Practical Guides

Varahi by amrtananda yogi – Tamil

ஸ்ரீகுருப்யோ நம:

ஸ்ரீகணேஶாய நம:

லலிதைவேதம் ஸர்வம் லலிதைவேதம் ஸர்வம்

ஶ்ரீஸ்வப்னவாராஹீ

ஶ்ரீலகுவாராஹீ

ஶ்ரீஸ்வப்னவாராஹீ

ஶ்ரீதிரஸ்கரிணீ

ஶ்ரீகிரி சக்ரம்
மஹாசியாமளையின் வழிபாட்டில் வெற்றி பெற்றவன், மஹா வாராகியின் வழிபாட்டுக்குத் தகுதியுடையவன் ஆகிறான். மஹா கணபதியின் வழிபாட்டினால் உயர்ந்த உள்ளப் பண்பாடும், அதனால் புத்தியில் வாழ்வதற்கு வேண்டிய தகுதியும் வழிபடுவோர்க்கு ஏற்படும் பயன் என அறிந்தோம். அங்ஙனமே மகாசியாமளையின் வழிபாட்டி னால் புத்தியில் வாழுதல் என்ற புத்தியோகம் வழிபடுவோனுக்குக் கிட்டும் பயன் என்றும் அறிந்தோம். புத்தியோக வாழ்வுடையவன் மனத்தின் எவ்வகையான விருத்திகளிலும் (Mental modifications) அவஸ்தைகளிலும் தோயாது வாழும் பெருமையுடையவன் ஆகிறான். மனத்தின் கண் மாறி மாறி அவ்வப்பொழுது தோன்றும் ஸாத்விக, ராஜஸ, தாமஸ விருத்திகளில் தோயாததோடு, மனத்தின் ஜாக்ரத்-ஸ்வப்னம்-ஸுஷுப்தி (நனவு- கனவு-தூக்கம்) என்ற நிலைகளையும் பற்றுறாறு வாழ்வதே புத்தியோகம் ஆகும். அம்மூவகை நிலைகளையும் விளக்கும் ஒளியான (பா4ஸ்க சைதன்யம்) ஆத்ம சைதன்யத்தின் கண்வாழும் வாழ்வே, உண்மையான புத்தியோகம் ஆகும். புத்தியோகத்தில் பிறழ்ச்சி இன்றி, இயல்பாக (spontaneously) வேறூன்றியவன் உலகில் காணப்படும் இயங்கு-நிலைத்திணைப் பொருள்கள் யாவற்றினும், உயிருள்ள-உயிரற்ற பொருள்கள் யாவற்றினும், பல மணிகளூடும் சென்று அம்மணிகளை ஒரு மாலையாக தாங்கும் சரடு போல, தனது ஆத்மஸ்வரூபமே அதிகரண-சைதன்யமாக (Substratum truth) விளங்குவதையும் நிச்சயமாய் உணர்கிறான்.

புத்தியோக வாழ்வு மகாசியாமளையின் வழிபாட்டினால் ஒருவனுக்கு கிட்டும் என்றால், அந்த புத்தி-யோக வாழ்வுதான் யோக சாஸ்த்ரங்களில் ஆந்தரானுவித்த-ஸமாதி अन्तरानुविद्धसमाधिः என்று கூறப்படுகிறது. புத்தியோக வாழ்வில் வெற்றி பெற்றவனுக்கு அடுத்த படியாக மஹாவாராஹியின் உபாசனத்தினால் கிட்டும் பயன், காணப்படும் ஸகல நாம ரூப ப்ரபஞ்சத்திற்கும் அடிப்படையுண்மையாக விளங்குவது தனது ஆத்ம சைதன்யமே என்ற நிச்சய ஞானம் திருடமாய் பிறப்பதே. இந்த நிச்சய ஞானமே யோக சாஸ்த்ரங்களில் பாஹ்யானுவித்த ஸமாதி बाह्यानुविद्धसमाधिः எனப்படுகிறது. பாஹ்யானுவித்த-ஸமாதிக்கு அடிக்கல் போல் உள்ளது ஆந்த்ரானுவித்த-ஸமாதி. ஆகவே மஹாவாராஹி வழிபாட்டுக்கு அடிக்கல்லாக இருப்பது மஹாசியாமளா உபாசனத்தில் ஒருவனுக்கு கிட்டும் வெற்றியே ஆகும். மேலும் புத்தியோக வாழ்வு என்ற ஆந்த்ரானுவித்த-ஸமாதி கூடியவனுக்கு வெகு வெகு எளிதில் பாஹ்யானுவித்த-ஸமாதியில் வெற்றி கிட்டிவிடுகிறது. ஆந்த்ரானுவித்த-ஸமாதியில் வெற்றி பெற்றவனுக்கு அடுத்து உடனேயே பாஹ்யானுவித்த-ஸமாதியும் அனாயாசமாகவே கிட்டிவிடுகிறது என்பது மிகையாகாது, ஆக மஹாசியாமளா உபாசனத்தின் முக்கியத் தன்மையும், மஹா சியாமளைக்கு அடுத்தபடி அமையும் மஹா வாராஹி உபாசனத்தின் அழகும் அனுபவிகளுக்குக் கழி பேருவகை யளிக்கும் உண்மையன்றோ! மஹாசியாமளா-மஹாவாராஹீ உபாசனங்க ளின் இந்த நுட்பம் கருதியேயன்றோ மஹாத்ரிபுரசுந்தரீ பராபட்டாரிகைக்கு ப்ரதான மந்திரி ஸ்தானத்தில் மந்த்ரிணீ (Prime Minister) என்ற சிறப்பான பெயருடன் மஹாசியாமளையும் நால்-வகை படைகளுக்கும் தலைவி (சதுரங்க சேனாநயிகா) என்ற ஸ்தானத்தில் தண்டிணீ (Commender -In -Chief) என்ற சிறப்பான பெயருடன் மஹாவாராஹியும் தேவி நூல்களில் அழைக்கப் படுகின்றனர். ஆதி சங்கரபகவத்பாதர் இயற்றிய மனீஷா பஞ்சகம் என்ற சிறு நூலில் முதல் ச்லோகத்தில் முதலிரண்டு அடிகளில் மஹாசியாமளையின் தத்துவமும், மஹாவாராஹியின் தத்துவமும் அத்வைத சாஸ்திரத்தை பின்பற்றிய நிலையில் குறிப்பிடப்பட்டுள்ள தையும் உற்று நோக்குக.

जाग्रत्-स्वप्न-सुषुप्तिषु स्फुटतरा या संवित्-उज्जृम्भते
या पिपीलिकान्त-तनुषु प्रोता जगत्-साक्षिणी
ஜாக்³ரத்-ஸ்வப்ன-ஸுஷுப்திஷு ஸ்பு²டதரா யா ஸம்வித்-உஜ்ஜ்ருʼம்ப⁴தே
யா பிபீலிகாந்த-தனுஷு ப்ரோதா ஜக³த்-ஸாக்ஷிணீ

மஹாகணபதி உபாஸனத்தில் ஒருவனுக்கு ஏற்படும் வெற்றியை ஸாத்விக ஸம்பத்தின் வெற்றி என்று கூறுவோமானால் மஹா சியாமளை வழிபாட்டினால் ஒருவனுக்கு ஏற்படும் வெற்றி புத்தியோக வாழ்வு என்போமானால், மஹாவாராஹியின் வழிபாட்டில் ஒருவனு டையயும் வெற்றி விச்வாத்மக-பிரஜ்ஞை (Cosmic Consciousness) என்று கூறத் தக்கதாகும்; மஹா வாராஹியின் வழிபாட்டில் வெற்றி பெற்றவன் தனி யுணர்வு (Individual Consciousness) கழன்றவனாய், விச்வ-மானவன் என்ற பெருமையுறுகிறான் என்று அறிதல் வேண்டும் அத்தகையவன் தனி யுடல் தாங்கியவனாக மற்றவர் களுக்குப் புலப்பட்டபோதிலும், உடற்சுமையாம் சிறையினுள் தத்தளித்துக் கொண்டிருக்கும் சிற்றுணர்வு வாழ்வினனாக இல்லாமல், உலகளவு விரித்த வாலறிவன் என்ற பெருமையை உற்றவனாம். மஹாசியாமளையின் வழிபாட்டில் வெற்றி கண்டவன் தனது சித்தமறியாதபடி, தனது சித்தத்தில் நின்று பொலியும், தனது சித்தத்தின் சிறுமைகளால் பற்றுறாது ஒளிரும் ஆத்ம-சைதன்ய அனுபவமுடையவனாகிறான் எனில், மஹாவாராஹீ உபாசனையில் வெற்றி கண்டவன் விச்வரூப தர்சனம் என்ற யோகத்தில் வெற்றி கண்டவனாகிறான் அதாவது உலகம் பூராவுமே இப்பொழுது அவனுக்கு உடல் போல் அமைகிறது.

இத்துணைச் சிறப்புடைய மஹாவாராஹீ உபாஸனையை மந்த்ரம்- யந்த்ரம்-மூர்த்தி முதலிய விரிவுகளுடன் இனிக் காண்போம். மஹா வாராஹியின் மந்த்ரம் நூற்றுப்பதின்மூன்று (113) எழுத்துக்கள் கொண்டது.

ऐं ग्लौं ऐं नमो भगवति वार्तालि वार्तालि वाराहि वाराहि वराहमुखि वराहमुखि अन्धे अन्धिनि नमः रुन्धे रुन्धिनि नमः जम्भे जम्भिनि नमः मोहे मोहिनि नमः स्तम्भे स्तम्भिनि नमः सर्वदुष्ट-प्रदुष्टानां सर्वेषां सर्व-वाक्-चित्त चक्षु-र्मुख-गति-जिह्वा स्तम्भनं कुरु कुरु शीघ्रं वश्यं ऐं ग्लौं ऐं ठः ठः ठः ठः हुं अस्त्राय फट् ।।
ஐம் க்³லௌம் ஐம் நமோ ப⁴க³வதி வார்தாலி வார்தாலி வாராஹி வாராஹி வராஹமுகி² வராஹமுகி² அந்தே⁴ அந்தி⁴னி நம꞉ ருந்தே⁴ ருந்தி⁴னி நம꞉ ஜம்பே⁴ ஜம்பி⁴னி நம꞉ மோஹே மோஹினி நம꞉ ஸ்தம்பே⁴ ஸ்தம்பி⁴னி நம꞉ ஸர்வது³ஷ்ட-ப்ரது³ஷ்டானாம் ஸர்வேஷாம் ஸர்வ-வாக்-சித்த சக்ஷு-ர்முக²-க³தி-ஜிஹ்வா ஸ்தம்ப⁴னம் குரு குரு ஶீக்⁴ரம் வஶ்யம் ஐம் க்³லௌம் ஐம் ட²꞉ ட²꞉ ட²꞉ ட²꞉ ஹும் அஸ்த்ராய ப²ட் ..
இம்மந்திரத்தில் ஒருசில எழுத்துக்கள் கூட்டியோ; குறைத்தோ பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆயினும் மேற்குறிப்பிட்ட வடிவில் 113 எழுத்துக்களில் அமைந்த வடிவமே மஹாவாராஹியின் சிறந்த வடிவாகும் என்பதைக் கூர்ந்து அறியவும். அடியேனுக்கு குருதேவர் அவர்களால் உபதேசிக்கப்பட்ட வடிவமும், பல நீண்ட கால ஆராய்ச்சிகளின் மூலம் முடிவு செய்யப்பட்டதும் மேற் குறிப்பிட்ட வடிவமே ஆகும். அந்தந்த தேவதைகளுக்குரிய மந்த்ர வழிபாட்டில் அததற்குரிய பல ந்யாஸங்கள் உள்ளன. ஸப்தார்ண-மந்த்ரபஞ்சக- ந்யாஸம், அஷ்ட-கண்ட-ந்யாஸம், வாராஹீ-மாத்ருகாகலா-ந்யாஸம், தத்வாஷ்டக-ந்யாஸம் முதலானவற்றை முறைப்படி குருமுகமாகத் தெரிந்து கொள்ளல் வேண்டும். மஹாவாராஹியின் ஸ்வரூபத்தில் எட்டு அவந்த்ர பேதங்கள் (Subsidiary Aspects) உள்ளன. அவையாவன: வார்த்தாலீ, வாராஹீ, வராஹமுகீ, அந்தினீ, ருந்தினீ, ஜம்பினீ, மோஹினீ, ஸ்தம்பினீ. இந்த எட்டு வடிவங்களும் மஹாவாராஹீ மந்திரத்தில் அடங்கியுள்ளன.

மஹாவாராஹீ மந்த்ரமும், அங்ஙனமே முன் கூறப்பட்ட மஹாசியமாளா மந்த்ரமும் தச-மஹாவித்யைகள் என்ற பிரிவில் அடங்கும் வண்ணம் தந்த்ர சாஸ்த்ரங்களில் பேசப்படுகின்றன.

தச-மஹாவித்யைகளாவன: –

(1). காளீ (2). தாரா (3). ஷோடசீ மஹாவித்யை (4). புவனேச்வரீ (5). பைரவீ (6). சின்னமஸ்தா (7). தூமாவதீ (8). பகளா (9). சித்தவித்யையான மாதங்கீ (10). கமலா.

தச-மஹாவித்யைகளில் ஒவ்வொன்றும் பல வேறுபாடுகளுடன் தந்த்ர சாஸ்திரங்களில் விரிவாக்க கூறப்பட்டுள்ளன.

(1). காளீ மந்த்ரத்தில் தக்ஷிணகாளிகா முதலிய மந்த்ரங்கள் அடங்கும்.

(2) தாரா மந்த்ரம் பௌத்தர்களால் முக்கியமாக வழிபடப்படும் மந்த்ரம். இதிலும் பல வேறுபாடுகள் உள்ளன.

(3) மஹாவித்யா ஷோடசியில், வாக்-ஆதி ஷோடசீ, கமலாதி ஷோடசீ பராதி ஷோடசீ, தாராதி ஷோடசீ, மாயாதி ஷோடசீ போன்ற ப்ரபேதங்கள் உள்ளன.  பஞ்சதசீ மந்த்ரத்தின் பல வேறுபாடுகளும் இதன் கண்ணேயே அடங்கும். ஷோடசீ மஹாவித்யை ஸுந்தரீ என்றும் சிலரால் கூறப்படும்.

(4) புவனேச்வரீ மந்திரத்தில், பிரணவஸம்புடிதமானதும், லக்ஷ்மி-பீஜ ஸம்புடிதமானதும், வாக்பவ-பீஜ ஸம்புடிதமானதும், ஆன முக்ய ப்ரபேதங்கள் உள்ளன. ஒரு மந்திரத்திற்கு இரு புறமும் வேறு பீஜங்களால் அடைப்புத் தருவது ஸம்புடீகரண மெனப்படும். புவனேச்வரீ தனித்த ஏகாக்ஷர பீஜமாகவும் வழிபடப்படும். வாக்பவ- பீஜத்தை முதலிலும், பின்னர் லக்ஷ்மீ-பீஜத்தையும் கொண்டு ஸம்புடீகரணம் செய்யப்பட்ட புவனேச்வரீ ஸர்வசௌபாக்கி யங்களையும் அருளுவதாகும். இருபுறமும் காமராஜ பீஜத்தினால் ஸம்புடீகரணம் செய்யப்பட்ட புவனேச்வரியும் அங்ஙனமே உபாஸகனிடம் ஜகன்மோஹன-ஸித்தியை அருளும். புவனேச்வரியின் ப்ரபேதங்கள் எண்ணிலடங்கா.

(5) பைரவீ மந்த்ரம் பாலா முதலான பல வடிவங்களுடையது.பாலைக்கு மட்டுமே முப்பத்திரண்டு வடிவங்கள் உள்ளன என்றால், பைரவியின் வடிவங்களும் எண்ணிலடங்கா என அறிதல் வேண்டும்.

(6) சின்னமஸ்தா: ப்ரசண்ட சண்டிகை, ரேணுகா, இந்த்ராணீ போன்ற பல வடிவங்களுடையதாகும்.

(7) தூமாவதீ; க்ஷுத்ர உபாசனையில் கொள்ளப்படுவதாக பாமாரர்களால் கருதப்படுகிறது. ஆனால் சித்சக்தி-அஹம் ப்ரஹ்மாஸ்மி வடிவாக ஆன்றோர்களால் வழிபடப்படுவது; பல வடிவங்களில் கொண்டது. கர்மடீ, மர்கடி, ஆர்தரபடீ முதலிய பேதங்கள் இதன் கண் அடங்கும்.

(8) பகளா; ஸ்வப்னவாராஹீ, லகுவார்த்தாலீ, திரஸ்கரிணீ, மஹாவாராஹீ அஷ்டவாராஹிகள் ஆகியவை இதன் கண் அடங்கும்.

(9) ஸித்தவித்யையான மாதங்கி; ஸித்தவித்யை என்ற அடைமொழி யினாலேயே இம்மந்திரத்தின் பெருமை அறியத்தக்கதாம். ஸுமுகீ சியாமளா- லகு மாதங்கீ.

(10) கமலா; லக்ஷ்மீ பீஜம், மஹாலக்ஷ்மீ முதலிய பல வடிவங்கள் கொண்ட வேதத்தில் உள்ள ஸ்ரீஸூக்தமும் இதன் பாற்படும்.

தச-மஹாவித்யைகளுக்கு நேரான (Corresponding) வேதமந்திரங்களும் உண்டு.

மஹாவாராஹியைப் பற்றி பேசவந்த இடத்தில தச-மஹாவித்யை களைப் பற்றிச் சொல்லுவானேன் என்று வாசகர்கள் ஐயுறலாம். தச- மஹா வித்யைகளுக்குக் கூறப்பட்டுள்ள தனிச் சிறப்புகள் அவற்றுள் அடஙகிய மஹாவாராஹிக்கும் பொருந்தும் என்று அறிவிப்பதற்காகவே இங்கு நாம் தச-மஹாவித்யைகளைப் பற்றிக் கூறினோம்.

வீர-தந்த்ரத்தில் தச-மஹாவித்யைகளின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. ஒரு மந்த்ரம் ஒருவனுக்கு பொருந்துமா? பொருந்தாதா? என்பது முதலிய சத்ரு- மித்ர ஆராய்ச்சிகளை தச-மஹாவித்யைகள் விஷயத்தில் கவனிக்க வேண்டியதில்லை. தச-மஹாவித்யைகள் அதிகப் ப்ரயாசை இன்றியே எளிதில் சித்திக்கின்றன; உடையின் விஷயத்திலோ, ஆஸன நியமத்திலோ, மற்ற ஆசார நியமங்களிலோ யாதொரு விதமான சங்கையும், பயமும் இன்றி தச-மஹாவித்யைகளில் ஈடுபட்டு வெற்றியடையலாம். ஆனால் இவ் விஷயத்தில் ஒருவனுடைய நிச்சய ஞானம் (Conviction) முக்ய காரணமாகிறது. ஐயப்பேயின் ஆக்ரமிப்பில் உள்ள மனப்பான்மையர்களுக்கு வீர-தந்த்ர-வசனங்கள் பயன்படுவதில்லை. வீரர்களுக்கு ஏற்பட்ட வழியில் கோழைகள் எங்ஙனம் போக இயலும்? வீரர்களை பற்றிய லக்ஷணத்தை மஹாஷோடசீ மந்த்ர ஆராய்ச்சிக் கட்டத்தில் அறிவோம்.

தச-மஹாவித்யைகளுக்குள் ஒன்றாக இருப்பதால் மஹாவாராஹீ மந்த்ரத்துக்கும் உரிய தனிப் பெருமைகளைச் சொல்லுவதற்காகவே இத்துணையும் எழுதியது.

ஆனால் தனது உபாசனா மார்க்கத்தில் தச-மஹாவித்யைகளுக்கு நேரிடர் தொடர்பு ஆயினும் அவை யாவும் மஹாத்ரிபுரசுந்தரி யின் ரச்மிகளைப் (கிரணங்களை) போல அறிதல் வேண்டும். தச- மஹாவித்யைகளைக் கணனம் செய்த வீரத-தந்த்ரமும். த்ரிபுரசுந்தரி பராபட்டாரிகையின் ஷோடசி மந்த்ரச் சிறப்பை “மஹாவித்யா” என்ற மொழி கொடுத்துக் குறிப்பிட்டுள்ளதையும் அறியவும்.

இனி நாம் மஹாவாராஹிக்கு வருவோம். இங்கும் ஜெபத்தின் எண்ணிக்கை லக்ஷம், தசாம்சமாக ஹோமம் முதலியவைகளைச் செய்ய வேண்டும் ஹோமத்தில் பலாசகுஸுமத்தைப் பலர் கொள்கின்றனர். ஆனால் தாபிஞ்சகுஸுமம் (பிரம்மாகிய) நீலோத்பலம் (குவளை) ஆகியவை இங்கு விசேஷமாகும். அந்தந்த உலகிய பயன்களைப் பெறுவதற்கு அந்தந்தப் பொருள் ஆஹூதிகளாக வழங்கப்பட வேண்டும் என்று அந்தப் பொருள்களை தக்ஷிணாமூர்த்தி ஸம்ஹிதை தெரிவிக்கிறது. ஆத்மீயத்துறையில் முன்னேற விரும்புபவர்களையே முக்கியமாக கருதி நாம் எழுதி வருகிறோம். உலகியல் நலன்களை பெற விரும்புவார்க்கும் அங்கங்கே ஒரு சில குறிப்புகளை மட்டும் சுட்டிக் கொண்டு போகிறோம். மஹாவாராஹியின் தர்பணத்தில் தனி விசேஷம் கொண்டு மைரேயம் என்ற ஒருவகையான சாராயத்துடன் எள்ளையும் செம்பருத்திபூக்களையும் சேர்த்துத் தர்ப்பணம் செய்வதால் மஹாவாராஹிக்கு விசேஷமான திருப்தியாகும். மஹாவாராஹி புஜையில் பூண்டு, வெங்காயம் போன்ற பொருள்களால் சித்தம் செய்யப்பட்ட ஆஹார வகைகள் நிவேதனத்திற்குச் சிறந்தவைகளாம் என்பது இவ்விடத்திலுள்ள ஒரு ரஹஸ்யமாகும்.

மஹாவாராஹியின் யந்த்ரம் வெகு மனோஹரமானதாகும். பிந்துஸ்தானம்-முக்கோணம்-ஐங்கோணம்-அறுகோணம்-எட்டிதழ்-நூற்றிதழ்-ஆயிரமிதழ்-பூபுரம் என்று எட்டு பகுதிகள் கொண்டது மஹாவாராஹி யந்த்ரம். நூறு இதழ்களிலும், ஆயிரம் இதழ்களிலும் தனித்தனி பூஜைகள் உண்டு. ஆயிரம் இதழ்களையும் எட்டுப் பகுதிகளாக செய்து கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் 125 தளங்கள் இருப்பதாகப் பாவனை செய்து கொண்டு பூஜையைச் சுருக்குபவர்களும் உண்டு. அப்படிச் சுருக்கக் கொள்ளுமாறு பூஜா பத்ததிகளை வருணிக்கும் அச்சிட்ட நூல்களும் உள்ளன. ஆனால் இந்தச் சுருக்க பூஜை உண்மையான மஹாவாராஹி பூஜையாகாது.

மஹாவாராஹியைப் பூஜை செய்ய வேண்டிய உண்மையான சரியான முறை இன்றும் அச்சு வாஹனம் ஏறவில்லை. சுருக்க பூஜை சோம்பேறிகளின் வழி. சோம்பேறிகள் தந்த்ரசாஸ்த்ர வழிகளுக்கு ஏற்பட்டவர்கள் அல்லர். சலியாத உழைப்பும் தளராத உள்ளத் திண்மையும் உள்ளவனே தந்த்ர சாஸ்த்ரங்க ளுக்கு தகுதியாவான். ஆயிரவிதழ்த் தாமரையில், ஆயிரம் இதழ்களிலும் மஹாவாராஹியின் ஸஹஸ்ர-நாமத்துள்ள நாமங்களால் முறைப்படி பூஜை செய்தல் வேண்டும்.

மற்ற தேவதைகளின் பூஜையில் ஸஹஸ்ரநாம அர்ச்சனைச் செய்யவும் கூடும்.  ஏனென்னில் அந்த்த தேவதைகளின் ஆவரண பூஜைக்குப் புறத்தே யுள்ளது ஸஹஸ்ரநாம அர்ச்சனை.  ஆனால் மஹாவாராஹியின் ஆவரண பூஜையிலேயே ஸஹஸ்ரநாம பூஜை இடம் பெற்றிருக்கிறது என்று அறிய வேண்டும். எனவே ஆயிரம் நாமங்களையும் பீஜாக்ஷரங்கள் கூட்டி முறைப்படி தர்ப்பணம் செய்வதே உண்மையான வாராஹி ஆவரண பூஜையாகும். உலகியலில் நாட்டுத்தலைவர்களாகப் போலியவோ, அரசியலில் உயர் இடங்களில் அலுவலைப் பெறுவதற்கோ வாராஹி பூஜை இஷ்ட பூர்த்தியை அருளும் என்பர் ஆன்றோர்.  உலகியல் நலன்களை பெற விரும்பும் பொழுது கிரியா கலாபங்களில் எல்லா நியமங்களையும் பின்பற்ற வேண்டும்.  

வாராஹி ஸ்வரூபம் ப்ராஹ்மி முதலான எட்டு-மாதாக்களின் (அஷ்டமாதர:) வரிசையில் இடம் பெற்றிருப்பதைக் கவனிக்கவும்.  எட்டுத் தாய்மார்கள் (1) ப்ராஹ்மீ) (2) மாஹேச்வரீ (3) கௌமாரீ (4) வைஷ்ணவீ (5) வாராஹீ (6) மாஹேந்த்ரீ (7) சாமுண்டா (8) மஹாலக்ஷ்மீ.  ஆனால் மஹாவாராஹியின் வடிவம் அஷ்ட மாதாக்களுள் ஒன்று அல்ல.   அஷ்ட மாதாக்களுள்   அடங்கியது லகு-வாராஹி யின் வடிவம்.   லகுவாராஹியின் மந்த்ரம் பதினேழு எழுத்துக்கள் கொண்டது.  உன்மத்தபைரவி என்றும் அவளுக்குப் பெயர் உண்டு.  லகுவார்த்தலியின் ஸ்தூலரூபம் வாராஹி முகங்கொண்ட தாயினும், நான்கு புஜங்களையே கொண்டது.  மேலிரண்டு புஜங்கள் உலக்கையும், கலப்பையும் ஆயுதங்கள்.  கீழிரண்டு புஜங்கள் அபய, வரதமுத்ரை உடையவைகள். மஹாவாராஹீ வடிவத்தில் புஜங்கள் எட்டு. இந்த வேற்றுமையை அறியவும்.   ஆக மஹாவாராஹீ அஷ்ட மாதாக்களுக்கு வேறுபட்ட உன்னதி வாய்ந்த தேவதையாகும். ஸிம்ஹாஸனேச்வரியான மஹாத்ரிபுரசுந்தரி பரா பட்டாரிக்கையின் பக்கத்தில் சதுரங்க-சேனா-நாயகியாக உள்ளவள் மஹாவாராஹீ என்று ஏற்கனவே கூறினோம். அஷ்ட மாதாக்கள் அம்பிகையின் பணிப் பெண்களாக உள்ள தேவதைகளே.

மஹாவாராஹிக்கும் அங்க-உபாங்க-ப்ரத்யங்க-தேவதைகள் உண்டு. அங்க தேவதை லகுவாராஹீ, உபாங்கதேவதை ஸ்வப்னவாராஹீ, ப்ரத்யங்க தேவதை திரஸ்கரிணீ.

மஹாசியாமளையை அவளது அங்க-உபாங்க-ப்ரத்யங்க-தேவதைகளான லகுசியாமளா-வாக்வாதிநீ-நகுலீ ஆகிய தேவதைகளுடன் அவளுக்குரிய பாதுகா மந்த்ரத்தோடு குண்டலிநீ உபாசனா மார்க்கம் என்ற லய-யோக வழியில் ஹ்ருதய சக்ரம் என்ற அனாஹத சக்ரத்தில் தியானிக்க வேண்டும்.
(குறிப்பு: பாதுகா மந்த்ரம், குண்டலிநீ உபாசனை ஆகியவற்றைப் பற்றிய விரிவெல்லாம் பின்னர் வரும். அந்தந்த தேவதைக்குரிய தனித்தனி பாதுகா மந்த்ரம் உண்டு என அறியவும்)

மஹாவாராஹியை அவளது அங்க, உபாங்க, ப்ரத்யங்க தேவதைகளான லகுவார்த்தாலீ – ஸ்வப்னவாராஹீ – திரஸ்கரிணீ ஆகிய தேவதைகளுடன் அவளுக்குரிய பாதுகா மந்த்ரத்தோடு குண்டலிநீ உபாசனா மார்க்கத்தில் ஆஜ்ஞா சக்ரத்தில் தியானிக்க வேண்டும்.

குருபாதுகா மந்த்ரங்களுள் தலைசிறந்தது மஹாபாதுகா மந்த்ரம். அதற்க்கு மேம்பட்ட மந்த்ரமே உலகில் கிடையாது. மஹா பாதுகையிலும் லகு-மஹா பாதுகை, மஹா-மஹாபாதுகை என்று இரு வடிவங்கள் உண்டு. இவ்விரு வடிவங்களிலும் மஹாவாராஹியின் இரண்டு பீஜங்கள் தொடக்கத்திலும் இறுதியிலும் இருப்பதைக் கவனிக்கும் பொழுது மஹாவாராஹியின் சிறப்பு தெரியலாகும். மேலும், மஹா-மஹாபாதுகையில் மஹாவாராஹியின் மந்த்ரம் முழுதுமே இடையில் வருகிறது. ஆக, மஹா-மஹாபாதுகையில் தொடக்கம், இடை, இறுதி என்ற மூவிடங்களிலும் மஹாவாராஹீ இடம் பெற்றிருக்கிறது எனில், மஹாவாராஹியின் பெருமையை என்னென்போம். மஹாபாதுகையைத் தவிர அதற்குக் கீழான வேறு எந்தப் பாதுகா மந்த்ரத்திலும் மஹாவாராஹிக்குத் தனியாக உள்ள பாதுகா மந்த்ரத்தைத் தவிர-மஹாவாராஹீ பீஜங்கள் இடம்-பெறாததாலும், மஹாவாராஹியின் அருமையை அறியலாகும்.

மஹாவாராஹியின் நீண்ட உபாசனா மார்க்கங்களில் இறங்க முடியாதவர்கள் அவளுக்குரியனவாக வருணிக்கப்பட்டுள்ள பன்னிரண்டு நாமங்களைப் பக்தியுடன் ஸ்மரித்தாலே போதுமானது. அப்பன்னிரண்டு பெயர்கள்: –

1.पञ्चमी
2.दण्डनाथा
3.सङ्केता
4.समयेश्वरी
5.समयसङ्केता
6.वाराही
7.पोत्रिणी
8.शिवा
9.वार्ताळी
10.महासेना
11.आज्ञाचक्रेश्वरी
12.अरिघ्नी

 1. பஞ்சமீ
 2. த³ண்ட³நாதா²
 3. ஸங்கேதா
 4. ஸமயேஶ்வரீ
 5. ஸமயஸங்கேதா
 6. வாராஹீ
 7. போத்ரிணீ
 8. ஶிவா
 9. வார்தாளீ
 10. மஹாஸேனா
 11. ஆஜ்ஞாசக்ரேஶ்வரீ
 12. அரிக்⁴னீ

மஹாவாராஹியின் நாமங்களுள் பஞ்சமி என்பது வெகு வெகு விசேஷமானது. ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதானம் அனுக்ரஹம் என்ற பஞ்சக்ருத்யங்களுள் ஐந்தாவது கிருத்யமான அனுக்ரஹத்தைப் புரியும் ஸதாசிவர் என்ற வடிவை உடையவர், ஆத்மவித்யையை அருளும் ஆசார்ய ரூபமே ஆகும். ஸதாசிவனிடம் உள்ள அனுக்ரஹ சக்தியே மஹாவாராஹீ தத்வம். சீடனிடம் உள்ள அநாதி அவித்யை என்ற பேயை ஓட்டும் ஸதாசிவ மூர்த்தமாம் குருவின் கருணாரூபமே மஹாவாராஹீ தத்வம். ப்ரம்மாதி ஐவருள், ஐந்தாமவரான ஸதாசிவ குருவின் கருணை வடிவினளாக இருப்பதால் மஹாவாராஹிக்கு பஞ்சமி என்று பெயர். வேறு நுட்பமான பொருள்களையும் குருமுகமாக அறியவும்.

பண்டாஸுரனை வதம் செய்வாள் வேண்டி மஹாத்ரிபுரசுந்தரீ நால்வகை படைகளுடன் பெரும் போர் செய்தபோது, மஹாவாராஹீ நால்வகை படைகளுக்கும் தலைமை தாங்கியதோடு மட்டுமல்லாமல், அப்பெரும் போரில் விசுக்ரன் என்பவனது உயிரை கவர்ந்தாள் என்ற லலிதோபாக்யானக் கதாபாகமும் இங்கு உற்று நோக்கத் தக்கதாகும். மஹாவாராஹீ அமர்ந்த ரதத்திற்கு கிரிசக்ர ரதம் என்று பெயர். அவளது யந்த்ரம் கிரியந்திரம் எனப்படும். (கிரி=வராஹம்)

வாராஹி வழிபாடு அதிபாமரர்களிடையிலும் பரவியுள்ளது. தமிழில் வாராஹீ மாலை என்ற துதிநூல் ப்ரஸித்தமானது. இந்நூல் இலக்கிய சிறப்புடையது அன்று ஆயினும், கந்தர்சஷ்டி கவசத்தைப்போல், பாமர பக்த்தர்களிடம் அதிகமாக வழக்கிலுள்ளது. வீராஸமும் ரௌத்ராஸமும் பொலிவதாகும். வாராஹீ உபாசனை உக்ர-நரசிம்ம உபாஸனையைப் போல், பயங்கரமானது என்று பாமரரிடை அபிப்பிராயம் உள்ளது. எந்த தேவதையின் வழிபாடும் வழி படுவோனது உள்ளப்பான்மைக்கிணங்கக் கொள்ளப்படுகிறது. ஸ்ரீவித்யா ஸம்ப்ரதாயத்தில் மஹாவாராஹியின் இடம் மிகமிக உயரிய பொருள் கொண்டதாகும் என்பதை ஏற்கனவே அறிந்தோம்.

மஹாத்ரிபுரசுந்தரியின் சிம்மாசனத்திற்குக் கீழ் ஐந்து படி நிலைகளில் சுற்றிலும் சதுரமாக அமைந்துள்ள பஞ்ச-பஞ்சகப்-பீடத்துல் மேல் ஐந்தாவது படி நிலையில் ஐந்தாவது தேவதையாக மஹாவாராஹீ பஞ்ச-ரத்நாம்பா க்களுள் இருப்பதையும் கவனிக்க. மஹாவாராஹியின் ஸ்தானம் மஹா த்ரிபுரசுந்தரிக்கு அடுத்துப் பக்கத்திலுள்ளது (next only to Tripurasundari). முப்பத்தேழு மந்த்ரங்கள் அடங்கிய ரச்மிமாலா மந்த்ரத்தில் மஹாபாதுகைக்கு (37-வதுக்கு) முன்னாள் 36-வது மந்த்ரமாக மஹா வாராஹீ உள்ளதும் கவனிக்கத் தக்கதாகும். ஆக மஹாவாராஹியை எதோ ஒரு பயங்கர தேவதையாகக் கருதுவது தகாது.

இனி மஹாவாராஹியின் ஸ்தூல வடிவத்தை ஆராய்வோம். வராஹ (பன்றி) வடிவமுள்ள முகத்தினளாய் எட்டு புஜங்களுடன் வீறு கொண்ட முகபாவத் துடன் அமர்ந்திருக்கிறாள். மஹாவாராஹி குவளைமலரின் நிறப் பொலிவு கொண்ட திருமேனியள். சிவந்த பட்டாடையினால் இடையில் கச்சம ணிந்தவள். உலக்கையையும் கலப்பையையும், கத்தியையும் கேடயத் தையும், சக்ரத்தையும் சங்கையும் ஏந்தியவளாய், வரத அபய முத்ரைகளைக் காட்டுகிறாள். வலது பாதத்தை மடித்து, இடது பாதத்தை கீழே தொங்கவிட்ட நிலையில் அமர்ந்திருக்கிறாள். ஒளியுமிழும் வீறு கொண்டு நிமிர்ந்து அமர்ந்தி ருக்கும் அவளது நகிற் சுமையழகு இடையழகுக்கு மேல் இறுமாப்புறுகிறது.
(हरिणी-वृत्त)
कुवलयनिभा कौशेयार्धोरुका मुकुटोज्ज्वला
शिरि-फलकिनि सद्भक्तेभ्यो वराभय-दायिनी
हलमुसलिनी शङ्खार्याढ्या कठोर-घन-स्तनी
कपिल-नयना मध्ये क्षामा भुजाष्टक-मण्डिता
जयति महती वाराही सा सदा मम हृदये।।
குவலயனிபா⁴ கௌஶேயார்தோ⁴ருகா முகுடோஜ்ஜ்வலா
ஶிரி-ப²லகினி ஸத்³ப⁴க்தேப்⁴யோ வராப⁴ய-தா³யினீ
ஹலமுஸலினீ ஶங்கா²ர்யாட்⁴யா கடோ²ர-க⁴ன-ஸ்தனீ
கபில-நயனா மத்⁴யே க்ஷாமா பு⁴ஜாஷ்டக-மண்டி³தா
ஜயதி மஹதீ வாராஹீ ஸா ஸதா³ மம ஹ்ருʼத³யே..
மஹாவாராஹியின் தியான சுலோகமே தனியழகு பெற்றது. ஹரிணீ என்ற விருத்தத்தில் அமைந்துள்ளது. பெயருக்குப் பொருத்தமாக உள்ளதைக் கொள்ளை கொள்ளும் சொல்லழகும் பொருளாழமும் நிறைந்தது. பொதுவாக விருத்தங்கள் நான்கு அடிகளையே கொண்டன. ஆனால் பஞ்சமீ என்ற மஹாவாராஹியின் இந்த தியான ஸ்லோகம் அனாதி காலமாகவே ஐந்து அடிகளுடன் விளங்குகிறது. பஞ்சமீ என்ற பெயருக்குப் பொருத்தமாக தியான சுலோகமும் உள்ளதுபோலும்! நாம- ரூப-ப்ரபஞ்ச உணர்வைத் தஹிப்பதுபோல் செந்நிற-ஒளி காந்துகிறது கண்களில், எட்டு புஜங்களுடன் கூடிய மஹாவாராஹி, தியானிப் பவனது உள்ளமாம் பீடத்தில் அவனது வாழ்வின் வெற்றியை விளங்குகிறாள். ஜீவபாவத்தில் இருப்பவனை சிவபாவ மடையும்படி செய்விக்க ஜீவ பாவம் என்ற அபராஹந்தைக்கும் (inferior, petty ego) சிவபாவத்திற்கு சற்றே முந்தியதான பராஹந்தைக்கும் (Superior ego, Comprehensive ego) இடையில் பாலம் போட்டது போல் விச்வாத்ம-அஹந்தா-ரூபிணியாகக் (Cosmic ego) செங்கோல் செலுத்துகிறாள். இடது மேல் திருக்கரத்தில் ஏந்தியுள்ள வலம்புரிச் சங்கின் ஒலியால் பக்தர்களில் அனாதி அவித்யையை ஓட்டி அஹம் ப்ரஹ்மாஸ்மி என்ற பரவித்யா-ஞானத்தை அருளுகிறாள். வலது மேற் கரத்தில் உள்ள சக்ரத்தினால் துஷ்டர்களை நியாகம சக்தியின் மூலம் சாடுகிறாள். பக்தர்களை ஸத்-தர்சனம் என்ற நிலையை அருளிக் காக்கிறாள். “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு” என்பதே ஸத்-தர்சனம்=ஸுதர்சனம். பரவித்யை விளங்கப்பெற்ற பக்தனிடம் மறுபடியும் நாமரூபம் உணர்வு அணுகாதபடி கேடயத்தின் மூலம் தடுக்கிறாள்; ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்ற மூவகை துன்பங்களும் பக்தர்களைத் தொடாதபடி அவைகளைக் கத்தியினால் வெட்டி விடுகிறாள். ஆத்யாத்மிகம்-தன்னைப் பற்றி வரும் ஜுரம், கவலை, போன்றது. ஆதிபௌதிகம்-பிரவுயிர்களைப் பற்றி வருகிறது. தேள், பூரான், பாம்பு, துஷ்ட ஜனங்கள் முதலானவர்களால் வருவது; ஆதிதைவிகம்-தைவத்தை அனுசரித்து வரும் இடி, புயல், பஞ்சம் போன்ற துன்பம், இம்மூவகைத் துன்பங்களையும் கத்தி வெட்டியழிக்கிறது. கலப்பை உழவுத் தொழிலுக்குப் பயன்படுவது; உலக்கை தானியங்களைக் குத்துவதற்குப் பயன்படுகிறது.

இங்கு உழவுத் தொழில் யாது? தானியங்களைக் குத்துவதுதான் என்ன? தானியங்கள் யாவை? க்ஷேத்ரம் என்ற சரீரமே பூமியாகும். கர்மங்க ளாலேயே செழிப்புடைய சரீரம் மேலும் கர்ம-விதைகளைத் தோற்று வித்தவண்ணம் இருக்கிறது. சரீரம் என்பதில் ஸ்தூல, ஸூக்ஷ்ம, சரீரங்கள் இரண்டும் அடங்கும். இந்தச் சரீரத்தில் நிகழும் கிரியைகள் யாவும், பழைய கர்மங்களின் வலியால் நிகழ்வன. அவைகளைத் தடுக்க முடியாது. ஆனால் நிகழும் கர்மங்களாகிற விதைகள் மேலும் புதிய கர்மங்களைத் தோற்றுவிப்பதற்கு வேண்டிய ஆற்றல் அற்றவையாகச் செய்யப்படலாம். உமி நீங்கிய நெல் மறுபடியும் முளைப்பதில்லை. ஆனால் உணவாகக் கொள்ளுவதற்கு மட்டும் தகுதியானது. அதுபோல் பழைய கர்மங்களின் செழிப்பால் விளங்கும் சரீரத்தின் கண் நிகழும் தொழில்கள் புதிய கர்மங்களுக்கு வித்தாக்காமல் உள்ளபடி, உலக்கையினால் குத்தி உமி நீக்கப்படுகிறது. அதாவது நிகழும் எந்தத் தொழிலிலும் கர்த்ருத்வபுத்தி (Notion of agency) இல்லாமல் செய்யப்படுகிறது. கர்த்ருத்வ-புத்தியை அழிப்பதே உலக்கை. மனோ-வாக்-காயங்களில் ஆத்மீயத்வ (தன்னுடையது என்ற) புத்தி வராமல் தகைப்பதே உலக்கை. கர்த்ருத்வ-புத்தி இன்றி செய்யப்படும் தொழில்களும், நினைக்கப் படும் நினைப்புகளும், கூறப்படும் சொற்களும் பந்தப்படுத்துவதில்லை. முக்கரணங்களின் தர்மங்களில் பற்றுறாது தொழில் புரிவதே சரீரமாகிய வயலை நல்ல முறையில் உழுவதாகும். அதாவது ஜீவன்-முக்தனது வாழ்க்கை யின் அழகு கலப்பையால் காட்டப்படுகிறது. மஹாவாராஹி தியானி ப்பவனது ஹ்ருதயத்தில் செங்கோல் நடத்துபவளாக, அவனை ஜீவன் முக்த ஸுகமுடையவனாக, புதிய கர்ம-விதைகளைத் தோற்றுவிக்காதவனாக, பழைய கர்மங்களின் விளைவுகளை அவைகளில் பற்றுறாமலேயே மஹாயோகத்தில் நின்று பெறுபவனாக ஆத்யாத்மிகம் முதலிய மூவகைத் துன்பங்களும் ஒழிந்தவனாக, நாம ரூப உணர்வில் மறுபடியும் தோயாதவனாக, எப்பொழுதும் எப்பொருளின் கண்ணும் மெய்ப்பொருளின் காட்சியுடையவனாக பரவித்யை என்ற சிவோஹம் நிஷ்டை உடையவனாகச் செய்கிறாள். மஹாவாராஹியின் ஆயுத தத்வங்களை இவ்வாறு கண்டு கொள்க.

வராஹ-முகம் ஏன் என்ற வினா எழுதுகிறது? வராஹம் என்ற சொல்லுக்குப் பன்றி என்பது பொருள். பன்றி அருவருக்கத்தக்க பிராணியாகத் தோன்றுகிறது. ஆனால் அது உலகினர்க்குச் செய்யும் பெரும் தன்மைகளைக் கருத்திப்பார்க்கையில். அதன் சிறப்புப் புலப்படலாம். மண்ணினுள்ள மலங்களையெல்லாம் விழுங்கி உலக்கைத் துப்புரவு அடையும்படி செய்கிறது பன்றி. வராகமுகமுடைய மஹாவாராஹியோ உபாசகனது இதயத்தில் உறைபவளாய், அவ்விடத்து அனாதிகாலமாய்க் குவிந்திருக்கும் கர்ம-மாயா-ஆவணங்கள் என்ற மும்மலங்களைக் கபளீகரம் செய்து விடுகிறாள். கர்ம-மாயா-மலங்கள் நீக்க, ஆணவமலம் அதனுடைய தனியுணர்வு (Individualised consciousness) நிலையைக் கடந்து விச்வாத்ம உணர்வு வடிவில் விளங்கும்பொழுது மஹாவாராஹி தத்வமும் மஹாத்ரிபுரஸுந்தரி தத்வமாக பரிணமிப்பதற்கு வேண்டிய நிலையில் உள்ளது. குறிப்பு: ஜம்புகேச்வர க்ஷேத்ரத்தில் கோவில் கொண்டு விளங்கும் அகிலாண்டேச்வரீ-மஹாவாராஹியின் பீடம் என்பது ரஹஸ்யம். அகிலாண்டேச்வரிக்கு அக்ஷரமாலிகா ஸ்தோத்ரம் ஒன்று உண்டு. இது சங்கரர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. மகாசியாமளைக்குக் குமரகுருபரர். இயற்றிய மீனாட்சியம்மன் பிள்ளை தமிழும், மஹாவாராஹிக்கு மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய அகிலாண்டநாயகியின் பிள்ளைத் தமிழும் சிறந்த துதி நூல்கள். மஹாவாராஹீ ஸ்வரூபம் வரையில் வந்துள்ள நாம், மஹாத்ரிபுர ஸுந்தரியாகவும் விளங்கும் பெம்மையை அடுத்த கட்டுரையிலிருந்து காண்போம்.

மஹாவாராஹியின் சில சிறப்பம்சங்கள் இத்துடன்
நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *