தீபாவளிப்பண்டிகையும்அதன்தத்வார்த்தமும்
(ஸ்ரீசிதானந்தநாதர் 1915-ல் ‘இந்துநேசன்‘ என்றபத்திரிகையில்எழுதியகட்டுரை)
தீபாவளி என்னும் சொற்றொடர் வடமொழியினதாம். அது தீபம், ஆவளி என்னும் இரண்டு சொற்களாலாயது. விளக்கு வரிசை என்று பொருள் படும்.
இதற்குச் சம்பந்தமாகப் ஸ்ரீமத்பாகவதத்தில் ஒரு கதையுண்டு.
அஃதாவது:
நரகாசுரன் என்னுமோர் அரக்கன் தேவலோகத்திற்கு அதிபதியாகிய இந்திரனை வென்று தேவலோகத்தை தன்வசப்படுத்திக் கொண்டு, அவனைப் பல கஷ்டங்களுக்குட்படுமாறு செய்தான். அவன் (இந்திரன்) பரமேசுவரனாகிய கிருஷ்ணனை (மனோவாக்குக் காயங்களால் தியானித்து, துதித்து) வணங்க, அவருடைய பத்னி ஆகிய ஸத்யபாமை அவ்வரக்கனை, கடாக்ஷவீக்ஷண்யத்தினால், ஐப்பசி மீ சதுர்தசி (பின்- இரவு) விடியற்காலத்தில் கொன்றாள். நரகாசுரன் கொல்லப்பட்டதனால் தேவர்களுக்குக் கஷ்டம் நீங்கிற்று. இந்திரன் தன் பழைய பதவியை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கொடுக்கப் பெற்றுச் சந்தோஷம் அடைந்தான் என்பதே.
இக்கதையைச் சற்றுச் சீர்தூக்கி நோக்குவோமாயின், இது ஒர் உருவகம் என்பது நன்கு புலப்படும். எவ்வாற்ய் என்றால்
1) நரகாசுரன் என்பது-மாயை அல்லது அவித்தை
2) தேவேந்திரன் என்பது- ஜீவன்.
3) வென்றது என்பது-ஆத்மாவின் (ஸச்சிதானந்த) ஸ்வரூபத்தை மறைத்தல்.
4) கஷ்டம் என்பது-ஜனன-மரணாதி ஸம்ஸார-கஷ்டங்கள்.
5) வணங்கல் என்பது-ஸகுணோபாஸனை
6) கிருஷ்ணன் என்பது-ஜீவன் முக்தராகிய குரு.
7) ஸத்யபாமை என்பது-பரோக்ஷ குரு.
8) ஐப்பசி மீ (மாதம்) என்பது-ஏழாவது பூமிகை
(சித்திரையிலிருந்து 7வது மாதம்)
9) சதுர்தசி என்பது-பதினான்கு ஸாதனங்கள்.
10) பழைய பதவியை அடைதல் என்பது-தன் ஸ்வரூப ஸச்சிதானந்த ஸ்வரூபத்தை அடைதல்.
ஆகவே, ஸச்சிதானந்த ஸ்வரூபமாகிய ஆத்மா அநாதியாயும் ஸத்-அஸத்-விலக்ஷண அநிர்வசனீயமாயுமுள்ள அவித்தையின் வசப்பட்டு ஜீவ பாவத்தை அடைந்து, ஜனன-மரண-துக்கங்களுக்கு இலக்காய், புண்ய விசேஷத்தினால் ஸகுணோபாஸனை (பக்தி)யைச் செய்து, பரமேச்வரனது கருணையினால் பரோக்ஷ குருவையடைந்து, சுபேச்சை முதல் துரீயம் ஈறாகவுள்ள ஞான-பூமிகைகளை விவேகமாதி ஸாதனங்களால் அடைந்து, ஸத்குருவின் கடாக்ஷவீக்ஷண்யத்தால் தன் ஸ்வரூபமான ஸச்சிதானந்த நிலையை அடைதலே என்பது மேற்கூறிய கதையின் தத்வார்த்தமாம்.
श्रीवसिष्ठ उवाच
इमां सप्तपदां ज्ञानभूमिमाकर्णयानय। नानयां जातया भूयो मोहपङ्के निमज्जसि॥१
ज्ञानभूमि: शुभेच्छाख्या प्रथमा समुदाहता। विचारण द्वितीया तु दतीया तनुमानसा॥५
सत्वापत्तिश्चतुर्थी स्यात्ततोऽसंसक्तिनामिका।पदार्थाभावनी षष्ठी सप्तमी तुर्यगास्सृता॥६
आसामन्ते स्थिता मुक्तिस्तस्यां भूयो न शोच्यते। एतासां भूमिकानां त्वमिदं निर्वचन शृणु॥७
योग वासिष्ठ- ११८ सर्गः
ஶ்ரீவஸிஷ்ட² உவாச
இமாம் ஸப்தபதா³ம் ஜ்ஞானபூ⁴மிமாகர்ணயானய। நானயாம் ஜாதயா பூ⁴யோ மோஹ பங்கே நிமஜ்ஜஸி॥ 1
ஜ்ஞானபூ⁴மி: ஶுபே⁴ச்சா²க்²யா ப்ரத²மா ஸமுதா³ஹதா। விசாரண த்³விதீயா து த³தீயா தனுமானஸா॥ 5
ஸத்வாபத்திஶ்சதுர்தீ² ஸ்யாத்ததோ அஸம்ஸக்தி நாமிகா। பதா³ர்தா²பா⁴வனீ ஷஷ்டீ² ஸப்தமீ துர்யகா³ ஸ்ஸ்ருʼதா॥6
ஆஸாமந்தே ஸ்தி²தா முக்திஸ்தஸ்யாம் பூ⁴யோ ந ஶோச்யதே. ஏதாஸாம் பூ⁴மிகானாம் த்வமித³ம் நிர்வசன ஶ்ருʼணு॥7
யோக³ வாஸிஷ்ட²- 118 ஸர்க³꞉
ஏழு-ஞான பூமிகைகளாவன: (1) சுபேச்சை (2) விசாரணை (3) தநு மானசி (4) ஸத்வாபத்தி (5) அஸம்ஸக்தி (6) பதார்த்தாபாவனை (7) துரீயம்.
இவை முறையே (1) நன்மையை விரும்புதல், (2) தத்வவிசாரம் செய்தல் (3) மனம் சூக்ஷ்மத் தன்மையை அடைதல் (4) தேக-ஆத்ம புத்தியை ஒழித்து ஆத்ம சொரூபமாக விளங்கல் (5) தேக சம்பந்தமின்றி இருத்தல் (6) உலகத் தோற்றமின்றி இருத்தல் (7) எவ்வித விகற்பமில்லாது தானே தானாய் விளங்கல் எனப் பொருள்படும்.
आदौ नित्यानित्यवस्तुविवेकः परिगम्यते । इहामुत्रफलभोग विरागस्तदनन्तरम्।
शमादिषट्क सम्पत्ति र्मुमुक्षुत्वमिति स्फुटम् ॥
विवेक चूडामणि- १९
ஆதௌ³ நித்யாநித்யவஸ்துவிவேக꞉ பரிக³ம்யதே । இஹாமுத்ரப²லபோ⁴க³ விராக³ஸ்தத³னந்தரம் ।
ஶமாதி³ஷட்க ஸம்பத்தி ர்முமுக்ஷுத்வமிதி ஸ்பு²டம் ॥
விவேக சூடா³மணி- 19
பதினாங்கு ஸாதனங்கள் :
(1) நித்ய-அநித்ய வஸ்து விவேகம் – உலகின் நிலையுள்ள நிலையற்ற பொருட்களின் தன்மையை நன்கு விசாரித்து அறிதல்.
(2) இஹாமுத்ரார்த்த பலபோக விராகம் – இவ்வுலகிலும், மறு உலகிலும் உள்ள பலந்தரும் செயல்களில் நின்று மனதை விடுவித்தல்
(3) ஶமம்- முன் கூறியவைகளை நன்கு உணர்ததால் மனதிலுள்ள அமைதி
(4) தமம்- முன் கூறிய அமைதியைக் குலைக்க ஞான-கர்ம இந்திர்யங் களால் ஏற்படும் விஷய-இன்ப-நுகற்சிகளை அடக்குதல்
(5) உபரதி- ஞான-கர்ம இந்திர்யங்களால் ஏற்படும் விஷய-இன்ப-நுகற்சிகளை மீண்டும் ஏற்படாதவாறு சுயக் கட்டுப்பாடு
(6) திதீக்ஷை – துன்பம் ஏற்படும் பொழுது சகிப்புத்தன்மை
(7) சிரத்தை- குரு வாக்யங்களிலும், ஶாஸ்த்ரங்களிலும் அசைக்க முடியாத நம்பிக்கை
(8) சமாதானம்- வெறுமென்று பொழுதுபோக்கிற்காக தெரிந்த கொள்ள ஆசைப்படாமல், முழு நேரமும் இடைவிடாது ப்ரஹ்மத்தை பற்றிய சிந்தனையினால் மனம் அமைதியுற்ற நிலை
(9) முழுக்ஷுத்வம்- இவ்வாறு தன்னுடைய உண்மை நிலையை (ப்ரஹ்ம த்தை) உணர்வுபூர்வமாக அறிய, எல்லா கட்டுகளில் நின்று விடுவிக்க ஏங்குதல்
(10) ச்ரவணம்= இவ்வாறு ஏங்கும் ஸாதகனுக்கு, ப்ரஹ்மமே ஓர் ஸத்குரு வடிவாய், அவனுக்கு வழி காட்ட கூறும் உபதேசங்களை ஒருமையுடன் கேட்டல்
(11) மனனம்= அவ்வாறு கேட்ட உபதேசங்களை நன்றாக மனதில் பதித்துக்கொள்ளுதல்
(12) நிதித்யாஸனம்= மனதில் பதித்த உபதேசாத்தின் இடை விடாமல் நினைவில் கொள்ளுதல்
(13) ஸவிகல்ப ஸமாதி= மனம் இன்னும் செயல்பாட்டில் இருந்து கொண்டு, யோகி இன்னும் உடல் மற்றும் உலகியலான செயல்களோடு பற்றுக்கொண்டு இருந்தாலும், ஆனந்தத்தின் ஒரு ஒளிகீற்றை அனுபவிக்கும் நிலையாகும்.
(14) நிர்விகல்ப ஸமாதி= மனம் முழுமையாக கட்டுப்பாட்டில் இருந்து எதையும் கற்பனை செய்யவோ, விரும்பவோ செய்யாது. அப்போது முழுமையான விழிப்புணர்வே மட்டும் நிலைத்திருக்க, யோகி இனி வேறுபாடுகளை காணாமல், அனைத்தின் ஒன்றிணைவு மற்றும் பூரணத்தைக் காண்கிறார்.
ஜீவபாவத்திற்குக் காரணம் மனமே ஆதலின் மனமே மாயை என்றும் அவித்தை என்றும் கூறப்படும். ஆதலால், மனமிறத்தலே அவித்தை ஒழித்தலாம். மனமானது நிர்விகற்ப ஸமாதி சித்திக்கிற வரையில் ஒழிவதின்மையின் அவித்தையின் (நரகாசுரனின்) ஒழிவிற்கு விவேகம் முதல் பதினான்கு ஸாதனங்கள் அத்யாவச்யமாம்.
இக்கதையில், நரகாசுரனை ஏன் கிருஷ்ணன் கொல்லவில்லை? கிருஷ்ணனுக்கு அவனைக் கொல்லச் சக்தியில்லையா? என்ற சந்தேகம் உண்டாகலாம்.
கிருஷ்ணன் ஜீவன்முக்தரானதால் அவித்தை அல்லது அஞ்ஞானமாகிய நரகாசுரன் கிருஷ்ணனுக்கு இலக்காக மாட்டான். சூரியனுக்கு இருட்டு இலக்காகாமை போல, கிருஷ்ணனுக்கு எதிரில் நரகாசுரனே இல்லாத போது அவன் யாரைக் கொல்வது? யார் மேல் அம்பு எய்வது? ஆதலாற்றான் ஸத்யபாமையாகிய பரோக்ஷகுரு கொன்றாள்.
ஐப்பசி மாதம், கிருஷ்ண-பக்ஷம் பிரதமை முதல் சதுர்தசி வரையில் யுத்தம் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸாதனத்தைப் பிரயோகித்துக் கடைசி நாளாகிய சதுர்தசி அன்று நிர்விகற்ப ஸமாதி யாகிய ஸாதனத்தினால் உடனே ஜீவன் நிரதிசய-ஆனந்த வடிவாய் விளங்கினான். (நரகாசுரன்) நாசமடைந்தது இவ்வாறான ஸர்வ பிராப்தியே தீபாவளியாம். விளக்கு வரிசையின் பிரகாச அநர்த்த நிவ்ருத்தி பரமாநந்தப் ஸ்வரூபாநந்தமும் தடையற்றிருப்பதால் தீபாவளி என்று ஒரே தாரையாயிருப்பது போல் கூறப்பட்டது. இந்நிலை அடைந்தவர்க்கன்றே தீபாவளிப் பண்டிகை சித்தித்தது. நம்முடைய தீபாளிப் பண்டிகை இவ்வாறே ஆக நாம் இறை அருளை வேண்டி நிற்போம்।





