உடலிருந்தென்ன பயன், உயிர் வேண்டுமல்லவா-
அதைக்குறித்ததே ஶ்யாமளையாம் ஸங்கீதயோகினீ- நமது உடலிலுள்ள ஹ்ருதய துடிப்பாம். லலிதாம்பிகையோ- ஸதானந்த ஸ்வாத்மைவ பரதேவதா லலிதா’ ஆனந்தாமான ஆத்ம ரூபமானது, இது அனுபவபூர்வமானது, ஆயின் இதற்கெல்லாம் ஆதாரம் உடலே-ஶரீரம் ஆத்யம் கலு தர்மஸாதனம்- உடலே எல்லா செயல்களுக்கும் ஆதாரம். ஆக முன்னர் வராகியை வழிபடுவதே ஶ்ரீவித்யோபாசனையின் முதல்படி. எனவே ஶ்ரீகவிராஜர் இம்மாலையை தேவிக்கு அணிவித்தார். அதன் மணிமுடியாய் லலிதாம்பிகையின் குறிப்பை கடைசியில் வைத்தார்
ஶ்ரீகவிராஜர் இவ்வெல்லா செய்திகளையும் இப்பாடல்களில் வைத்துள்ளார். இரவில் வராகி- என்பது பல்வேறு காட்சிகளாய் காணலாம்: இரவிலுள்ள பேய், பிசாசுக்கள், காளி முதலிய இரவில் வழிபட்ப்பெறும் தெய்வங்கள். ‘நிக்ரஹானுக்ரஹ க்ஷம:’- மிக்க பாடலிகளிலும் பகைமுடித்தலும் அன்பர்கருளுதலும் காணலாம். இவ்வாறு வழிபடபெற்ற தேவி, காலத்தால் ஆனந்த அனுபவமான லலிதாம்பிகையாய் அனுக்ரஹம் செய்வாள் என பாடல்களை ஸமர்ப்பணரூமாய் படைத்தார்.
இப்பாடல்கள் அனுதினமும் கூற வராகியம்மையின் அருள் பெருகும். துயர் துடைக்கப்படும், மனதில் நிம்மதி தோன்றும்.
மேலும் இப்படல்களின் பொருளுணர காரணமான ஶ்ரீகவிராஜரை அன்புடன் வணங்குகின்றேன்.
இப்பாடல்களின் ஆய்வு நிறைவான இன்று (22-06-2020) ஆஷாட நவராத்ரியின் முதல் நாளாய் அமைத்த கருணையை எவ்வாறு கூறுவேன்…