வாராஹி மாலையிலிருந்து போற்றி நாமங்கள்
முன்பு காமகலா விலாஸம் என்ற நூலை பயிலுங்கால், அதை ஓர் அஷ்டோத்திர ஶதமாக (நூற்றியெட்டு நாமங்கள்) மனதில் உதித்தாற் போல், இப்பாடல்களிலிருந்து நூற்றிப்பன்னிரண்டு போற்றி நாமங்களை வராகியம்மையின் மூல மந்த்ர அக்ஷர எண்ணிக்கையில் ஸமமாக- அகக்கண் முன் கண்டதையும் உங்களோடு பகிந்து கொள்கிறேன்.
- கோமள இருகுழைகளை அணிந்தவளே போற்றி
- புஷ்பராக தாள்களே போற்றி
- குருமணி நீல கண்களே போற்றி
- கோமேதக கைகளே போற்றி
- கூர்வயிர நகங்களே போற்றி
- முத்து திருநகையே போற்றி
- பவள கனிவாயே போற்றி
- சிறந்த வல்லியே போற்றி
- பச்சை மரகத நாமமே போற்றி
- மாணிக்க திருமேனியே போற்றி போற்றி
- ரீங்காரம் உள்ளிட்டஎந்திரத்தின் நடுவே ஆராதிக்க படுபவளே போற்றி
- அர்ச்சி பூஜித்து அடிபணிந்தால் வாராது இராளே போற்றி
- வாலையே போற்றி
- ஞான வாராகியே போற்றி
- மெய்சிறந்தார் மனம்காய மடைந்தால் மிக வெகுண்டு எழுபவளே போற்றி
- பணியார் சிரத்தை கை ஏந்திப் பல்லால் நிணம் நாறக் கடித்து உதறினாய் போற்றி
- பகைஞரை வச்சிரத் தந்த முகபணியால் குத்தி வாய் கடித்து பச்சிரத்தம் குடிப்பாளே வாராகியே போற்றி
- படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி போற்றி
- அன்பர் பகைஞர்தமை பேய்கள் இரும்பு தடிகொண்டு அடிக்க ஆணையிடுபவளே போற்றி
- அன்பர் பகைஞர் தமை குடல் கொண்டு தோள்மாலையிட்டு குருதிகுடிக்கும் வாராகியே போற்றி
- குலாவிமன்றில் பதினாலு உலகம் நடுங்கிடவே நடிக்கும் வாராகியே போற்றி
- நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவளே போற்றி
- நண்ணலரைக் கொடும்காளி உண்ணக் கொடுக்கும் வாராஹி போற்றி
- நண்ணலர் குருதிகள் கொப்பளித் திட்டிடும் மனோன்மணி போற்றி
- நண்ணலர் குருதி பாராக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும் நீலி போற்றி
- வேய் குலம் அன்னதிந்தோளாள் வாராஹி போற்றி
- தன் மெய்யன்பரை நோய்க் குலம் என்ன இடும்பு செய்வார் தலை நொய்த ழித்துப் பேய்க்குலம் உண்ணப் பலி கொள்பவளே போற்றி
- தன் மெய்யன்பரைநோய்க்குலம் என்ன இடும்பு செய்வார் பிணக்குடரை நாய்க் குலம் கௌவக் கொடுப்பாள் நாரணியே போற்றி
- வாழ்த்துவர்களை நாசப் படாமல் காப்பாளே போற்றி
- வாழ்த்துவர்களை நடுங்கப் படாமல் காப்பாளே போற்றி
- வாழ்த்துவர்களை நமன்கயிற்றால்வீசப் படாமல் காப்பாளே போற்றி
- வாழ்த்துவர்களை வினையும் படாமல் காப்பாளே போற்றி
- வாழ்த்துவர்களை இம்மேதினியோர் ஏசப் படாமல் காப்பாளே போற்றி
- வாழ்த்துவர்களை இழுக்கும் படாமல் காப்பாளே போற்றி
- வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹி போற்றி
- காலையில் வாலையே போற்றி
- உச்சியில் புவனையே போற்றி
- மாலையில் திரிபுரையே போற்றி
- வையகத்தில் எக் காலத்துமே அருளுபவளே போற்றி
- வாராஹிதன் ஆலயம் எய்தி அவள் பாதத்தை அன்பில் உன்ன அருள்வாய் போற்றி
- மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துபவளே போற்றி
- சிரித்துப் புரமெரித்தோன் வாம பாகத்துத் தேவி போற்றி
- எங்கள்கருத்திற் பயிலும் வாராஹி போற்றி
- பகைத்தவர்க்கே பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் கண் சிவந்த பஞ்சமி போற்றி
- செந்தமிழ்ப் பாவாணர் பாதமலர்ப் பூட்டிய பாக்களால் மகிழ்பவளே போற்றி
- புகழ்ந்து கூப்பிட்ட செவி சாய்ப்பவளே போற்றி
- அண்ட கோளத்தை ஊழிகாலத்தில் அழிப்பவளே போற்றி
- நிந்தை யாளர் தெரு எங்குமே தீப்பட செய்வபவளே போற்றி
- எங்கும் எரியக் கிரிகள் பொடிபடும்படி சூலத்தைப் போகவிட சிங்கத்தின் மீது வருவாள் வாராஹியே போற்றி
- எம்பகைஞர் அங்கம் பிளந்திடும்படி சூலத்தைப் போகவிட சிங்கத்தின் மீது வருவாள் சிவசக்தியே போற்றி
- விண்மன் கிழிந்திடும்படி சூலத்தைப் போகவிட சிங்கத்தின் மீது வருவாள் வாராஹியே போற்றி
- ஆர்த்தெழுந்து பொங்கும் கடல்கள் சுவறிடும்படி சூலத்தைப் போகவிட்டுச் வருவாள் சிவசக்தியே போற்றி
- சத்துருவைக் குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்ற சக்தியே போற்றி
- திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே நித்தம் நடித்து வரும் கவுரியே போற்றி
- என் நெஞ்சகத்தே மஹமாயியே போற்றி
- என் நெஞ்சகத்தே அம்மையே ஆயியே போற்றி
- என் நெஞ்சகத்தே வாராஹியே போற்றி
- நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்க்குணத்தியே போற்றி
- நஞ்சணி கண்டத்தியே போற்றி
- நாராயணியே போற்றி
- தனை நம்புபவர்களை வஞ்சனை பண்ணி மதியாத பேர் வாழ்நாளை உண்ணக் கொஞ்சி நடந்து வருவாள் வாராஹியே போற்றி
- குலதெய்வமே போற்றி
- மதுமாமிஸம் தின்பாள் என்று மாமறையோர் உதாஸினம் செய்திட அவர்கள் கதிர் வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தட விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹியே போற்றி
- மெய்த் தெய்வமே போற்றி
- ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்றபடுவாய் போற்றி
- அரியபச்சைமெய்யே போற்றி
- கருணை வழிந்தோடுகின்ற விழியே போற்றி
- கண்ணெதிரே மலர்க்கைகளில் பிரம்பு கபால சூலம் தரிப்பவளே போற்றி
- வையம் துதிக்கும் மலர்க்கொடியாம் வாராஹியே போற்றி
- வருந்துணை அன்னைவாராஹி என்று நிதமும் வாழ்த்தும் தகைமையைப் பூணுபவர் உடலை காப்பாவளே போற்றி
- நேமிப் படையாளை தலைவணங்குபவர்க்கு நெஞ்சும் வினையும் வேறாகாமல் காப்பவளே போற்றி
- நேமிப் படையாளை தலைவணங்காதவர் நெஞ்சத்தில் செந்நிறம் ஆன குருதி பொங்கச் சேறாக்கும் தன் குங்குமக் கொங்கையில் பூசும் திலகமுமாய் தரிப்பவளே போற்றி
- பாடகச் சீறடிப் பஞ்சமியே போற்றி
- அன்பர் பகைஞர்தமை ஓடவிட்டே கை உலக்கை கொண்டெற்றும் ஆடகக் கும்ப இணைக்கொங்கையாளே போற்றி
- உதிரம் எல்லாம் கோடகத் திட்டு வடித்தெருத் தூற்றிக் குடிக்கும் அம்பிகையே போற்றி
- தாமக் குழலே போற்றி
- குழையும் பொன் ஓலையும் தரிப்பவளே போற்றி
- தாமரைப் பூஞ்சேமக் கழலே போற்றி
- துதிக்க வந்தோர்க்கு ஜெகம் அதனில் வாமக்கரளகளத் தம்மை சிவசக்தியே போற்றி
- தீமைப் பவத்தைக் கெடுத்து ஆண்டு கொள்வாள் ஆதி வாராஹியே போற்றி
- தீவினை செய்பவரின் உடல் கூராக வாளுக்கு இரைஇடுவாள் ஆதி வாராஹியே போற்றி
- சீரார் கொன்றை வேணிஅரன் இணை சேர்க்கும் திரிபுரையே போற்றி
- அடலாழி உண்டு காரார் கருத்த வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவே போற்றி
- உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம் வலக்கை இடக்கையில் வைத்த வாராஹியே போற்றி
- மாற்றலர்கள் இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்கவல்ல ஒரு மெல்லியே போற்றி
- பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர் மேல்வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரைநெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்டு அஞ்சக் கரங்கொண்டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே போற்றி
- நினைப்பவர் தன் நெஞ்சம் அலைபட்டு அலையாமல் காக்கும் நேமிப் படையாளே போற்றி
- நினைப்பவர் உயிர் சோர அலகைக் கையால் கொலைபட்டு உடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித் தலை கெட்டு அவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாகாமல் காக்கும் நேமிப் படையாளே போற்றி
- சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே அந்திபகல் உன்னை அர்ச்சித்தபேரை அருள்வாய் வாராஹியே போற்றி
- அன்பர்களை அசிங்கியமாய் நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்புந்தி மகிழ்ந்து வருவாய் நற் பொற்கொடியே போற்றி
- பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் போன்று சிவசக்தி ரூபிணியே போற்றி
- பொருப்பைவென்ற மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் உடையவளே போற்றி
- சிவசக்திகளை வாழ்த்தும் இருப்புக்கடிய மனதிற் குடிகொள்பவளே போற்றி
- எதிர்த்தவரை நெருப்புக் குவாலெனக் கொல்வாய் வாராஹி போற்றி
- நிர்க்குணியே போற்றி
- தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்துநீறிட்டவர்க்கு வினைகளை அழிப்பாளே போற்றி
- நின் அடியவர்பால் மாறிட்டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இருகூறிட் டெறிய வருவாய் வாராஹியே போற்றி
- குல தெய்வமே போற்றி
- நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமானே போற்றி
- அரிஅயன் போற்றும் அபிராமியே போற்றி
- அடியார்க்கு முன்னே ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி எரியாய் எரித்து விடுவாள் தெய்வ வாராஹியே போற்றி
- நவ கோணத்திலே வீற்றிருப்பாளே போற்றி
- நம்மை வேண்டும் என்று கலி வந்து அணுகாமல் காத்திருப்பாளே போற்றி
- கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லளே போற்றி
- கண்கலக்கம் எங்கே என்று அங்குச-பாசம் கையில் கோத்திருப்பாளே போற்றி
- என்னை ஆளும் குலதெய்வமே போற்றி
- சிவஞான போதகியே போற்றி
- செங்கைக் கபாலியே போற்றி
- திகம்பரியே போற்றி
- நல்தவம் ஆரும் மெய்யன்பர்க்கு அ-கோரியே போற்றி
- மெய்யன்பர்க்கே இடர்சூழும் தரியலரை அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அதிகோரியே போற்றி
- இங்கு நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுரநாயகியே போற்றி போற்றி