ஸ்ரீ அம்ருதானந்த யோகி
முன்னுரை
காணப்படும் உலகம் இரு கூறுகளாக வருணிக்கப்ப்டும். சித், ஜடம் என்பவையே இவ்விரு கூறுகளும். யாவரும் இவ்விரு கூறுகளையும் பொதுவாக அறிவர். ஆனால் இவ்விரு கூறுகளின் உண்மை நிலையைத் தெளிவாக உணர்ந்தவர்கள் வெகு வெகு சிலரே. உணர்ந்தவர்களுள்ளும் தங்கள் வாழ்விலே உண்மையுணர்வு விளங்கப் பெற்றவர்களாக வாழ்பவர்கள் அரிதினும் அரிதாகவே உள்ளனர். சித்-ஜடம் என்ற வேறுபாட்டைப் பற்றிய நூல்களில் ஆழத்திளைத்தவர்கள் இடையிலும், தங்கள் வாழ்வில் உண்மையுணர்வே வடிவினராய்த் திகழ்பவர் அருகியே உள்ளனர். காரணம்? நூல் உணர்வு மட்டும், மானுட அறிவைக் கருவியாகக் கொண்டு ஆராயும் ஆரசாய்ச்சியுணர்வு மட்டும், உண்மையுணர்வு வடிவாம் வாழ்வில் ஒருவன் விளங்குவ தற்குப் பயன் படுவதில்லை. நான் என்றமுனைப்புணர்வு கழன்ற இடத்தில் உண்மையுணர்வு மிளிர்கிறது. முனைப் புணர்வு அதுவாக நீங்க வேண்டும. முனைப்புணர்வை நீக்க முடியாது. முனைப் புணர்வை நீக்குவதற்கு முயலும் போது, முனைப்புணர்வின் பழைய வடிவத்தை ஓட்டிவிட்டு, புதிய ஒரு வடிவத்தில் மறுபடியும் முனைப் புணர்வே தலையோங்கி நிற்கத் தொடங்குகிறது. எந்த வடிவத்தில்நின்றாலும் முனைப் புணர்வு முனைப்புணர்வே. முனைப்புணர்வு புதிய ஒரு வடிவத்தைஏற்றுவிடுவதால் உண்மையின்பம் தோன்று வதில்லை. உண்மையின்பமேஉண்மையுணர்வுமாம். ஆகவே, ‘எவ்வடிவத்திலாயி னும் முனைப்புணர்வு இருக்குமாயின்அப்பொழுது உண்மை யுணர்வு வடிவான வாழ்வு இல்லை’. ஆயின், உண்மையுணர்வுவடிவாக ஒருவன் வாழ்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்ற வினா எழுகிறது. அவ்வினாவிற்கு என்ன விடை கூறுவது? வழி என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. எல்லா வழிகளுமே உண்மையுணர்வை மூடும் வழிகளே உண்மை யுணர்வைமறைக்கும் வழிகளே ஒரு குறிப்பிட்ட வழியைப் பின்பற்றுவதனால் உண்மை யுணர்வு அசையப்படுவதில்லை, உண்மையுணர்வு அடையப்படும் பொருள் அல்ல, அடையப்படும் பொருள் எல்லாம் அழியும் இயல்பு டையதாக உள்ளது எளிதில் அறியதக்கதாம்.உண்மையுணர்வு அடை யப்படும் பொருளக இருப்பின். அப்பொழுது அதுவும் ஒரு சமயம் அழிவதாக முடியும். அழியும் தன்மையுடைவதாக , உண்மையுணர்வு ஆகிவிடுமாயின், அது உண்மை இன்பம் அன்று; வந்து போகின்ற தன்மையுடைய இன்பமாகவே அமைந்துவிடுகிறது. வந்து போகின்ற பான்மையதான இன் பத்தைத்தான் யாவருமேஉலகில் அவ்வப் பொழுது அடைகின்றனரே ஆனால் உண்மையின்பமோ போக்குவரவுகளாம் நிலைகளுக்கு அப்பாற்படதாக உள்ளது. உடலின்பம், பொறியின்பம், வீறு-இன்பம், மன இன்பம், அறிவின்பம், துக்கவின்பம், மயக்க இன்பம் ஆகிய இன்பங்களெல்லாம் வந்து போகும் பான்மை யன. உண்மையின்பம் புதிதாக வருவதொன்றில்லை. ஆகவே, வந்த பொருள் போவது போல் உண்மையின்பம் போவதுமில்லை, உண்மையின்பத்தை அது இத்தகையது என்று படம்பிடித்துக் காட்டுவதற்கு வேத புருஷனுக்கும் ஆற்றல் இல்லை. அதாவது விண்ணவர் மொழியோ, மண்ணவர் மொழியோ, அல்லது வேறு எந்த மொழியுமோ உண்மையின்பத்தின் தன்மையை, உண்மையுணர்வின் பெம்மையை, இத்தகையது-அத்தகையது என்று கூறுவதற்கு ஆற்றலுடையதாகாது. மொழியைக் கடந்தது உண்மையின்பம், ஆதிமறைகளும், திருமுறைகளும்கூட உண்மையின்பத் தின் தகைமையை, பெம்மையை எடுத்தி யம்புவதற்கு முடியாமல் திகைக்கின்றன. எனில், மற்ற மொழிகளுக்கு அது இயலாது என்று கூறவேண்டுமோ? மொழியின் வரம்பு கடந்த தாயின், மனத்தின் நுட்பமாண ஆற்றலைக்கொண்டு உண்மை யுணர்வை – உண்மையின்பத்தைக் கருதிப்பார்க்க இயலுமோ? அதுவும் இயலாது, மனத்தின் வெகு வெகு நுட்ப மான கருத்துக்களுக்கும் புலப்படாததாகவே உள்ளது உண்மையுணர்வு. மனம் ஆட்சி புரிகிற இடத்தில்-அம்மனம் எவ்வளவு நுண்ணிய வடிவமுடையதாக இருப்பி னும்-உண்மையுணர்வு புலப்படுவதில்லை. உண்மையுணர்வில் வாழ் பவனுக்கு மனம் இல்லை. மன உணர்வில் வாழ்பவனுக்கு உண்மை யுணர்வு வாழ்வில்லை.
மனம் என்பது அந்தக்கரணம் என்ற உட்கருவியின் ஒரு பகுதியே ஆகும். அங்ஙனமே புத்தியென்பதும் அந்தக் கரணத்தின் ஒரு பகுதியே, சித்தம், அஹங்காரம் ஆகியவையும் அந்தக்கரணத்தின் பகுதிகளே. ஒரு கட்டடத்தில் உள்ள நான்கு அறைகளைப்போல், உட்கருவியின் நான்கு பகுதிகள் இருக்கின்றன என்று கொள்ளுதல் கூடாது. ஆற்று வெள்ளத் தைப் போல உட்கருவியைக் கொள்ளவேண்டும். வெள்ளத்தில் எப் பகுதியும் நீர்தான்; அதுபோல் உட்கருவியின் எப்பகுதியும் நான் என்ற முனைப் புணர்வுதான்; இதுதான் அஹங்காரம் ஆகும். அஹங் காரம் என்ற சொல் சாதாரண வழக்கில் கர்வம் முதலிய பொருள்களில் கொள்ளப்படுகிறது. தடித்த, முறுக்கேறிய அஹங்காரமே கர்வம் முதலானதாகிறது. ஆனால் இங்கு நான் என்ற உணர்வு மாத்திரம் (mere ego consciousness) அஹங்காரம் எனப்படுகிறது. வெள்ளத்தின் ஸ்வரூபமான நீர் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்களாலானது; உட் கருவியின் ஸ்வரூபமான அஹங்காரம் பலகோடி வாசனைகளின் மூட்டையாகும், ஆனால் எல்லாவாசனைகளுமே எப்பொழுதுமே உறுப் பெறுவதில்லை; தொழிற்படுவதில்லை. உறுப் பெறாத, ௧ரு நிலையில் (embryonic condition) உள்ள வாசனைகள் எண்ணிலடங்கா; அவைகளே சித்தம் என்ற பகுதியாகும். உறுப்பெற்ற, தொழிற்படும் நிலையையுற்ற வாஸனை, இப்பொழுது அதற்கு வாஸனை என்ற பெயர் இல்லை, மனம் ஆகிறது. வெள்ளத்தின் அடிப்புறத்தில் உள்ள பகுதியெல்லாம் உட்கருவியின் சித்தத்திற்கு நேராகிறது. வெள்ளத்தின் மேற்பரப்பில், ஒரு காலத்தில், ஒரு இடத்தில் தெரியும் பகுதி உட்கருவியின் மேற்பரப்பில் இப்பொழுது உறுப்பெற்ற, தொழிற்படும் நிலையையுற்ற வாஸனை இப்பொழுது அதற்கு வாஸனை என்ற பெயர் இல்லை மனம் ஆகிறது. வெள்ளத்தில் கலக்கமின்றி, தெளிந்த பகுதி, உட்கருவியில் தெளிந்த பகுதியான புத்திபோல் ஆகிறது, சாதாரணமாகக் கூறப்படும் பகுத்தறிவு என்பது புத்தி ஆகாது; பின்னர், அது மனத்தின் நுண்ணிய விசையும். ஆற்ற லுமேயாகும். இதுகாறும் கூறியதனின்றும் மனமோ, புத்தியோ, சித்தமோ. அஹங்காரமோ உண்மையுணர்வு விளங்குவதற்கு, உண்மையின்பம் புலப்படுவதற்கு எந் நிலையிலும் காரணமா காது என்பதேயாம். வாஸனைகளின் வடிவாயுள்ள உட்கருவிட அஹங் காரத்தையே பல வேடங்களில் தனது வடிவமாகக் கொள்ளும் உட்கருவி, அமைதியின்மையையும் அமைதியின்மைக்கு எதிர்மறையான அமைதியையும் அவ்வப்பொழுதி ,காட்டும் உட்கருவி எங்ஙனம் உண்மையுணர்வாகும்? கலக்கமுடைமையைத் தனது எதிர் மறையாகக் கொண்ட கலக்கமின்மை எங்ஙனம் நித்தியமான அமைதி வடிவாகும்? உண்மையுணர்வு வரவு போக்கொழிந்த நித்தியமான அமைதி வடிவினதன்றோ! துன்பத்தைத் தனது எதிர்மறையாக் கொண்ட இன்பம் எங்ஙனம் நித்தியமான இன்ப வடிவினதாகும்? உண்மையின்பம்நித்தியமான இன்பவடிவினதன்றோ? மாறுபாடற்ற, நித்தியமான இன்பவடிவினதன்றோ?ஆகவே, உண்மை இன்ப-பலம் உண்மையுணர்வின் வாழ்வு எந்த முயற்சி யாலும் அடையப்படுவ தொன்றில்லை. எந்த வழியைப் பின் பற்றியும் அடையப்படுவதொன் றில்லை. ஒருவன் தான் சென்ற ஒருவழியில் மற்றொருவனை வழிப் படுத்தினால், ஆற்றுப் படுத்தினால், தன் கொள்கையை மற்றவனி டத்தில் ஏற்றுவதாகவே முடியும். வெள்ளத்திற்கு ஆதாரமாய் (Support), அதிஷ்டானமாய் (Substratum) உள்ள அடிநிலம் (bed) போல், உட்கருவியின் மாறுபாடுகள் யாவற்றுக்கும் அடிநிலமாய் உள்ள தன்றோ உண்மையுணர்வு–உண்மையின்பம். வழிபடுதல் என்பது வெள்ளத்தில் அகப்படுதலே ஆகும்; வழிபடுதல் என்பதும், அங்ஙனமே வெள்ளத்தில் அகப்படுதலாகவே முடியும். உண்மையுணர்வை எம்முயற்சியாலும் தோற்றுவிக்க முடியாது. எவ்வழியைப் பின் பற்றுவதாலும், பின்பற்றும் படி மற்றவனைச் செய்வதாலும், உண்மையின்பத்தின் அனுபவம் உண்டாகுமா? உண்மையின்பத்தை அனுபவிக்கச் செய்ய முடியுமா? உண்மையுணர்வு, உண்மையின்பம் தானே தோன்றுதல் வேண்டும்) அதைத் தோற்றுவிக்க இயலாது. உட்கருவி நீங்கியவிடத்து உண்மை யுணர்வு பொலிகிறது. வெள்ளத்தின் ஸ்வரூபமாக நீர் இருப்பது போல், உட்கருவியின் ஸ்வரூபமாக அஹங்காரம். (நான் என்ற உணர்வு) உள்ளது. ஆகவே உட் கருவி நீங்குவது என்பது அஹங்காரம். நீங்குவதே ஆகும். கலக்கமுடைய அஹங்காரம் போல், கலக்கமுடைமைக்கு எதிர்மறையான கலக்கமின் மையில் திளைக்கும் அஹங்காரமும் உண்மையுணர்வை மறைப்பதே ஆகும். உண்மையுணர்வு அமைதியே-வெறும் அமைதியே வடிவானது. இந்த வெறும் அமைதிக்கும், அமைதி யானஅஹங்காரத்திற்கும் தொடர்பே இல்லை. அமைதியுடைய அஹங் காரம். அஹங்காரமே தான். அமைதியற்ற அஹங்காரமும் அஹங் காரமே. சேஷ்டை யொழிந்த பொழுதும் குரங்கு குரங்குதானே. ஆகவே அஹங்காரத்தின் ஒரு நிலையாக (Condition) உள்ள அமைதி அமைதியே இல்லை; அது ஒரு மயக்கமே. அமைதியுடைய ஒரு நிலைக்கும் (Peaceful condition) வெறும் அமைதிக்கும் (Mere peace) வெகுதூரம். உண்மை யுணர்வு. உண்மையின்பம் ஒரு நிலை அல்ல: அமைதியே வடிவின தாகும்.
இந்த அமைதியாம் உண்மையுணர்வு விளங்க “’நான்’ விலக வேண்டும். “நான்” அதுவாக விலகவேண்டும். நான் என்பதை முயற்சிகளால் விலக்க முடியாது. நான் என்பதே மனம்.“நான்” என்பதே புத்தி; “நான் என்பதே சித்தம்; நான் என்பதே உட்கருவி. நான் என்பது, அதாவது உட்கருவி நீங்குவது எங்ஙனம்? உடலின் மீது உள்ள ஆடையைக் களைந்து, எறிந்து விடலாம். கையில் உள்ள பொருளை வீசி எறிந்து விடலாம். ஆனால் மனத்தை எவ்வாறு களைவது; எவ்வாறு வீசி எறிவது? மனம் ஒழிய வேண்டுமே தவிர, மனத்தை ஒழித்தல் இயலுமோ? ஒழிக்கப்படுமாயின் பழைய நிலை நீங்கிப் புதியதோர் நிலையில்மனமே தான் வாழும்` அன்றோ! பழைய கருப்பன் பெரிய கருப்பனான கதையாக அன்றோ முடிகிறது. மனம் ஓழிந்தவிடம் எங்கே? மனம் நீங்கியவிடம் எங்கே? “நான்” தானாக விலகியவிடம் எங்கே? தூக்கத்தில் “நான்” விலகியுள்ளது; அப்பொழுதும் தூய இன்பமும் பொலிகிறது. அதற்காக எப்பொழுதுமே ஒருவன் தூங்கிக் கொண்டி ருக்க முடியுமா? தூக்கத்திற்கான மயக்க மருந்தைச் சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைத்துக் கொண்டே இருப்பதுதான் சிறக்குமா? விழிப்பிலும் “நான்” விலகிய நிலையல்லவோ சிறந்த தாகும்! தொழில் புரியும் சமயத்திலும் நான் விலகிய விடம் எங்கே? உடற்கருவிகளைக் கொண்டு மட்டும் நடக்கும் எத்தனையோ செயல்களில் “நான்” விளங்குவதில்லை, இது யாவருடைய அநுபவத்தில் காணக்கூடியது. நடக்கும் பொழுது-நான் நடக்கிறேன்-என்ற உணர்வு தேவையின்றியே இயல்பாக நடத்தல் என்ற தொழில் செவ்வனே நிகழ்கிறது. நான்இப்பொழுது வலது காலை எடுத்து வைக்கிறேன். இப்பொழுது இடது காலைப் பெயர்த்து வைக்கிறேன் என்று முனைப்புணர்வின்றியே நடத்தல் நிகழ்கிறது. பழக்கத்தின் மிகுதியால் உடலைப் பற்றிய, கால்களைப் பற்றிய உணர்வு அப்பொழுது தேவைப்படுவதில்லை. ஆனால் தொழில் நடக்கிறது. செவ்வனேயும் நடக்கிறது. உடலினின்றும் அப்பொழுதைக்கு உணர்வு கழன்றிருப்பதால் “நான்” தேவைப்படுவ தில்லை. காலிலே புண் இருக்குமாயின், காலுடன் உணர்வு தோய்கிறது; உணர்வு தோய “நானும்” தோன்றுகிறது. துன்பம் தோன்றுகிறது. காலில் புண் இருந்தாலும், வேறு நினைப்பில் ஆழ்ந்தவண்ணமாய் (Preoccupied) ஒருவன் நடக்கும்பொழுது, காலில் . உணர்வு தோயவில்லை ; ஆகவே காலுடன் “நான்” தொடர்பு பெறவில்லை; துன்பமும் தெரியவில்லை. உடற்கருவிகளின் மூலம் தொழில் புரியும் இது போன்ற நிலைகள் யாவருக்கும் தெளிவாகப் புலப்படும், ஆனால், மனம் செயல் புரியும் பொழுது மனம் மட்டுமே செயல் புரியும்பொழுது மேற்கூறியது போன்ற நிலையைப் புரிந்து கொள்வதுதான் பலருக்கும் கடினமாக இருக்கிறது. பழக்கமின்மையே இதற்குக் காரணம். சம-தரையிலேயே நடந்து பழகியவன், வெகு உயர்ந்த ஏணியில் ஏறும்பொழுது, தான் ஒவ்வொரு அடியெடுத்து வைப்பதிலும் கால்களில் உணர்வு தோய்ந்த வனாகிறான்; “பக்,பக்” என்ற துடிப்பு உடையவனாகிறான், ஆனால் ஏணிகளிலோ, தூண்களிலோ, சாரங்களிலே நன்கு ஏறி ஏறிப் பழகிய தொழிலாளிகளுக்கு அப்பொழுது கால்களைப் பற்றிய உணர்வினால், நான் ஏறுகிறேன், ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறேன் என்ற நினைப்பே தேவையாக இல்லை. “ஏறுதல்” அனாயாஸமாக, “நான்” உணர்வின்றியே நடக்கிறது. உடற்கருவிகள் கொண்டு செய்யப்படும் எந்தக் கடினமான தொழிலிலும் மிகுந்த பழக்கமுடையவனுக்கு, “நான்” என்ற உணர்வு தேவையில்லாத ஸஹஜத் தன்மையே உள்ளது, மனத்தை மட்டுமே, புத்தியை மட்டுமே கொண்டு செய்யப்படும் தொழில்களும், “நான்” என்ற உணர்வு முனைப்பில் இல்லாமலேயே, “நான்” என்ற உணர்வு நீங்கிய நிலையிலேயே, நடக்க இயலும்; அவ்வவரிடத்து அவ்வவருக் குரிம் மானஸத்தொழில் நான் என்ற உணர்வின்றி யே, செம்மையாக நடைபெறுகிறது. “அவ்வவருக்குரிய” என்பதை இங்கு நன்கு ஊன்றிக் கவனிக்க வேண்டும், “அவ்வவருக்குரிய” என்பது “அவ்வவருக்கு இயல்பான” என்று பொருளுடையதாகும். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் “இயல்பான ஈடுபாடு உடையவன், அந்நாடகங்களைப் பல மணி நேரங்கள் படித்தாலும் “நான் படிக்கிறேன்” என்ற முனைப் புணர்வு இன்றியே செம்மையாகப் படிக்கிறான், ஒவ்வொரு சொல்லினுடைய ஆழ்ந்த பொருளிலும் “முழுதும் மூழ்கிப் படிக்கிறான். கழிபேருவகை எய்துகிறான். “படிப்பு” என்ற தொழில் செவ்வனே நடக்கிறது. “நான்” இல்லை; இன்பம் இருக்கிறது. தூய உணர்வு பொலிகிறது. “படிப்பு”என்ற தொழிலிலே, “படிப்பவன் நான்” என்ற தொழில் செய்பவன் இல்லை. “கர்மம் தொழில்” செவ்வனே நடக்கிறது; “கர்த்தா-தொழில் புரிபவன்” உணர்வு இல்லை. (There is no action without the notion of agency) ஷேக்ஸ்பியர் நாடகத்தைப் பரீகைஷக்காக, வலுக்கட்டாயமாகப் படிக்க வேண்டியவ னும் படிக்கிறான். அவனுக்கு அந்நாடகத்தில் இயல்பான ஈடுபாடு இல்லாமற் போனால், “நான் படிப்பவன்” என்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது. அவன் செம்மையாக ” ஓவ்வொரு சொல்லின் பொருளாழத்தையும் பேருரைகளின் உதவி கொண்டு படித்தாலும் அவனுக்கு இயல்பான ஈடுபாடு! (Natural interest) இல்லாததால் துன்பமாகவே உள்ளது. படித்தல் என்ற தொழில் அவனுக்கு ஒரு சள்ளையாக (Drudgery) உள்ளது. சள்ளையாக உள்ளதும் பயிற்சியின் மிகுதியால் பின் ஒரு காலத்தில் ஒருவனுக்கு இயல்பான தாகிவிடலாம், இயல்பான தாக ஆனபொழுதே இன்பம், அவனுக்கு ஆயுள் பூராவும் அது இயல்பானதாக ஆகக் கூடிய தில்லை, அத்தகைய பான்மை அவனுக்கு இல்லை என்றால், அது அவனுக்கு சள்ளையாகவே இருக்கும். அது அவனது இயல்பான பான்மையால் (ஸ்வ பாவத்தால்) ஏற்பட்ட தொழில் அல்ல, அதனால் அவனுக்கு அது ‘ஸ்வதர்மம்’” ஆகாது. “நான்” என்பது வாஸனைகளின் ஸமஷ்டியாய் (Bundle of past memories) இருப்பதால் தற்பொழுது எந்த வாஸனை தொழிற்படத் தொடங்கு கிறதோ, அதுவே ஒருவனுக்கு இயல்பானதாக ஆகிறது. உட்கருவி ஒரு விசித்திரமான பொருளாய் இருக்கிறது. அது தற்பொழுது தொழிற்படும் பொழுது பழைய தனது வாஸனைகளாலும் தொழிற்படுகிறது. அதே சமயத்தில் அப்பொழுதைய சூழ்நிலை களாலும் தன்னகத்துப் புதிய வாஸனை களையும் ஏற்கிறது. புதிய வாஸனைகளால் பழைய வாஸனையின் பலம் மாற்றம் அடை கிறதாகவும் சில மனங்கள் உள்ளன. எத்தனைப் புதிய தாக்குதல்கள் வந்து பொருந்தினாலும் தனது பழைய வாஸனை யைத் தவிர்ப்பதற்கு எள்ளளவும் முடியாத மனங்களும் உண்டு. நல்லது, தீயது என்று உலகில் கூறப்படும் இரு விஷயங்களிலும் இது பொருந்தும். நல்ல பழைய வாஸனை தொழிற்படுகையில், புதிய தீய தாக்குதல் களால் சீர் கெடாத மனங்களும் உண்டு; சீர்கெட்டுப் போய்ப் புதிய தீய மோதுதல்களுக்கு அடி பணிந்து விடும் மனங்க ளும் உண்டு. அங்ஙனமே, தீய பழைய வாஸனை புதிய நல்லதாக்குதல்ககும் பணிந்து விடும் மனங்களும் உண்டு. அங்ஙனமே, தீய பழைய வாஸனை, புதிய நல்ல தாக்குதல்களால் நல்வழிப்படுவதும் உண்டு; தனது பழைய தீமையிலேயே விடாப்பிடியாக உழலுவதும் உண்டு; நல்ல பழைய வாஸனை மேலும் சிறப்புறும்படியாக புதிய நல்ல தாக்குதல்களால் பயனடைவதும் உண்டு, தீய பழைய வாஸனை மேலும் சீர்கெடுவதற்கான புதிய தாக்குதல்களுக்கு அடிசாய்வதும் உண்டு. பழைய வாஸனைகளும் புதிய மோதுதல்களுமாக வாழ்க்கை உள்ளது. இத்தகைய வாழ்வில்தான் தூய இன்பம் அதாவது உண்மை யின்பமும் பொலிய வேண்டியிருக்கிறது. இன்று, இப்பொழுது நல்ல வாஸனை ஒரு மனத்தில் தொழிற்படத் தொடங்கியிருக்கிறது என்ப தைக் கொண்டே, அடுத்த கணத்திலும் நாழிகையிலும், நாளிலும், திங்களிலும், ஆண்டிலும், அம்மனத்தில் நல்ல வாஸனையே தொழிற் படும் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது. அங்ஙனமே, இப்பொழுது தீய வாஸனை தொழிற்படத் தொடங்கிய மனம், அடுத்தும் தீய வாஸனை தொழிற்படுவதாஃவே இருக்க வேண்டும் என்ற நியதியும் இல்லை. இன்று ஸாதுவாக இருப்பவன், நாளைக்குப் பொல்லாதவனாக ஆகலாம்; இன்று பொல்லாதவனாய் இருப்பவன் நாளைக்குச் சாது வாகவும் ஆக முடியும். ஏன் இப்படி?வாஸனைகளின் மூட்டையாக உள்ள உட்கருவி மேற்பரப்பில் மனமாகத்தொழிற்படுகையில் அடுத்தடுத்த வரும் வாஸனைகள் ஒருவகையான கணித நியதிக்கு உட்பட்டி ருப்பது கணித மாமேதைகளுக்கும் எளிதில் விளங்காத ஒரு புதிராம். புதிய மோதுதல்களால் பழைய வாஸனைகள் திருத்தம் அல்லது மாற்றம் அடைவதற்கும், தற்பொழுது தொழிற்படத் தொடங்கியுள்ள பழைய வாஸனையின் பலமே காரணமாக இருக்கி றது. காமத்தினால் கோபிகைகளும், நட்பினால் பாண்டவர்களும், பகைமையினால் சிசுபாலனும், பழி வாங்கும் கறுவினால் ஹிரண்யகசிபுவும், பயத்தி னால் கம்ஸனும், உறவி னால் வ்ருஷ்ணிகளும், பக்தியினால் நாரதாதி களும் சாவாப் பெருநிலம் உற்றனர். என்று பாகவதம் கூறுவதை நன்குக் கவனிக்கவேண்டும். அந்தந்த வாஸனைகளுக்கு இணங்க கோபிகை முதலானவர்களின் மனம் தொழிற்பட்டாலும், அவர்களு டைய நிலை யோகம் என்று கூறப்படுகிறது. யோகம் என்பது என்ன? அது வியோகம் ஆகும். எதன் வியோகம்? மனத்தின் வியோகம். “நான்” என்ற முனைப்புணர்வின் வியோகம். யோகம்-பொருந்துதல். வியோகம் -விலகுதல், சிசுபாலனது பகைமையும்கூட, ஹிரண்யகசிபுவின் கறுவும் கூட, யோகமாகக் கூறப் படுகிறது ௭ன்றால் அதன் பொருள் என்ன? அத்தகைய. வாஸனையுடன் கூடிய அம்மனங்கள் மாறுதல், திகுந்துதல் என்பதைப் பெறுவதற்குவேண்டிய தகுதியற்றதாயினும், சாவில் அமரத் தன்மையுற்றதாக பாகவதம் போற்று கிறது. எப்படி? அந்தத் திருடமான வாஸனைகளில் தோய்வுறாத நிலையில் அவர்களது உணர்வு இருந்திருக்க வேண்டும். தோய்வுறாத உணர்வு தான் முக்கியம். தாக்குறாத உணர்வு தான் முக்கியம். கரியுணர்வுதான் முக்கியம்.
தோய்வுறாத உணர்வு=Untinged consciousness
தாக்குறாத உணர்வு= Choiceless awareness
கரியுணர்வு=Natural consciousness
மனத்தின் வாஸனைகள் முக்யமல்ல, உலகம் போற்றும்படியான அல்லது தூற்றும் படியான வாஸனையாக ஒருவனது வரலாறு அமைந்து விடலாம். பலகோடி காலமாகச் சேர்ந்துள்ள வாஸனா ஸமஷ்டியில் அடுத்தடுத்துத் தொழிற்பட மனத்தின் கண் வரும் வாஸனைகளை இப்படித்தான் அல்லது. அப்படித்தான். என்று, வரிசை ப்படுத்த, யாருக்குமே, எந்த மனத்துக்குமே வல்லமை இல்லை. இவ்வுண்மை அவரவர்களுக்குத் தங்கள் அகவாழ்வில் தெள்ளத் தெளிவாக விளங்குவதாகும். “’தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்”. ஒருவனை அவனது புற வாழ்வினின்று மற்றொருவன் அவனை இத்தகையவன் என்று அறுதி யிட்டுக் கூற முடியாது. அவனவனே தனது. அகவாழ்வையறிய முடியும். ஆகவே, ஒருவன் மனத்தின் கண் வாழ்பவனாயினும் மாசிலாதவனாக வாழவேண்டுமாயின், “நான்” என்ற முனைப்புணர்வு ஒழிந்தவனாக வாழுதல் வேண்டும். அப்பொழுது மனத்துக்கண் வாழ்பவனாயினும் மனத்தின் தன்மை, மனத்தின் தற்பொழுதைய வாஸனை, அவ் வாஸனையின் தொழிற்பாடு அவனைப் பற்றாது இருப்பதற்கு, மனத்தினது எல்லா நிலைகளையும் ஸாத்விக, ராஜஸ, தாமஸமாகிய எல்லா நிலைகளையும் அந்நிலைகளுக்குத் தான் உட்படாது, தூய சாட்சி சைதன்யத்தில்தாக்குறா உணர்வில் ஸதா (எப்பொழுதும்) வாழ்ந்து வாழ்ந்து பழகுவாராயின், இப்பழக்கத்தின் மிகுதியால் அந்நிலை அவனுக்கு இயல்பானதாகும். மனத்தின் நல்லது, தீயதுகள் அடுத்தடுத்து வரும் வாஸனைகளின் படியே நிகழ்வதாயினும், ஸாக்ஷி சைதன்யம் இயல்பாகவே, தூயதாகவே எப்பொழுதும் யாவரிடத்தும் இருப்பதால், அவ்விடத்து வாழ்பவன் மனத்தின் எந்தச் சாயமும் ஏறாதவனாகப் பொலிகிறான். மனம் எத்தொழிலைச் செய்தாலும், ஏது அவஸ்தைப் பட்டாலும், ஸாக்ஷி சைதன்யமாம் மங்கள வடிவத்தில், சிவவடிவத்தில்- வாழ்பவன் “நான்” என்ற உணர்வு கழன்றவனே. தொடக்கத்தில் இது மிகமிகக் கடினமானதாகத் தோன்றினும் பழக்க மிகுதியில் பான்மையாகிவிடும். மனத்தின். எந்த நிலைகளையும் கொள்ளவோ-தள்ளவோ செய்யாமல், மறுக்கவோ-உடன்படவோ செய்யாமல், வெறும்பார்க்கும் அறிவு (Seer consciousness) நிலையில் வாழ்ந்து கொண்டு, விளக்கும் ஒளியில் (Illumine consciousness ) வாழ்ந்து கொண்டு வருபவன் சிவவடிவமுற்றவனே. உண்மையுணர்வு-உண்மை யின்பம் கைவரப் பெற்றவனே.
ஸ்ரீவித்யா உபாஸனையைப் பற்றிய கட்டுரைகள் எழுதத் தொடங்கு முன் இத்துணை நீண்ட முன்னுரை வெகு அவசியமாகிறது. ஸ்ரீவித்யா உபாஸனை என்ற தேவி வழிபாட்டு முறையைத் தவறாகப் புரிந்து கொண்டு தூற்றுபவர்கள் பலர் உண்டு. பயப்படுபவர்களும் பலர் உண்டு. ஸ்ரீவித்யா என்பதை “ஸ்த்ரீ” வித்யா என்று புரிந்து கொண்டு பலர் தூற்றுகிறார்கள், இந்த உபாஸனையில் ஈடுபடும்படியாக வருமானால் சிறு தவறுகளுக்கும் தேவி மிகமிகக் கடும் தண்டனைக ளை விதித்துவிடுவாள் என்று பயப்படுகிறார்கள். தாங்கள் சிறு தவறுகளும் செய்யாதபடி அன்னையே நம்மைத் தடுத்து ஆட் கொள்ளுவாள் என்று அன்னையின் கருணாப் பெம்மையை அறியாதவர்கள் அங்கனம் பயப்படுகிறார்கள். தற்காலத்திலே விஞ்ஞானத் துறையில் நுண்ணிய ஆராய்ச்சிகளின் மூலம் பல மேதைகள் வியக்கத்தக்க உண்மைகளை வெளியிட்டுக் கொண்டு வருவது போல், முற்காலத்தில்மகரிஷிகள் மனத்துறையில் (Psychological plane) நுண்ணிய ஆராய்ச்சிகளைச் செய்து விஞ்ஞான மாமேதைகளும் வாய் பிளந்து சொக்கிக் கல்லாகச் சமையும்படியாக, அதே சமயத்தில் நாமும் வாழ்வின் உண்மைப் பயனைப் பெறும் படியாகப் பெருங்கருணையுடன் பல அரிய மறுக்கவொண்ணாத உண்மைகளை வெளியிட்டுள்ளார்கள். நீண்டகாலத் தவத்தின் மூலமாக தங்கள் தூய உள்ளங்களில் கடவுளது திருவாக்கு பொறிக்கப் பட்ட பெருமையை அடைந்தார்கள். உள்ளத்தில் ஏற்பட்ட ஒளியைச் சொல்லின் மூலம் உலகிற்குத் தந்தனர். கடவுளது அருட் சக்தியே. மஹரிஷிகளின் மூலம் வெளிப்போந்தது மெத்தைக் கட்டடத்தின் மேல் தளத்தில் விழும் மரை நீர், ஓங்களிலுள்ள கொடுங்கைகளில் அழகுக்காகச் சமைக்கப்பட்டுள்ள பசுமுகத்தின் வழியாகப் பாய்வதைக் காணும் குழந்தைகள், பசு தன் வாயிலிருந்துத் தண்ணிரை உமிழ்கிறது எனலாம்; ஆனால் வயது முதிர்ந்தவன் அது முகில்கள் பொழியும் நீரே, சாளரத்தின் வழியாகப் பாய்கிறது என்று அறிவான். மகரிஷிகள் வேதங்களைப் பொழிந்த பொழுது “நான் இதை ஆக்குகிறேன்”என்ற முனைப்புணர்வுடன் கூறவில்லை, முனைப் புணர்வு கழன்ற விடத்து வேதங்கள் பிறந்தன. கடவுள் சக்தி சொல் லாகப் பிறந்தது. அச்சொல்லின் பொருள் தமக்குத் தெளிவா வதற்கும் கடவுட்சக்தியே, அருட்சக்தியே நமக்குத் துணை புரிய வேண்டும். இந்தக் கடவுள் சக்தியையே, அருட்சக்தியையே கிறிஸ்தவ மதத்தவர் புனித ஆவி (Holy ghost) என்கின்றனர். கடவுளது அருள் அவ்வக்காலங் களில் அவ்வத்தேசங்களில் தகுதியுடைய பெரியோர்களின் மூலமெல் லாம் பாய்ந்து அவ்வம்மொழிகளில் மறைகளைத் தந்திருக்கிறது. மறைகள் வடமொழியில் தான் இருக்க வேண்டும் என்று போராடுவது கடவுளின். அருட்சக்தியின் பெருமையைப் புரிந்து கொண்டது ஆகாது. அருட்சக்தி இன்றும் ஒருவனிடம் பாயலாம். ஒருவன் மூலமாக புதிய தொரு மொழியில் மறைகளை வெளிப்படுத்தலாம். மறைகள் எம் மொழியில் இருந்தாலும், கடவுளது திருவாக்குகளாய் இருப்பதால், சாகா வரம். பெற்றுவிடுகின்றன. அருட்சக்தி ஒருவனிடம் பாய்வதை சக்தி பாதம் (Descent of the Divine power) என்று நம் நாட்டு முனிவர்கள் கூறினர். அதிமனச்சக்தியின் இறக்கம் (Descent of the supramental power) என்றார் அரவிந்தர். புனித ஆவி இறங்குதல் (Descent of the Holy ghost) என்றனர் கிறிஸ்தவர். புனித ஆவியை வேத புருஷன் என்ற சொல்லால் நமது பெரியோர்கள் வர்ணித்தனர். புனித ஆவியின் அருளால் பிறந்த விவிலிய நூலைப் புரிந்து கொள்வதற்கு ஒருவன் தன்னிடமும் புனித ஆவியின் இறக்கத்தைப் பெறவேண்டும் என்றனர் கிறிஸ்தவர், கடவுளையும் புனித ஆவியையும் ஈசகுமாரனான கிறிஸ்துவையும் பிரார்த்தித்துக் கொண்டுதான் விவிலிய நூலைப் படிக்கத் தொடங்க வேண்டும் என்றனர் கிறிஸ்தவர், ஈசுவரனையும், வேதபுருஷனையும், ப்ரஹ்ம வித்யா ஸம்ப்ரதாய கர்த்தாக்களரன மஹரிஷிகளையும் தியானித்துப் பிரார்த்தித்துக் கொண்டு படித்தால்தான், அதாவது ஓதினால்தான் வேதங்களின் மறைபொருள்கள். நமக்குத் தெளிவாகும். வேதபுருஷனின் திருவருளன்றி வேதங்களின் மறைபொருள்கள் நமக்குத் தெளிவாகா. ஆதலால், “மறைகள்” என்ற தமிழ்ச் சொல் வெகு அழகாக வேதங்களுக்குப் பொருந்துகிறது. வாழ்வின் உண்மையான ரஹஸ்யம் பற்றி நமக்கு அறிவிப்பதால், அத்தகைய ஞானச் சுரங்க மாக இருப்பதால் “வேதம்” என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் வெகு ஆழ்ந்த பொருளுடையதாக இருக்கிறது. இத்தகைய வேதங்கள்மூலம் நமக்குக் கிடைத்துள்ள ஞானப் பொக்கிசத்தை நாம் புறக்கணித்து விட்டு, மந்த்ரங்களின் ஆற்றலை அறியாது மயங்குபவர்களாய், மேல்நாட்டு விஞ்ஞான ஆராய்ச்சியைக் கண்டு வாய்பிளந்து திகைக்கிறோம். உண்மையான உயர்ந்த ஜாதி யானையின் மீது அமர்ந்து பவனி வரும் மன்னன், தனக்கு ஆதாரமாக இருக்கும் யானையின் பெருமை யறியாது வீதியில் ஒரு ஓரத்தில் சிறிய மரக்கட்டை யானை ஒன்றைக் குழந்தையொன்று தன் கையில் வைத்துக்கொண்டு விளையாடு வதைப் பார்த்துத் திகைத்து, வாய்பிளந்து நின்ற கதையாக இருக்கி றது நம்மவர் வாழ்க்கை. குழந்தையின் விளையாட்டு அதற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மற்றவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆனால் தற்கால விஞ்ஞான அறிவின் முன்னேற்றம் அவ்வறிலில் முன்னேறி யவர்களுக்கே பயத்தையும் போட்டியையும் கொடுத்திருப்பது மட்டு மன்றி, உலகையே ஒவ்வொரு நாளும் பயத்தில். அழுத்திக்கொண்டு வருகிறது. மறுபடியும் உலகம் கற்காலத்திற்குத் திரும்புமோ என்று நினைக்கும்படி செய்கிறது. ஆனால், நமது மகரிஷிகள் கொடுத்துள்ள செல்வமான வேதங்களையும், அவைகளின் வழிவந்துள்ள அபார சக்தி வாய்ந்த மந்த்ரங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்வதற்கு வேண்டிய பேறு உடையவர்களாவோமானால், மேல்நாட்டுவிஞ்ஞான முன்னேற்றம் வெறும் ஒரு சிறு எறும்புப் புற்று என்று சொல்லும்படி, இமயமலையளவு சக்தியை நாம் அநாயாஸமாகப் புலப்படுத்த முடியும். இது அதிசயோக்தி அல்ல. மந்த்ரங்களின் சக்தி அவ்வளவாக இருக்கிறது. மேல்நாட்டு விஞ்ஞான அறிவு மனிதனின் மனத்தைப் பண்படுத்தவில்லை. ஆனால் நமது மகரிஷிகள் வழங்கியுள்ள யந்த்ரங்கள் மனிதனின் மனத்தை முதலில் பண்படுத்துகின்றன. பின்னர் அம்மனத்தில் அணிமாதிசித்திகளெல்லாம் நொடிப் பொழுதில் தொழிற்படும் படி ஆற்றலைக் காட்டுகின்றன. அதே சமயத்தில் அத்தகைய பெரிய அணிமாதிச் செல்வங்களாலும் ஒருவன் அகந்தைக்கு அடிமையாகிவிடாமல் கடவுளின்பத்தில் அவன் வாழும் படியும் பயன் படுகின்றன. அந்தோ! இத்துனை ஆற்றல் உடைய மந்த்ரங்களை நம்மவர் உதாசினம் செய்திருப்பது என்னே விந்தை! ஒருவனுடைய பழைய வாசனை ஒருவனுக்கு அனுகூலமாக இருந்தா லன்றி, இத்தகைய அரியபெரிய செல்வங்களிலும் மகா மந்த்ரங்களி லும் ஒருவனுக்கு நாட்டம் வருவதில்லையன்றோ! கோபுரத்தின் மீது ஏறிக்கொண்டு, அஷ்டாக்ஷரியை ராமாநுஜர் உலகினரை நோக்கிக் கூவினாலும் எத்தனைப்பேர்கள் அஷ்டாக்ஷரியில் நாட்ட முட்றனர். நாட்ட முற்றவர்களுள்ளும் எத்துணைப் பேர்கள் முழுமூச்சுடன் ஈடுபட்டார்கள் “கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நாரணன் நாமமே” என்று எத்தனைப் பேர்கள் அஷ்டாக்ஷரியின் ஆற்றலில் நம்பிக்கைக் கொண்டார்கள்? சூழ்நிலையின் மோதுதல் ஒருவனுக்கு அனுகூலமாக, அவன் உய்வு பெறும்படி வந்தாலும், அதை முழுதும் பயன படுத்திக் கொள்ளும்படி பழைய வாசனை கோடியில் ஓரிருவருக்கே உதவி புரிகிறது. இக்கருத்துக் கொண்டுதான், எதற்கும் பாக்கியம் வேண்டும் என்றார்கள் பெரியோர்கள். ஆனால் ராமாநுஜர் கூவியதும் பழுதுபட வில்லை. பாக்கியமுடையவர்கள் பழைய நல்வினையுடன் கூடியவர் கள் அவரது அறைகூவலைப் பயன்படுத்திக்கொண்டார்கள். களர் நிலத்தில் விழுந்த தான்யம் முளைக்கவில்லை; வழியில் சிந்தியவை நடப்பவர்களின் கால்களால் மிதிக்கப்பெற்று முளைக்க வில்லை; வரப்புகளில் விழுந்து முளைத்தவைகளும் நடப்பவர்களால் நசுக்குண் டன; நல்ல வயலில் விழுந்தவை நன்கு பயன் தந்தன. ஒரு சிலராவது பயனடையும்படி உலகில் உள்ளனர் என்பதால் தான் கடவுளது அருட் சக்தி ஒருசிலர் மூலம் வாரி இறைக்கப் படுகிறது. மற்றவர்களும் பக்குவம் வந்தபொழுது பயன்படுத்திக் கொள்வார்கள்.